ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் திணறும் ஓராசிரியர் பள்ளிகள்

ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் திணறும் ஓராசிரியர் பள்ளிகள்
Updated on
2 min read

வேலூர்: ஓராசிரியர் பள்ளிகளில் நிலவும் குறைகள் தொடக்கக்கல்வி கட்டமைப்பில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கல்வியாளர்கள் கவலைதெரிவிக்கின்றனர்.

தமிழக அளவில்ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் இருக்கும் மாவட்டங்களாக ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் இருப்பதாகவும் ஒரு ஒன்றியத்துக்கு 10 முதல் 15 பள்ளிகள் வரை பெரும்சிரமத்துக்கு மத்தியில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. அரசின் திட்டத்தில் இல்லாத ஓராசிரியர் பள்ளிகளின் நிலை குறித்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஓராசிரியர் பள்ளிகளின் அவல நிலை குறித்து பெயர் கூற விரும்பாத ஆசிரியை ஒருவர் கூறும்போது, ‘‘நான் பணியாற்றும் பள்ளி நகர்புறத்தில் இருந்து 29 கி.மீ தொலைவில் மலையடிவாரத்தில் இருக்கிறது. அந்த பள்ளிக்கு நான் தலைமை ஆசிரியை. நான் மட்டும்தான் ஆசிரியை. என் பள்ளியில் 28 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

மாணவர்களின் வருகைப்பதிவேட்டை தினமும் ஆன்லைனில் பதிவு செய்து அதை உறுதி செய்த பிறகே பாடம் நடத்த செல்ல முடியும். பள்ளிக்கு உதவியாளர் யாரும்இல்லை என்பதால் அந்த வேலையையும் நான்தான் செய்ய வேண்டும். மற்றபள்ளிகளில் இருப்பதுபோல் பாடங்கள் நடத்த முடியாத நிலை இருக்கிறது’’ என்றார்.

மற்றொரு ஆசிரியை ஒருவர் கூறும்போது, ‘‘தலைமை ஆசிரியை பதவி உயர்வு கிடைத்தால் இதுபோன்ற பள்ளிகளில் பணியாற்ற வேண்டி இருக்கிறது. கல்வியாண்டு தொடக்கத்திலும் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனியார் பள்ளிகளின் போட்டிகளை சமாளித்து மாணவர்களை சேர்க்கிறோம். ஒரு ஆசிரியர் மட்டும் இருப்பதால் பல பெற்றோர் அரசு பள்ளிகளில் சேர்க்க மறுக்கின்றனர்’’ என்றார்.

தமிழக கல்வித்துறையின் மிகப்பெரிய சறுக்கலாக இருக்கும் ஓராசிரியர் பள்ளிகள் குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி எல்.மணி கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 3 லட்சம்புதிய மாணவர்களை புதிதாக சேர்த்துள்ளதாக கூறும் அரசு கடந்த 10ஆண்டுகளில் தொடக்கப் பள்ளிகளில்காலியான 9 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் காலியாக வைத்துள்ளது.

குறித்த காலத்தில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாமல் வைத்திருப்பதே ஓராசிரியர் பள்ளிகளின் அவல நிலைக்கு காரணம். ஒரே ஒரு ஆசிரியர் 5 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 25 பாடங்களை எப்படி நடத்துவார்?’’ என்றார்.

தொடக்கப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கான காரணத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் கூறும்போது, ‘‘ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை இறுதி செய்து ஆசிரியர்கள் நியமனங்கள் நடைபெற வேண்டும்.

கடந்த காலங்களில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் நிறைய பேர் வடமாவட்டங்களில் பணியில் சேர்ந்தனர். அவர்கள் அருகிலுள்ள வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதலில் சென்றுவிட்டனர். இதனால்,இங்கு ஏற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாமல் விட்டுவிட்டனர்’’ என்று கூறினார்.

1400 ஓராசிரியர் பள்ளிகள்

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவாரூர், நாகப்பட்டிணம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ளடங்கிய கிராமப்பகுதிகளில் 5 முதல் 12 வயது வரையிலான தொடக்கக் கல்வி பயிலும் சுமார் 42 ஆயிரம் மாணவர்களுக்கு 1400 ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படம்: வி.எம்.மணிநாதன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in