

கோவை: கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு,புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுதொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின் பொது செயலாளர், எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் ராஜேஸ் கண்ணா கூறியதாவது:
பள்ளி மாணவர்களின் முதுகு எலும்பை பாதுகாப்பது பெற்றோர் மற்றும்ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும்.மாணவர்களின் தோள் பையின் எடைஅதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும்முதுகு எலும்பு வளைதல் ஆகிய உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன.
தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள் பையை தவறானமுறையில் தொடர்ந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாச கோளாறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சினைகள் வரும் அபாயம் உள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, தோள் பையின்எடை உடலின் எடையில் அதிகபட்சம் 10 சதவீதத்திற்குள்தான் இருக்கவேண்டும். அதாவது ஒன்று, இரண்டாம் வகுப்புகளுக்கு 1.50 கிலோவுக்குள்ளும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 3 கிலோவுக்குள்ளும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 4 கிலோவுக்குள்ளும், எட்டு, ஒன்பதாம் வகுப்புக்கு 4.50 கிலோவுக்குள்ளும், பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை 6 கிலோவுக்குள்ளும் தோள் பையின் எடை இருக்க வேண்டும்.
பொற்றோர் தோள் பையை கடைகளில் வாங்கும்போது தோளில் மாட்டும் பகுதி பட்டையாக உள்ளதா, இடுப்பு பகுதியை இணைக்கும் பட்டையுள்ளதா, புத்தகத்தை தனித்தனியாக பிரித்து வைக்கும் வகையில் அதிக அளவில் அறைகள் உள்ளனவா என பார்த்து வாங்க வேண்டும்.
அதேபோல் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்போது அன்றைய வகுப்புக்கு தேவையான புத்தகங்களை மட்டும் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். தேவையில்லாத புத்தகங்களை தவிர்ப்பதன் மூலம் தோள் பையின் எடையை குறைக்கலாம். அதிக எடையுள்ள புத்தகத்தை நடு முதுகு பகுதியில் படும்படியுள்ள பையின் அறையில் வைக்க வேண்டும்.
மற்ற புத்தகங்களை அதன் எடைக்கு ஏற்றவாறு அடுத்தடுத்த அறைகளில் வைக்கவேண்டும். பையின் பட்டை இரண்டு தோள்களிலும் சரியான உயரத்தில் உள்ளதா, இடுப்பு பகுதியின் பட்டை சரியாக மாட்டப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
பையை இரண்டுதோள்களிலும் மாட்டி மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரு தோளில் மட்டும் மாட்டி பயன்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள் அன்றைய அனைத்து வகுப்பு பாடங்களையும் ஒரே புத்தகத்தில் எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.
பாட புத்தகங்களின் சுமையை குறைக்க, கால அட்டவணையில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
பள்ளி நிர்வாகம் மாணவர்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை சரியான முறையில் சுத்திகரித்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பள்ளியிலே வழங்குவதன் மூலம் மாணவர்கள் குடிநீர் பாட்டிலை பையில் சுமந்துவருவதை தடுக்கலாம். இதன் மூலம்தோள் பையின் எடையை குறைக்கலாம்.
அதேபோல் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது புத்தகங்களை பள்ளியிலேயே வைத்து பாதுகாத்துக்கொள்ள புத்தக பாதுகாப்பு பெட்டிஏற்படுத்தி கொடுக்கலாம். பெற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரது ஒத்துழைப்பினால் மட்டுமே மாணவர்களுக்கு தோள் பையின் எடையை குறைத்து அதனால்ஏற்படும் உடல் நல பாதிப்புகளை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.