இனிக்கும் இல்லம் தேடிக் கல்வி - Q - சிறுகதை

இனிக்கும் இல்லம் தேடிக் கல்வி - Q - சிறுகதை
Updated on
2 min read

கரோனா தொற்றுக் காலம். பள்ளிக் கூடங்கள் மூடியிருந்தன.தெருவில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் ஈஸ்வரி அக்காவிடம் படிக்கப் போனார்கள்.

ஈஸ்வரி அக்கா வீட்டில் மொட்டை மாடி இருந்தது. மாஸ்க் போட்டு பிள்ளைகள் தள்ளித் தள்ளி உட்கார்ந்து கொண்டனர். ஈஸ்வரி அக்கா சூப்பரா பாட்டுப் பாடுவார், சிரிச்ச முகமாய் இருப்பார், அழகாக வரைவார், திறமையானவர்.

ஒவ்வொரு வருஷமும் தைப்பொங்கலன்று தெருவில் கோலப் போட்டி நடக்கும். அக்கா தான் முதல் பரிசு வாங்குவார். போன வருடம் சில்வர் குடம் பரிசு கொடுத்தார்கள்.

தீபாவளியன்று மருதாணி வைப்பதற்கு அக்காவிடம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் தவம் கிடப்பார்கள்.

ஈஸ்வரியக்கா… ஈஸ்வரியக்கா .. ஈஸ்வரியக்கா.. என பாட்டாய் பாடுவார்கள். இந்த கரோனா வந்து எல்லாரையும் வீட்டில் இருக்கும்படி ஆக்கிவிட்டது. அதுவும் ஒருவகையில் பிள்ளைகளுக்கு ஜாலிதான்.

ஈஸ்வரி அக்கா இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் தன்னார்வலர் ஆனார். தெருவில் அஞ்சாவது வரை படிக்கும் பிள்ளைகள் அந்த மொட்டை மாடியில் தான் இருந்தார்கள். ஈஸ்வரி அக்கா வீட்டு மொட்டை மாடியில் ஆட்டம் பாட்டமென ஜாலியாக இருந்தனர். அபிராமி மட்டும் வரவில்லை.

அக்கா ஒரு நாள் அபிராமி வீட்டுக்கே போய்விட்டார். ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிப் போயிருந்தார். அபிராமிக்கு கொடுத்தார். அவரது அம்மாவிடம் பேசி வரச் சொன்னார்.

அபிராமி இரண்டாவது படிக்கிறாள்.அவளுக்கு A B C D யே ஒழுங்காவராது. பள்ளிக்கூடம் சேர்ந்ததிலிருந்தே கரோனாவால் லீவு விட்டாச்சு. ஆனா ஆவன்னா தெரியும். ஒண்ணு.. ரெண்டு.. மூணு.. இருபது வரை சொல்லுவாள். இந்த இங்கிலீசு தான் வரமாட்டேன் என்கிறது.

திக்கி முக்கி J வரை சொல்லுவாள். அதுக்கு மேல X Y Z என முடிச்சிடுவாள். அபியை கிண்டல் பண்ணுவார்கள் என்பதாலேயே அவள் போகவில்லை.

மறுநாள் மாஸ்க் போட்டு அபிராமி மாடிப் படி ஏறினாள். வேனில் ஏறிஇங்கிலீஸ் மீடியம் போகும் பிள்ளைகளும் உக்கார்ந்திருந்தனர். அபிராமி பயந்தாள். ஈஸ்வரி அக்கா அபியை கிட்டத்தில் உக்கார வைத்துக் கொண்டாள்.

தெரிந்த ஆனா ஆவன்னா எழுதிக்கைதட்டு வாங்கினாள் அபி. அப்புறம்.தரையில் கட்டம் போட்டு ஒன் டு த்ரிவிளையாட்டு. அப்புறம். அட்டையை வைத்து க ங ச அப்புறம் A B C D. A B C D யை முதலில் பாட்டு போல சொல்லித் தந்தார். அபி அதை ராகமாய் பாடினாள். அதிசயமாய் மூன்று எழுத்தைத் தவிர எல்லாத்தையும் சொல்லிவிட்டாள்.

H - Q – W. நந்தினி A B C D. வரிசையை தலைகீழாய்ச் சொல்லும் மாணவி. அவள் குழுவில் அபியை உக்கார வைத்தார் ஈஸ்வரி அக்கா.

அபிராமிக்கு கோலப் பொடியில் கண்ணை மூடி எழுதி விளையாடியதில் W வும் வந்துவிட்டது. அச்.. அச்... எனும் தும்மல் விளையாட்டில் H வந்துவிட்டது. அபிராமி முன்பு போல இல்லை. மூணாவது நாளே Q வைத் தவிர எல்லாத்தையும் சொன்னாள். ஈஸ்வரி அக்காவின் எல்லா எழுத்து விளையாட்டும் அபிராமியின் Q விசயத்தில் பலனளிக்கவில்லை.

வகுப்பு முடிந்ததும். அபியை மட்டும் இருக்கச் சொன்னார். மெனக்கெட்டு மருதாணி அரைத்தார். அபிராமியின் இடது உள்ளங்கையில் Q போல மருதாணி வைத்துவிட்டாள்.

ஈஸ்வரி அக்காவின் மடியில் கை வைத்து உக்காந்திருந்த அபிக்கு கூச்சமாக இருந்தது, நெளிந்தாள், ரொம்ப சந்தோசமாகவும் இருந்தது. க்யூ என சொல்லச் சொல்லத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

மருதாணி லேசாய் காய்ந்ததும், டம்ளரில் வைத்திருந்த நீரைத் தொட்டுவைத்தார். மீண்டும் மருதாணி ஈரமாகியது.

‘‘காலையில் எழுந்ததும் இங்கே வா''என்றார். காய்ந்த Q வோடு அபிராமி காலையில் ஓடி வந்தாள்.

அபியின் விரலில் காய்ந்த பொருக்கை எல்லாம் பிய்த்து எடுத்துத்துடைத்தார். “அக்காவிடம் A.B.C.D சொல்லி முடித்தார்.

"நேத்தே கேக்கனும்ன்னு நெனச்சேன். மருதாணி மேல தொட்டுத் தொட்டு வச்சீங்களே, அதென்ன தண்ணிக்கா?"

‘‘அது ஜீனித் தண்ணி. தண்ணில ஜீனி போட்டு கரைச்சு வச்சிருந்தேன்.’’ மருதாணி வைத்த இடத்தில் ஜீனித் தண்ணியைத் தொட்டு வைத்தால் நல்லா சிவக்கும்.

‘‘இப்ப ஒரு தடவ வைக்கலாமா?'' ‘‘ம்ம் சரிக்கா!’’

ஜீனித்தண்ணியைத் தொட்டு உள்ளங்கையில் இருந்த Q வில் தடவினாள். Q ஈரமாகி, மேலும் சிவந்து பளபளவென மின்னியது. “நிஜமாகவே இது ஜீனித் தண்ணியாக்கா?’’

“ஆமா!” நுனி நாவால் சுவைத்துப் பார்த்தாள் அபி.

Q. இனித்தது.

கட்டுரையாளர்

ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, விக்கிரமங்கலம், அரியலூர்மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in