

ஆறாம் விரலாகத் திறன்பேசி மாறிவிட்ட நிலையில், செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில் நுட்பத்தின் வருகை நவீன தாயத்துபோல் நம்மை ஆட்டிவைக்கிறது. நமது அறிவாற்றல் உலகைக் கட்டுப்படுத்தி, அதை வடிவமைக்கும் சக்தியாக திறன்பேசி உருவெடுக்கத் தொடங்கி விட்டது.
மேற்கத்திய நாடுகளில் இந்தச் சிக்கல் ஒரு தசாப்தத்துக்கு முன்பே பரவலானது. இந்தியாவைப் பொறுத்தவரை கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தப் பிரச்சினை பூதாகரமானது.
அப்போது நேரடி வகுப்பறைகளில் கல்வி பயிற்றுவிக்க முடியாமல் போகவே, பதின்பருவத்தினர் இடையே திறன்பேசிப் பயன்பாடு கடுமையாக அதிகரித்தது. இதன் நீட்சியாகக் கிராமப்புற இந்தியாவில்கூட 14-16 வயதுடையவர்களில் 90% பேர் திறன்பேசி பயன்பாட்டைக் கொண்டிருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 57% பேர் கல்வி நடவடிக்கைகளுக்கும், 71.6% பேர் சமூக ஊடகங்களுக்கும் திறன்பேசியைப் பயன்படுத்திவருகின்றனர்.
டிஜிட்டல் அதீதம்: ‘லோக்கல் சர்க்கிள்ஸ்' நடத்திய 2024 கணக்கெடுப்பில், நகர்ப்புற இந்தியப் பெற்றோர்களில் 50% பேர் 9 முதல் 17 வயது வரையிலான தங்கள் குழந்தைகள் காணொளிகள், ஆன்லைன் கேமிங், சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இத்தகைய அதீத டிஜிட்டல் பயன்பாட்டினால் அவர்களுடைய உடல், மன வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகள் தென்படுகின்றன.
இதேபோன்று, ‘ஈஒய்’ (EY) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியர்கள் சராசரியாக நாள்தோறும் 5 மணிநேரம்வரை திறன்பேசியில் செலவிடுகின்றனர், இதில் 69% பேர் சமூக ஊடகங்கள், திரைப்படங்கள், பொழுது போக்கு, இசை, ஆன்லைன் கேமிங்கில் செலவிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் ஏய்ம்ஸ் ஆய்வு, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் சராசரியாக 2 மணிநேரம் 20 நிமிடங்கள்வரை திரை நேரத்தை செலவிடுகின்றனர் என்கிறது.
இது உலகச் சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருக்கும் வரம்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம். இந்த எண்கள் இந்தியாவில் உள்ள அனைத்து வயதினரிடையே யும் திறன்பேசிப் பயன்பாடு, திரை நேரத்தின் ஆபத்தான அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்தப் போக்கு நம்மைப் பலவீனப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.
இது மூளை வடிகால் விளைவு ஆகும். கவனச்சிதறல், புரிதல் குறைபாடு, உடல் இயக்க ஆற்றல் குறைபாடு, பேச்சாற்றல் வளர்ச்சியில் தடுமாற்றம், மற்றவர்களுடன் இயல்பாகப் பழகுவதில் சிக்கல் போன்ற ஆபத்தான விளைவுகள் இன்றைய சிறாரிடம் சகஜமாகி வருவது எவ்வளவு பெரிய ஆபத்து.
வீட்டில் கவனம்: இளம் குழந்தைகளுக்குத் திறன்பேசிகளை வழங்குவதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும். கல்வி நோக்கங் களுக்காக மட்டும் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தலாம். இதுதவிர குழந்தைகளுக்கு உடல் இயக்கச் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். குடும்பங்கள் இரவு நேரத் திறன்பேசிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நேர வரைமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும்.
பெற்றோரும் திறன்பேசி பயன்பாட்டைக் குறைத்து, குழந்தைகளுடன் பயனுள்ள வகையில் நேரம் செல விடுவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி களில் வகுப்பறை விவாதங்கள், விநாடி வினாப் போட்டிகள், குழு செயல்பாடுகள் மூலம் ஆழ்ந்த கற்றலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
மறுமுனையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மறுகணமே பெரும்பாலான வீடுகளில் திரை நேரம் பிள்ளைகளின் மீது தொற்றிக்கொள்கிறது. இதிலிருந்து விடுபட டிஜிட்டல் அடிமைத்தனத்தின் எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றிப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிந்திருக்க வேண்டும். தொழில்நுட்பப் பயன்பாடு இல்லாத பகுதிகளை வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் உருவாக்குதல் அவசியம்.
அதேநேரம், கற்றல் சார்ந்த ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை ஊக்குவிக்க விழிப்புணர்வுத் திட்டங்களும் உரிய வழிகாட்டுதலும் வேண்டும். இளைஞர்கள் பொருளாதாரரீதியாக உற்பத்தியைப் பெருக்க, மனம், உடல் ஆரோக்கியத்தை உருவாக்குவது அவசியம்.
இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்துவது மூலதன உருவாக்கம், கல்வி, திறன் மேம்பாடு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் சார்ந்தது மட்டுமல்ல, பாதிப்பை உருவாக்கும் திறன்பேசிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதிலும் அது உள்ளது.
- கட்டுரையாளர்: தலைமையாசிரியர், ‘சிவப்புக்கோள் மனிதர்கள்’ உள்ளிட்ட சிறார் நாவல்களின் ஆசிரியர்; saran.hm@gmail.com