Published : 10 Jun 2025 08:04 AM
Last Updated : 10 Jun 2025 08:04 AM

அரசு பள்ளி மாணவர்களின் அடையாளத்தை மாற்றும் கல்விச் சுற்றுலா

கடந்த நான்கு ஆண்டுகளாக, நமது அரசு பள்ளி மாணவர்களை துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், ஜெர்மனி போன்ற நாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளேன். “இந்த யோசனை எப்படி வந்தது? அரசு பள்ளி மாணவர்கள் பன்னாடுகளுக்குச் செல்வதால் என்ன பயன்?” என்று பலரும் என்னிடம் கேட்டிருக் கிறார்கள். அதற்கான பதிலை இப்போது சொல்ல விரும்புகிறேன்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக 2021இல் பொறுப்பேற்ற பிறகு, முதல்வரின் வழிகாட்டு தலின்படி, அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தினோம். இருப்பினும், நான் பொறுப்பேற்றபோது, முதல்வர் சொன்ன வார்த்தைகளில் ஏதோ ஒன்றைத் தவற விடுவதாகத் தோன்றியது.

நேருவுக்கு நேர்: அந்நேரத்தில், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பற்றிய சுவாரசிய செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. 1957இல் புதுடெல்லியில் உள்ள நேருவின் மாளிகையில் அவரைக் குழந்தைகள் பேட்டி கண்டனர். அந்தப் பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி கி.லட்சுமி, “நீங்கள் அயல்நாடுகளுக்குத் தூதுவர்களை அனுப்புகிறீர்கள்.

நீங்கள் ஏன் எங்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது? நாங்கள் அந்த நாட்டுக் குழந்தைகளைச் சந்தித்து, அவர்களிடம் நம்மைப் பற்றிக் கூறுவோம். அவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்” என்றார். “நல்ல யோசனை. நிச்சயம் கவனிக்கிறேன்” என்று பதில் அளித்திருந்தார் நேரு.

இதை வாசித்தபோது எனக்குள் வெளிச்சம் தோன்றியது. முதல்வரின் விருப்பப்படி, அரசு பள்ளி மாணவர்கள் சிறந்த ஆளுமைகளாகத் திகழ வேண்டும் என்றால், உலக நாடுகளை அவர்கள் பார்ப்பதும் உதவியாக இருக்கும் என நினைத்தேன். இந்த யோசனைக்கு முதல்வர் உடனடி ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முதல் கல்விச் சுற்றுலா சென்றோம். அபுதாபி லூவ்வர் அறிவியல் அருங்காட்சியகம், அபுதாபி பன்னாட்டுப் புத்தகத் திருவிழா போன்ற பல்வேறு இடங்களுக்கு 68 மாணவர்களை அழைத்துச் சென்றேன். அதன் பிறகு, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தென்கொரியா தற்போது ஜெர்மனி என இதுவரை 350 அரசு பள்ளி மாணவர்களைப் பன்னாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளேன்.

இவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் கலைத்திருவிழா, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விநாடி வினா, சிறார் திரைப்பட விழா, நூல் வாசிப்பு, இலக்கியம், அறிவியல் போன்ற மன்றச் செயல்பாடுகளில் தங்களின் திறமைகளை நிரூபித்தவர்கள். மாணவர்களைப் போலவே ‘கனவு ஆசிரியர்’ திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 54 ஆசிரியப் பெருமக்களை பிரான்ஸ் நாட்டுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளேன்.

சமத்துவக் கல்வி: எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கே உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், பள்ளிக்கூடங்கள், அறிவுசார் மையங்களை மாணவர்கள் பார்வையிடுகின்றனர். தமிழ்நாட்டில் இருமொழிக் கல்வியில் பயின்று பல்வேறு நாடுகளில் பணியாற்றும் பல்துறை ஆளுமைகளுடனான சந்திப்பை, வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாவில் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறேன்.

ஒருமுறை கலந்துரையாடல் முடிந்த பிறகு அவர்களிடம் “என்ன கற்றுக்கொண்டீர்கள்” எனக் கேட்டேன். “ஆங்கிலம் என்பது ஒரு ஊடகம்தான் சார். அது எங்களுக்குத் தடை இல்லை. வருங்காலத்தில் இதுபோன்ற இடங்களில் உயர்கல்வி கற்க வேண்டும். இங்கே பணிபுரிய வேண்டும்.

இந்த அறிவை தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்கள். “நீங்கள் இங்கே கற்றுக்கொண்டதை, இங்கு பார்த்ததைப் பற்றி உங்கள் ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதன்மூலம், அவர்களும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றேன்.

சில நாட்களுக்கு முன்பு ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரியாவுக்குச் சாலை மார்க்கமாகவே பயணமானோம். அப்போது மாணவி ஒருவர் என் அருகில் அமர்ந்து ‘சமத்துவக் கல்வி’ குறித்து உரையாற்றினார். “சமத்துவக் கல்வி என்பது என்ன தெரியுமா? யாரையெல்லாம் கல்வி கற்கக் கூடாது.

அறிவை வளர்க்கக் கூடாது. பதவிக்குச் செல்லக் கூடாது எனப் பிரிவினையில் பிரித்து வைத்திருந்தார்களோ, அவர்கள் எல்லோரும் கல்வி கற்று அறிவைப் பெற்று பதவிக்குச் செல்வதுதான் சமத்துவக் கல்வி. குத்தாலம் எனும் கிராமத்தில் பிறந்த நான் பேச்சுப் போட்டியில் வென்று இன்று ஜெர்மனி வரைக்கும் வந்ததுதான் சமத்துவக் கல்வி” எனப் பாடம் எடுத்தார். இதுதான் வெளிநாடு கல்விச் சுற்றுலா மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது.

ஒரு சிறு கிராமம் என்றால், அதில், அந்த ஊரின் ஊராட்சி தலைவர், கவுன்சிலர், பரம்பரை பணக்காரர் ஆகியோர்தான் முக்கியமானவர்களாக அடையாளம் காணப்படுவார்கள். அந்த வரிசையில், பள்ளிக் கல்வித் துறையால் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசு பள்ளி மாணவர்களும் சேர்ந்து, இப்போது அந்த ஊரின் முக்கியஸ்தராக மாறி உள்ளார்கள்.

சமத்துவக் கல்வியின் மூலமே, ஊரின் அடையாளமாக அவர்கள் மாறி உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது மனதில் கொண்டாட்டம் உண்டாகிறது. இப்பயணம் தொடரும்... அரசு பள்ளி மாணவர்களே வாருங்கள் பறக்கலாம்! பயிலலாம்!

- அன்பில் மகேஸ் பொய்யாமொழி; கட்டுரையாளர்: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x