4 பாடத்தில் சதம் அடித்த அரசு பள்ளி மாணவி: ரகசியம் சொல்கிறார் மதுமிதா

4 பாடத்தில் சதம் அடித்த அரசு பள்ளி மாணவி: ரகசியம் சொல்கிறார் மதுமிதா
Updated on
2 min read

சென்னை: பள்ளிக்கூடத்தில் தினமும் நடத்தும்பாடங்களை அன்றைய தினமே படித்துவிடுவதுடன், தேர்வு எழுதும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றியதாலேயே100-க்கு 100 மதிப்பெண்கள் பெற முடிந்தது என்கிறார் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ந.மதுமிதா.

தமிழகத்தில் அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் பலபாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிமாணவர்கள் அதுபோல மதிப்பெண்கள் பெறுவது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.

அந்த வரிசையில் சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மூன்றாவது குரூப் படித்து 4 பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் மாணவி மதுமிதா. அதன் ரகசியம் என்னவென்று நம்மிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

‘‘எனது அப்பா மு.நந்தகுமார், அம்மாத.ஜெயப்பிரியா, தங்கை ந. ஜீவிதா,5-ம் வகுப்பு படிக்கிறார். எனது படிப்புக்கு குடும்பத்தினரும், பள்ளிக்கூட தலைமை ஆசிரியை இந்துமதி மற்றும் வகுப்பு ஆசிரியர்களும் பெரிதும் உறுதுணையாக இருந்தனர்.

அதனால்தான், தமிழ் பாடத்தில்- 99 மதிப்பெண்கள், ஆங்கிலம்- 95, வணிகவியல்- 100, பொருளியல்- 100, கணக்குப்பதிவியல்- 100, வணிகக்கணிதம்-100 மதிப்பெண்கள் எனமொத்தம் 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற முடிந்தது. 100-க்கு100 மதிப்பெண்கள் எடுத்த பாடங்களில் புத்தகத்தை மட்டுமே படித்தேன். எந்த ‘கைடு’ம் வாங்கிப் படிக்கவில்லை. பள்ளியில் தினமும் சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்களை வீட்டில் வந்து அன்றைய தினமேபடித்துவிடுவேன். அப்போது சந்தேகம்எழுந்தால் பெற்றோர் தீர்த்து வைத்துவிடுவார்கள்.

தேர்வு எழுதும்போது பதில்களைஎப்படி எழுத வேண்டும் என்றும்,விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்றும் எங்கள் வகுப்பு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதன்படி, புத்தகத்தில் படித்ததை அப்படியே எழுதாமல் புரிந்து கொண்டு படித்து, பழமொழி, நீதி போதனை கருத்துகளையும் சேர்த்து பதில் எழுதியதுடன், துணைத் தலைப்பிட்டும் எழுதியது நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தந்தது’’ என்றார்.

பாடங்களை புரிந்து படியுங்கள்

மேலும் அவர் கூறுகையில், ‘‘தேர்வு காலங்களில் இரவு கூடுதல் நேரம் விழித்திருந்து படித்தால் எனது பெற்றோரும் எனக்காக விழித்திருப்பார்கள். எனது தங்கையிடம் படித்ததை ஒப்புவித்துக் காட்டு வேன். இப்படி குடும்பத்தினரின் ஒத்துழைப்பு என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத் தில் தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி பயனுள்ளதாக இருந்தது.

தேர்வு எழுதும்போது நேர மேலாண்மை மிகவும் முக்கியம். நான்தேர்வு தொடங்கியதும் அரை மணிநேரத்தில் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளைஎழுதிவிடுவேன்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் 5 மதிப்பெண்கள் வினாக்களுக்கும், அதையடுத்த ஒரு மணிநேரத்தில் 3 மதிப்பெண் வினாக்களுக்கும் பதில் எழுதி முடித்துவிடுவேன். கடைசி அரை மணி நேரத்தில் விடைகளின் முக்கியமான பகுதிகளைக் கோடிட்டு, விடைகளையும் சரிபார்த்துவிடுவேன்.

மணிக்கணக்கில் படிப்பதைவிட பாடங்களைப் புரிந்து படித்து, சுயமாக எழுதக் கற்றுக் கொள்வது நல்லது.வணிகக் கணிதம் போன்ற பாடங்களில் சூத்திரத்தை மனப்பாடம் செய்தாலும் அதை உரிய முறையில் பயன்படுத்துவதே அதிக மதிப்பெண்கள் பெற வழிவகுக்கும்’’ என்றார் மதுமிதா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in