

சென்னை: பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமாக ஏற்றிச் செல்வோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் ஆட்டோக்கள், வேன்கள் போன்ற வாகனங்களில் பள்ளிக்குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்வதாக நீண்டகாலமாகவே புகார்கள் கூறப்படுகின்றன. இதுபோன்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது மட்டும் அது பேசு பொருளாகிறது. அவ்வளவுதான்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே அண்மையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் எல்கேஜி படிக்கும் நான்கரை வயது சிறுவன் உயிரிழந்தான்.
மேலும் 7 குழந்தைகள் காய மடைந்தனர். இதையடுத்து தூத்துக் குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், ஆட்டோ ஓட்டுநர்கள் அரசு நிர்ணயித்துள்ள இருக்கைகளைவிட அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
l செல்போன் பேசிக் கொண்டோ, குடிபோதையிலோ வாகனங்களை இயக்கக்கூடாது.
l வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளையும், மோட்டார் வாகனச் சட்டத்தையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
l பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் இதர வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனத்தின் கதவுகள் முறையாக பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும்.
l ஆட்டோக்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்து நிகழாமல் பாதுகாப்பான முறையில் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்.
l போக்குவரத்து விதிகளையும், மோட்டார் வாகனச் சட்டத்தையும் கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
அவரது எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டுமின்றி அனைத்துமாவட்டங்களுக்கும் பொருந்தும் நிலையில் உள்ளது.
இதுதொடர்பாக வட்டாரப் போக்கு வரத்து அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, “மேக்ஸி கேப் வேன்களில் நிர்ணயிக்கப்பட்ட இருக்கைவரம்பு 12. அதில், 13 வயதுக்குள்பட்டவர்களாக இருந்தால் 18 பேர்வரை ஏற்றிச் செல்லலாம். ஆட்டோக்களின் இருக்கை வரம்பு 3. அதில் 13 வயதுக்குள்பட்டவர்களாக இருந்தால் 5 பேர் வரை ஏற்றிச் செல்லலாம்.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட 50 சதவீதம் கூடுதலான அளவில் சிறியவர்களை ஏற்ற அனுமதி உண்டு. அதற்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் செல்வது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்தில் ஈடுபடுவோர் பற்றி பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது, "ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிக் குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் சென்றால் அதற்காக வழங்கப்படும் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். சட்டப்படி நடந்து கொள்கிறார்களா என்பதை அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.