

இன்றைய கால கட்டத்தில் சாலை விபத்துகள் நடை பெறாத நாளில்லை. பெரு மளவிலான இருசக்கர வாகன விபத்துகளில் பள்ளி மாணவர்கள் சிக்கி உயிரிழப்பது வேதனை. சாதிக்க நினைக்கும் மாணவர்கள், சாலை விதிகள் மனிதர்களின் வாழ்க்கை விதிகள் என்பதையும் கற்றறிய வேண்டும். நம் சமூகத்தின் இளையோர் சாலை விதிகள் குறித்த அடிப்படை அறிவை பெற, ஆசிரியர்களும் பெற்றோரும் உதவிட வேண்டும்.
நில்! கவனி! செல்! - நடைப்பாதையுடன் கூடிய நகர்ப் புற சாலைகளில், இடதுபுற மாகச் செல்ல வேண்டும். உள்சாலை சந்திப்புகளில், நின்று நிதானித்து, இடது வலது, எதிரில் வாகனங்கள் வருகின்றனவா என அறிந்து, செல்ல வேண்டும். காவலர்கள் இருந்தாலும், இல்லை என்றாலும், ‘நில் கவனி செல்' எனும் தாரக மந்திரத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். 18 வயது நிறைவடையும் முன்பு வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம்.
18 வயதுக்குக் குறைந்தவர்கள் சைக்கிளில் பயணம் செய்வது உடலுக்கும் நல்லது செலவில்லாப் பயணமாகவும் இருக்கும். பள்ளிக்கு மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், ஆங்காங்கே மாணவர்கள் தலைக்கவசம் அணியாமலும், சாலை விதிகளைப் பின்பற்றாமலும், பள்ளிச் சீருடையில் வாகனம் ஓட்டுவதைக் காண முடிகிறது. பள்ளிக்குச் செல்லப் பல வழிகள் உள்ள போதிலும், இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்து, அதில் பயணிக்க அனுமதிக்கும் பெற்றோர் பொறுப்பற்றவர்கள்.
சாலை விதிகள் பாடம்: முழுமையான சாலை விதிகள், தொடக்கப் பள்ளியில் தொடங்கி, கல்லூரிவரை பாடப் புத்தகங்களில் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். விதி மீறலைச் சட்டத்தால் மட்டுமே கட்டுப்படுத்திவிட முடியாது. போதிய விழிப்புணர்வு, சாலை விதிகள் பற்றிய புரிதல், அறிதல், தெளிதல் வழிநடத்துதல் மூலமாக மாணவர்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதுடன், அதன் பட்டியை ‘லாக்’ செய்ய வேண்டும்.
அப்போது தான் எதிர்பாராமல் தவறி விழுந்தாலும், தலைக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. கார் பயணத்தில் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். ஒருவழிப் பாதையில் எதிர்த்திசையில் பயணம் செய்யக் கூடாது. சாலையில் வாகனம் ஓட்டும்போது வேகக் கட்டுப்பாடு அவசியம்.
மருத்துவமனை, கல்வி நிலையங்கள் உள்ள இடங்களில் ஒலிப்பானைத் தவிர்த்திட வேண்டும். அவசர ஊர்தி, முக்கியப் பிரமுகர்கள் செல்லும் சாலைகளில், எவ்வித இடையூறுகளும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வலது, இடது புறங்களில் திரும்பும்போது சைகை செய்த பிறகு திரும்ப வேண்டும்.
கல்வியை மேம்படுத்த மாவட்டம் தோறும் மாதிரிப் பள்ளிகளை அரசு நடத்திவருகிறது. அதுபோல், வட்டாரம் வாரியாக சாலைப் போக்குவரத்து விதிகளுக்கான பூங்காக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், சிறப்பு நிதி மூலம் இந்தச் சாலைப் பாதுகாப்புப் பூங்காக்கள் செயல்பட வேண்டும்.
பாடம் படிக்க வரும் மாணவர் களின் அறிவுத்திறன் மேம்பட வழி வகைச் செய்வதுடன், அவர்களின் வருங்காலம் பாதுகாப்பானதாக அமைந்திடச் சாலைப் பாதுகாப்புப் பூங்காக்கள் அடித்தளம் அமைக்கும்.
- கட்டுரையாளர்: ப.நரசிம்மன், உதவிப் பொறியாளர் நெடுஞ்சாலைத் துறை, தருமபுரி மாவட்டம்; தொடர்புக்கு: narasimnaren@gmail.com