

கடைக்குச் செல்வதென்றாலே விமலுக்கு மிகவும் பிடிக்கும். தனக்குப் பிடித்த சாக்லெட் வாங்கிச் சாப்பிடலாம்தானே, நேற்று கடைக்குப் போன விமல், “அண்ணா, அரைகிலோ சீனி, கடலை மிட்டாய் பாக்கெட் ஒன்று, ரொட்டி பாக்கெட் ஒன்று” கேட்டான்.
மூன்றையும் எடுத்த கடைக்கார அண்ணன் நெகிழி (பிளாஸ்டிக்) பையில் போட்டார். “அண்ணா, வேண்டாம். என்னிடம் பை இருக்கிறது” என்று அழகான காகிதப் பையை உயர்த்தினான். “என்ன இது புது பழக்கம்?” என்று கேட்கவும், “சும்மா” என்றுசொல்லிவிட்டு புன்னகையுடன் புறப்பட்டான்.
குறும்புக்கார சகோதரிகள்
சென்ற வாரம் யூடியூப்பில் பார்த்த வீடியோவை விமல் நினைத்துப் பார்த்தான். இந்தோனேசியாவில் இருக்கிறது பாலி தீவு. மலைகளுடன் விளையாடும் கடலும், அலைகள் தழுவும் வெண் மணலும், பச்சைப் பட்டுடுத்திய வனமும் நிறைந்தது இத்தீவு.
2000- ஆம் ஆண்டு, வானம் செம்பட்டு விரித்த ஒரு மாலையில் பாலியில் பெண்குழந்தை பிறந்தது. மலாட்டி என்று பெற்றோர்பெயரிட்டார்கள். 2002-ல் பிறந்த குழந்தையை இஸபெல் என்று அழைத்தார்கள்.
சகோதரிகள் இருவரும் ஒரே பள்ளியில் சேர்ந்தனர். குறும்புத்தனம் குதூகலம்அளித்தது. கடலில் குளிக்கும் நேரமெல்லாம் கையில் சிக்கும் நெகிழி பைகளும், கடற்கரைகளில் காற்றோடு நடனமிடும் நெகிழி குப்பைகளும் கலகலப்பை அதிகமாக்கின. செத்து கரை ஒதுங்கிய மீனின் வயிற்றில் இருந்த நெகிழி மென் துகள்கள் உரையாடலை சுவாரசியமாக்கின.
நெகிழியை ஒழிக்க இயக்கம்
வகுப்பில் ஒருநாள், சமூகத்தில் மாற்றங்களை நிகழ்த்திய நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களைப் பற்றி ஆசிரியர் பேசினார். அப்போது, மலாட்டிக்கு வயது 12. இஸபெல்லுக்கு 10 வயது.
வீட்டுக்குச் சென்றதும் ஆசிரியர் பேசியது குறித்து சகோதரிகள் கலந்துரையாடினர். “நாமும் ஏதாவது சாதிக்க வேண்டும். பெரியவர்களாக ஆகிறவரை காத்திருக்க வேண்டாம். நம்மால் இயன்றதை இப்போதே செய்யலாமே!” என்று யோசித்தார்கள்.
தீவில் உள்ள பிரச்சினைகளைப் பட்டியலிட்டார்கள். பாலி முழுவதும் நெகிழிக் குப்பைகள் குவிந்திருப்பதை நினைத்து வருந்தினர்.நெகிழி இல்லாத பாலியை உருவாக்க முடிவெடுத்து, இணையத்தில் வாசித்தார்கள். பல்வேறு பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த ஆர்வமிக்க மாணவர்களைச் சேர்ந்துBye Bye Plastic Bags என்னும் இயக்கத்தை உருவாக்கினார்கள்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கிஎறியப்படும் நெகிழிக்கு எதிராக பள்ளிகளில், சந்தைகளில், திருவிழாக்களில் பேசினார்கள். சுற்றறிக்கை கொடுத்தார்கள். கடற்கரையைச் சுத்தம் செய்தார்கள். 800 குடும்பங்கள் உள்ள கிராமத்தை மாதிரி கிராமமாகத் தேர்ந்தெடுத்தனர். அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை.
நெகிழியைத் தடை செய்வதற்காக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கத் திட்டமிட்ட சகோதரிகள். பாலி விமான நிலையத்தில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி பயணிகள் வந்து போகிறார்கள் என்பதை அறிந்துஅவர்களிடம் வாங்க முடிவு செய்தார்கள். விமான நிலையத்துக்குள் செல்ல பல்வேறுஅதிகாரிகளிடம் பேசி அனுமதி வாங்கினார்கள். கையெழுத்து சேகரித்தார்கள். ஆனாலும், அரசு அதிகாரிகள் யாரும் வந்து பேசவில்லை.
பாலி தீவில் நெகிழிக்கு தடை
அந்த நேரத்தில், உரை நிகழ்த்துவதற்காக இருவரும் இந்தியாவுக்கு வந்தனர். மகாத்மாகாந்தி வாழ்ந்த வீட்டுக்கும் போய், அவரதுஉண்ணாவிரதப் போராட்டம் பற்றி தெரிந்துகொண்டார்கள். வீட்டுக்குத் திரும்பியதும், “தீவின் ஆளுநர் தங்களை அழைத்துப் பேச வேண்டும். நெகிழியைத் தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள்.
செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. காவலர்கள் வந்து, ஆளுநர் அழைப்பதாகக் கூட்டிச் சென்றார்கள். குழந்தைகளின் கருத்தை ஆளுநர் கேட்டதும் உறுதியளித்தார். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பை, ஸ்ட்ரா உள்ளிட்ட நெகிழி பொருட்களுக்கு பாலி தீவில் 2019, ஜுன் 23 அன்று தடை விதித்தார்.
மக்களும், ஆசிரியர்களும் மாற்றத்துக்கு ஒத்துழைக்கிறார்கள். நெகிழிகளைப் பயன்படுத்தாத கடைகள் மற்றும் வீடுகளுக்கு முன்பாக, “ஒரே தீவு! ஒரே குரல்! நெகிழிப் பைகளுக்கு விடை கொடுப்போம்” எனும்ஸ்டிக்கர் ஒட்டுவதுடன், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு குழந்தைகள் அவர்களைப் பாராட்டுகிறார்கள். Bye Bye Plastic Bags குழு பல்வேறு நாடுகளில் செயல்படுகிறது.
“மாறுவதற்கு இதைப்போன்றதொரு சிறந்த நேரம் இனி வரப்போவதில்லை. செவிமடுப்பதற்கும், செயல்படுவதற்கும், மாறுவதற்கும் நாங்கள் தயார். ஏனென்றால், நாங்கள் வரலாற்றை உருவாக்குகிறோம். நாம் செய்யவேண்டியதெல்லாம், வரலாற்றின் எந்தப்பக்கத்தை ஆதரிக்கிறோம் என முடிவெடுக்க வேண்டியதுதான்” என்கிறார்கள் மலாட்டியும் இஸபெல்லும்.
நல்லதைத் தேர்ந்தெடுத்த விமல், நெகிழிப்பைகளுக்கு டாட்டா சொல்லிவிட்டான்.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர். தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com