தேவை அதிகமுள்ள ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள்

தேவை அதிகமுள்ள ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள்
Updated on
1 min read

கோவை: பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்க வேண்டும் என்பதை பெற்றோரோ, நண்பரோ தீர்மானிப்பதைவிட, தங்களுக்கான துறை எது என்பதை அந்த மாணவரே தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களால் சிறப்பான எதிர்காலத்தை அடைய முடியும். ஒரு படிப்பை விரும்பி எடுத்தால், அதில் மாணவர்களின் ஆர்வமும், பிரச்சினை வந்தால் அதை சமாளிக்கும் திறனும், கூடுதல் ஈடுபாடும் உருவாகும்.

மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு ஏற்றதாக ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் படிப்புகள் உள்ளன. ‘மெக்கானிக்கல் படித்தால் கடினமான வேலைசெய்ய வேண்டும், சம்பளம் குறைவாக கிடைக்கும்’ என்ற எண்ணம் தவறானது.

இன்று அனைத்து பெரிய நிறு வனங்களிலும் மெக்கானிக்கல் படித்தவர்கள் நல்ல வேலையில் இருக்கின்றனர், அதிக சம்பளம் பெறுகின்றனர். முன்பு நிறுவனங்கள் குறைவு. தற்போது மகேந்திரா, மாருதி, ஹோண்டா என பல நிறுவனங்கள் இருக்கின்றன.

கரோனா பெருந்தொற்று காலத்தில் கார் விற்பனை குறைந்த போதிலும், புதுப்புது கார்கள் தயாரிப்பில் நிறுவனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டன. முன்பைவிட கார்கள் தயாரிப்பு இப்போது அதிகரித்துள்ளது. இத்துறையில் படிக்க பல புதிய பாடங்கள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளன.

நிறைய சான்றிதழ் படிப்புகளும் இருக்கின்றன. படிக்கும் கல்லூரிகளே மாணவர்களின் திறன் வளர்க்கபல்வேறு நிறுவனங்களுக்கு அழைத்துச்செல்கின்றன. அங்குள்ள நிபுணர்களுடன் கலந்துரையாடலாம். ஆண், பெண்பாகுபாடின்றி அனைவரும் இத்துறையில் படித்து, நல்ல வேலையில் சேரும் வாய்ப்புகள் உள்ளன.

மெக்கானிக்கல் படிப்பை பொருத்தவரை மெக்கட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ், நானோ டெக்னாலஜி, நியூ மெட்டீரியல், கம்ப்யூட்டர் எய்டட், ஜியோமெக்கானிக்கல் என பல நவீன படிப்புகளுடன் பெரிய துறையாக வளர்ந்துள்ளது.

4.0 எனப்படும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்த துறையிலும் நல்லவளர்ச்சியும், அதிக தேவையும் ஏற்பட்டுள்ளது. மெக்கானிக்கல் படித்து வருபவர்களிடம் நிறுவனங்கள் ஏராளமானபுதிய கண்டுபிடிப்புகளை எதிர்பார்க்கின்றன.

வளரும் நாடான இந்தியாவில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் படிப்புகளுக்கான தேவையும், வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. இன்ஜினீயரிங் டெக்னாலஜி வந்தபிறகு அடைந்துள்ள பெரிய வளர்ச்சியால் நாட்டில் தொழில்வளம் பெருகியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பல பிரச்சினைகளுக்கு தீர்வைதந்துள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பில் தமிழகத்தில் இருந்துதான் 30 சதவீத உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

சென்னை அம்பத்தூர், கிண்டி,கோவையில் உள்ள தொழிற்பேட்டைகளில் பல நூறு உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட படிப்பை படிக்கும்போது ஆர்வத்துடன் புரிந்து படிக்க வேண்டும். அப்போதுதான் புதுமையான கண்டுபிடிப்புகளை நம்மால் செய்ய முடியும்.

சிறு, குறு தொழில்செய்ய விரும்புவோருக்கு இத்துறை மிகவும் ஏற்றது. சிறு, குறு தொழில் முனைவோருக்கு மத்திய, மாநில அரசுகள் பல உதவிகளை வழங்குகின்றன.

புதுமையான சிந்தனையுடன், குறைந்த முதலீட்டில் செய்யப்படும் எந்த தயாரிப்புக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு எப்போதும் உண்டு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in