Published : 03 Jun 2025 07:30 AM
Last Updated : 03 Jun 2025 07:30 AM
புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. பள்ளிக்கூடத்துக்குள் உற்சாகமாக அடியெடுத்து வைத்திருப்பீர்கள். இந்தக் கல்வியாண்டில் என்னவெல்லாம் நிகழவிருக்கிறது என்பதை எதிர்நோக்கிக் குதூகலத்துடன் காத்திருப்பீர்கள். கோடையின் நீண்ட விடுமுறையில் பயணங்கள் செய்திருப்பீர்கள்.
புதிய நட்புகள் கிடைத்திருக்கும். பாட்டி, தாத்தா, உறவினர் வீட்டில் மறக்க முடியாத அனுபவங்கள் கிடைத்திருக்கும். புதிய புதிய தகவல்களை அறிந்திருப்பீர்கள். விடுமுறையில் நீங்கள் கற்றுக்கொண்ட புதிய திறன்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றியெல்லாம் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியிருப்பீர்கள்.
பெற்றோரும், ஆசிரியர்களும் நீங்கள் அறிவின் உச்சம் தொட, உங்களைத் தங்கள் தோள்களில் தாங்கி உயர்த்தக் காத்திருக்கிறார்கள். புதிய புத்தகங்கள், புதிய சீருடை, புதிய கல்வியாண்டு. இந்த ஆண்டில் வெற்றியின் கரம் பிடிக்க, சென்ற ஆண்டில் நம்மிடம் வெற்றி வந்துசேர சில நேரம் காலம் தாமதம் ஆனதற்கான காரணத்தை ஆராயுங்கள். ஒவ்வொரு நாளுமே புதிய நாளாக வரவேற்கக் காத்திருங்கள்.
துடிப்புடன் ஒவ்வொரு நாளையும் வரவேற்க, முந்தைய நாள் இரவே மறுநாளைத் திட்டமிடுங்கள். காலை எழுந்ததும் உற்சாகத்தை நாள் முழுவதும் மனத்தில் ஊற்றாக்க, “என்னால் முடியும்! இன்றைய நாள் பயனுள்ள நாளாக அமையும்!” என்று சில முறை தனக்குத் தானே சொல்லிக்கொள்ளுங்கள்.
புத்தக வாசம்: இரவு தூங்குவதற்கு முன்பு, அரை மணி நேரம் கதைப் புத்தகங்கள் வாசியுங்கள். நாள் முழுவதும் நமக்கு உதவியவர்களை, பெற்றோரை, ஆசிரியர்களை, நண்பர்களை, இயற்கையை நினைத்து நன்றி கூறுங்கள். புதிய பாடப் புத்தகங்களைப் பிரித்து வாசனை நுகருங்கள். ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தத் தொடங்கும்வரை காத்திருக்காமல், முழுப் பாடத்தையும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.
புதிய பாதைதான் நம்மைப் பயமுறுத்தும். பழகிய பாதை நம்பிக்கை தரும். ஒரு முறை வாசித்து வைத்த பாடம், ஆசிரியர் பாடம் நடத்தத் தொடங்கும்போது, ஆசிரியரோடு இணைந்து நீங்களும் நடைபோட வைக்கும். ஒருநாளில் எந்தெந்த நேரத்தில் என்ன வேலை செய்ய வேண்டும் என்று முந்தைய நாள் இரவில், திட்டமிட்டவற்றைச் செயல்படுத்த முடியாமல் போனால், சோர்ந்துபோகாமல் ஒவ்வொரு நாளையும் புதிதாகத் தொடங்குங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்வதுதான் பகுத்தறிவு. தவறே செய்யாமல் இருப்பதல்ல.
ரீல்ஸ் உதவாது! - உங்களைச் சுற்றியிருப்போரின் தேவைகளைக் கண்காணிக்கத் தொடங்குங்கள். முடிந்தால் உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். நன்றாகப் பாடத்தை உள்வாங்குகிறீர்களா? பாடம் படிப்பதுடன், பாடம் படிக்கக் கடினப்படும் மாணவர்க்குப் பாடம் சொல்லித்தரவும் முயலலாம்.
உதவி செய்யும் மனத்தில் உற்சாகம் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். ஆசிரியர்களும், பெற்றோர்களும், பெரியவர்களும் சொல்லும் வார்த்தைகளில் கருணையிருக்கும். கடைப்பிடிக்கலாம் தவறில்லை. சமுதாயம் தெரியாமல் தரும் தொந்தரவுகளைக் கடக்கப் பழகலாம்.
சமூக ஊடகங்கள் நமக்கு உபத்திரவமாகின்றன என்றால் உதாசீனப்படுத்தப் பழகுங்கள். ரீல்ஸ் நம் ‘ரியலை’ உருவாக்க உதவுவதில்லை. மாணவர்களே! படிப்பு எதிர்காலத்தில் உங்களைப் பாதுகாப்பான வீட்டில் வசிக்க வைக்கும். வாழ்வியல் திறன்கள் (Life skills) உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல உதவும். பாதுகாப்பான பாதையை அமைத்துத் தரும்.
புதிய கல்வியாண்டில் புதியப் புதிய திறன்களைப் பெற்று வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள கற்றல் என்பதை விரும்பக் கற்றுக்கொண்டால், உத்வேகம் வாழ்க்கை முழுவதும் நம்முடனே இருக்கும். புதிய கல்வியாண்டில் எப்போதும் உற்சாகம் ததும்பியிருக்க வாழ்த்துகள், மாணவக் கண்மணிகளே.
- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், “ஆசிரியர் நாட்குறிப்பு” நூலாசிரியர், ‘அன்பாசிரியர்’, ‘கனவு ஆசிரியர்’ விருதாளர்; udhayalakshmir@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT