

மாலையில் பள்ளி மைதானத்தில் கபடி போட்டி விறுவிறுப்பாகப் போனது. சோனைக்கருப்பு டீம் வெற்றி பெற்றது. ‘ஹேய்ய்ய்ய் நாங்கதான் ஜெயிச்சோம்'.
ஒரே கூச்சல்..
‘‘போடா சோன.. பான.. யான..
யான.. பான.. சோன..’’
என போட்டியில் தோற்ற எவனோ ஒருவன் ராகம் போட்டுப் பாட எல்லாரும் சிரித்தனர்.
சோனைக்குக் கோபம் வந்து அவனை அடிக்க ஓடினான். எல்லாரும் கிண்டல் பண்ணிக்கொண்டே ஓடி மறைந்தனர்.
கோபமாக தன் ஸ்கூல் பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் பையைத் தூக்கி எறிந்தான்.
‘‘உலகத்துல இல்லாத பேரு வைச்சிருக்கீங்க. வேற பேரே கிடைக்கலியா?’’ என கோபமாகக் கத்தினான் சோனை.
‘‘இப்ப என்னடா பிரச்சினை உனக்கு’’ என்றார் அம்மா.
‘‘ஸ்கூல்ல எம்பேரச் சொல்லி கிண்டல் பண்றாங்க.’’ என்றான் எரிச்சலாக.
‘‘டேய் எத்தன தடவ சொல்றது. உம்பேரு நம்ம குலசாமி பேருனு. கிண்டல் பண்றாங்கனா கண்டுக்காத. அதுக்கு பைய தூக்கி இப்படியா போடுவ? ’’ எனதிட்டியபடி வெளியே சென்றார் அம்மா.
சோனை கோபமாக ரப்பர் பந்தை எடுத்து சுவரில் எறிந்தான். பந்து பாத்திரத்தில் பட்டது. பாத்திரம் ‘டொம்' என சத்தத்துடன் கீழே விழுந்தது. அம்மாவிற்கு சத்தம் கேட்டிருக்குமோ! எனப் பதறி பாத்திரத்தை எடுத்து வைத்தான்.
‘‘எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பேரு வைச்சாங்க? எல்லா பசங்களும் கிண்டல் பண்றாங்க. ச்சே’’ என வருத்தப்பட்டான். தெரியாதவர்கள் யாரேனும்தன் பெயரைக் கேட்டால் ஏதாவது வாய்க்கு வந்த பெயரைச் சொல்வான்.
அடுத்த நாள்...
‘‘டேய் சோன.. வாடா கிணத்துக்கு குளிக்கப் போலாம்’’ என அழைத்த வாறே சேகர் வந்தான்.
துண்டை எடுத்துக்கொண்டு இருவரும் கிணற்றிற்குச் சென்றனர். ஆழமான கிணறு. ஏற்கெனவே இவனுடன் கூட படிக்கும் பிள்ளைகள் குளித்துக் கொண்டிருந்தனர்.
இவனைப் பார்த்ததும் கூட்டத்தில் இருந்த மணி,
‘‘சோன
உன் வயிறு பான
அதுக்குள்ள எத்தன பூன..’’
என கிண்டல் செய்து பாட ஆரம்பித்தான்.
உடனே மற்றவர்களும் சேர்ந்து பாட, சோனைக்கு வந்ததே கோபம்.
மணியுடன் கீழே விழுந்து புரண்டுசண்டை போட்டான். கூட வந்தசேகர்தான் சோனையை இழுத்துக்கொண்டு போனான். அந்தச் சண்டைக்குப் பிறகுதான்,
‘தன்னோட பேர மாத்த முடியாதா?' என தெரிந்தவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தான்.
அப்படித்தான் பக்கத்து ஊர் காளீஸ்வரன் அண்ணனை நூலகத்தில் சந்தித்தான். தன் பெயர் பற்றிய பிரச்சினையைக் கூறினான்.
"சரி. ரெண்டு நாள் பொறுடா. விசாரிச்சி சொல்றேன்’’ என்றார்.
எப்போது இரண்டு நாள் போகும் என காத்திருந்தான். அதற்குள் தனக்குஎன்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தான். இரண்டு நாட்கள் போனது. வேகவேகமாக நூலகத்தை நோக்கி நடந்தான். இவனைப் பார்த்ததும்,
‘‘டேய்.. வாடா...இப்பதான் உன்ன நினைச்சேன். பேர் மாத்தறது சாதாரண விஷயம்தான்’’ என்றார்.
பெயர் மாற்றும் நடைமுறையை காளீஸ்வரன் அண்ணா கூறினார். ‘‘தேங்க்ஸ்' ணே. இப்பதான் நிம்மதியா இருக்கு ’’ என்றான் சோனை.
‘‘சரிடா உங்க வீட்ல பேர் மாத்த ஒத்துக்குவாங்களா? நீ பாட்டுக்கு பெரிய மனுசனாட்டம் பேர்மாத்த கேட்டுட்டு இருக்க?’’ என்றார்.‘‘அதெல்லாம் அடம்பிடிச்சி மாத்திருவேன் ணே’’ என்றான். ‘‘ம்.அப்புறம் சொல்ல மறந்துட்டேன். இவ்வளவு வருத்தப்படறீயேனு உம் பேருக்கு என்னஅர்த்தம்னு இப்பதான் தேடுனேன்.
‘‘சோனை’’னா தங்கம்னு அர்த்தம் டா.’’
‘‘ம்க்கும்.. அதெல்லாம் ஒரு பேரு..’’ என சலித்துக் கொண்டான்.
‘‘சரிடா. புதுசா என்ன பேர் வைக்கறதுன்னு யோசிச்சிட்டியா? என்றார். ‘‘யோசிச்சிட்டேன் ணா. கேசவ். எப்படி.. ஸ்டைலா இருக்குல்ல.. எம் புதுப் பேரு ‘கேசவ்'க்கு என்ன அர்த்தம்?’’ என்றான் ஆர்வமாக.. ‘‘கேசவ் னா முடினு அர்த்தம் டா. கேசவ் னு ஒரு எண்ணெய் கூட விக்குதே. தெரியாதா?’’ என சிரித்தார் அண்ணன். சோனை திரு திரு என முழித்தான்.
‘‘எப்படி பேர் வைச்சாலும் கிண்டல் பண்றவன் பண்ணிட்டு தான்டா இருப்பான். வரட்டா" என கூறிச் சென்றார்.
கட்டுரையாளர்
ஆசிரியை, அரசுப்பள்ளி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.