

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பள்ளிப் படிப்பை முடித்ததும் உயர் கல்வியைத் தொடர்வதாக வந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளி மாணவராக, இதற்கான காரணத்தை நான் நன்கு அறிவேன்.
உயர்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஊக்கப்படுத்த 6 முதல் 12ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஆண்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் மூலமாகவும், பெண்களுக்கு ’புதுமைப் பெண்’ திட்டம் மூலமாகவும், மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இதனுடன் மருத்துவ, தொழில்நுட்பப் பட்ட படிப்புகளைப் படிக்க 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் தொழில் கல்லூரிகளில் சேருகின்ற மாணவ, மாணவியரின் செலவைத் தமிழக அரசே ஏற்கிறது. ‘நான் முதல்வன்’ திட்டம் அனைத்து மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்குகிறது. உயர்கல்வி ஆலோசனைக்கு 14417 என்கிற உதவி எண் உள்ளது.
அதிலும் திருச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு முகாம்கள், மாவட்டக் கல்வித் துறைக்கும் பெற்றோருக்குமான தொடர்பு, தலைமை ஆசிரியரின் அறிக்கை-அறிவுறுத்தல்கள், வாராந்திர வழிகாட்டும் வகுப்புகள், ஆட்சியர்க் கட்டுப்பாட்டு அறை மற்றும் அழைப்புகள் ஆகியவை அந்த மாவட்டத்தில் 98% மாணவர்கள் கல்லூரிகளில் சேரக் காரணமாக உள்ளது. உயர்கல்வியில் சேர்வோம்! உன்னத இடத்தைப் பெறுவோம்!
- ஜெ.நிஜித், 10ஆம் வகுப்பு, திருப்பத்தூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி, திருப்பத்தூர்.