

மெய்நிகர் எனப் பரபரப்பாகப் பேசப்பட்டதை மூத்த தலைமுறை அறிந்து முடிக்கும் முன்னரே, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வந்துவிட்டது. அதை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு தெரிந்து கொண்டோம் என மகிழ்ச்சி அடைந்த போதுதான், அறிந்தது கைமண் அளவுகூட இல்லை; கடலளவு வெளியே இருக்கிறது என்று தெரிகிறது.
அதையும் மீறி அயர வைத்திருப்பது ஏஐ என்பதே இன்றைய தேதியில் காலாவதி ஆகிவிட்டது என்கிற கருத்துருவாக்கம். அதன் அடுத்தடுத்த முன்னேறிய வடிவங்கள் வந்துவிட்டன, நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட மேம்பட்ட பதிப்புகள் வரப் போகின்றன என்பன போன்ற வெடிகுண்டுகள். எந்தெந்தப் பணிகளில் இருந்தெல்லாம் மனித ஆற்றலை அவை அப்புறப் படுத்தப் போகின்றன என்பதைக்கூட அவற்றிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமாம்.
கல்வியியல் சூழலில் மாற்றம்: படிப்புக்குப் பாடப்புத்தகங்களோ பள்ளி, கல்லூரி வகுப்புகளோ அவசியம் தானா என்கிற சிந்தனைகூட ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் உருவாகி இருக்கிறது. மூத்த தலைமுறையின் அறிவும் அனுபவமும் இவற்றைத் தாண்டியவை அல்லவா? கல்வியியல் சூழலில் ஏற்பட்டுவரும் அதிவேக மாற்றங்களைப் பெருநகரக் கல்வி நிறுவனங்கள் ஓரளவு தகவமைத்துக் கொள்ளும். ஆனால், கற்பித்தல்-கற்றல் சூழலில் இவற்றுக்கு ஈடு கொடுக்கும் அளவு மாற்றங்கள் ஏற்படவில்லை என்றால், பெருநகர கல்விக்கூடங்களுக்கு இணையாகச் சிறு நகர்ப்புற, கிராமப்புற பள்ளிகளின் தரம் எவ்வாறு உயரும்?
தொடக்கப் பள்ளிகளில்... அன்றாடம் அல்லது வாரம் இரண்டு முறையாவது ஏதாவது ஒரு மாணவ, மாணவி முன்வந்து எல்லோருக்கும் ஒருகதை சொல்வதை மூன்றாம் வகுப்புக்கு மேல் அறிமுகப்படுத்தலாம். அந்தக் குழந்தை எப்படிச் சொன்னாலும் கைதட்டி ஊக்குவித்து, ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இன்றைய சிறார் பெற்றோரிடமோ பாட்டி தாத்தாக்களிடமோ கதைக் கேட்பதில்லை என்கிற நிலை மாறும். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கதை கேட்பதில் இருக்கும் சுவாரசியத் தைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டியது பெரியவர்களின் கடமை.
மேல்நிலைப் பள்ளிகளில்... கிராமப்புற, புறநகர்ப் பகுதி மாணவர்கள் கைகளிலும் இன்று நவீன திறன்பேசிகள் தவழ்கின்றன. அரிதாகிப் போன விளையாட்டு நேரம் போக நாளின் பெரும்பகுதியைத் திறன்பேசிகளுடன்தான் கழிக்கிறார்கள். நண்பர்கள் சந்திப்பில்கூட ஐந்து நண்பர்கள் கூடினால் ஐந்து திறன்பேசிகளும் அங்கே கூடுதலாக இடம்பெறத்தான் செய்கின்றன.
“திறன்பேசியைப் பயன்படுத்தாதே” எனச் சொல்வதை மாற்றிக்கொண்டு “குறைவாகப் பயன்படுத்துங்கள்” என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. இதனைத் தடுப்பது குறித்து யோசிப்பதை விட, அதன் பயன்பாட்டை கற்றல்- கற்பித்தலோடு சரிவிகிதத்தில் கலக்க முயற்சிப்பதுதான் நேர்மறை விளைவு களைத் தரும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்திச் சொல்லிக் கொடுக்கும் வழக் கத்தை, உயர்நிலைப் பள்ளி அளவிலேயே சிறிதுசிறிதாக மாற்றவேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கு மாற்றாக அவர்களையே பாடத்திட்டம் சார்ந்த கருத்துகளைப் பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் தேட வைப்பது, தேடியதை வகுப்பு நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளச் சொல்வது, ஆசிரியர்கள் அவற்றைச் சரியாக தம் அனுபவ அறிவுடன் நெறிப்படுத்தித் தெளிவு ஏற்படுத்துவது என்கிற கூட்டு முயற்சிதான் எதிர்காலத்தில் கல்வி முறையாக மாறிவிடும்.
கல்லூரிகளில்... எந்தெந்தப் பருவத்தில் மாணவர்கள் எவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்பதை வரையறுப்பதோடு, கல்வியாளர் களின் முனைப்பு முடிந்துவிட வேண்டும். தேவைப்பட்டால் தம் குழுவிலேயே மாணவப் பிரதிநிதிகளையும் வைத்து இதற்குக் கருத்துருவாக்கம் தருவதில் முனைப்புக் காட்டலாம்.
நம்மைவிட அடுத்த தலைமுறையினருக்கு புதியன பல தெரிந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் பரந்த மனப்பான்மை அவசியம். அவர்களையும் உள்ளடக்கிய பாடத்திட்ட உருவாக்கம் நல்ல விளைவு களைத் தரும். கல்லூரி அளவில் ‘மாணவர்களே வகுப்பு எடுக்க வேண்டும்; பேராசிரியர்கள் அவர்களின் மேம்பாட்டுக்கு வழிநடத்துவார்கள்’ என்கிற அளவுக்குக் கல்விமுறை மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
இவ்வாறு செய்வதில் மாணவரின் பேச்சுத் திறமை, பேச்சுக்கான தயாரிப்புத் திறன், பேச்சுக்கான கருத்துகளைத் தேடிக் கண்டறியும் முனைப்பில் பெற்றோர், ஆசிரியருடனான உரையாடல்கள் முதலியன அதிகரிக்கும். சபைக் கூச்சம் நீங்கும்; சக மாணவர்களுடனான நட்புணர்வு அதிகரிக்கும்; பெற்றோர் களுக்கு தம் குழந்தைகள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
பெரியவர்களின் அனுபவங்களை அடுத்த தலைமுறையினர் அலட்சியப் படுத்துகிறார்கள் என்பது தவறான கண்ணோட்டம். அந்த அற்புதமான விஷயம் அவர்களுக்கு ஏற்புடைய வகை யில், ஏற்புடைய ஊடகம் மூலம் சரியான நேரத்தில் கடத்தப்படாமல் போவதுதான் நடைபெறுகிற தவறு. இதனைத் திறந்த மனதோடு அணுகிச் சரிசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- கட்டுரையாளர்: பொதுத் துறை நிறுவனம் ஒன்றின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி; pnmaran23@gmail.com