

குழந்தைகளுக்கு அறிவுரை கேட்பது என்பது பிடிக்காத நிகழ்வு. நெடுநேரம் ஒருவர் பேச அதை மற்றவர்கள் கேட்கும் வழக்கம் நீர்த்துப் போய்விட்டது என்றே கூறலாம். ஆனாலும், அவசரங்கள் அதிகரித்து வரும் காலத்தில் குழந்தைகளுக்கு எதை நம்புவது, எதை எப்படிப் பார்ப்பது என்பதைக் கற்றுத் தர வேண்டிய பொறுப்பில் பெற்றோர்களே அதிக பங்கு வகிக்கின்றனர்.
ஓய்வாகவும் பொழுதுபோக்காகவும் கழிக்கக்கூடிய நேரத்தை அலைபேசிகளும், தொலைக்காட்சிகளும், சமூக ஊடகங்களுமே உண்டு செரிக்கின்றன. அதிலும் அனைவருக்கும் எளிமையாகக் காட்சி பகிரக்கூடிய திரைப்படங்கள் அதில் முதல் இடம் பிடிக்கின்றன. காட்சி ஊடகங்களைக் கையாள்வதில் இருக்கக்கூடிய சமூக சிக்கல்களை அமர்ந்து, பேசிப் புரிய வைக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் விழிப்புடன் உணர வேண்டும்.
திரையை உற்று நோக்கல்: எல்லோரும் அமர்ந்து கண்டு ரசிக்கக்கூடிய திரைப்படங்கள் தற்போது மிகக் குறைவு. குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கக்கூடிய திரைப்படங்கள்கூட குழந்தைகள் பார்க்க முடியாத கதியில்தான் பெரும்பாலும் எடுக்கப்படுகின்றன என்பதுதான் கசப்பான உண்மை. இதை நாம் அனைவரும் கண்டும் காணாததுபோல் இருக்கிறோம்.
‘அடலசென்ஸ்’ (Adolescence) எனும் வெப்சீரிஸ் அண்மையில் எங்களுடைய பள்ளியில் நடத்தப்பட்ட பயிலரங்கில் திரையிடப்பட்டது. உலகெங்கிலும் பதின் பருவக் குழந்தைகளை ஆன்லைன் உலகம் எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்து கொண்டிருக்கிறது என்பது காட்சிப்படுத்தி யிருக்கிறது இந்தப் படம்.
பதின் பருவ குழந்தைகளைப் பாதுகாக்கக்கூடிய பொறுப்பில் உள்ள எல்லாப் பெற்றோரும் காண வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த படம். பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர்கூட கடந்த மாதம் இந்தப் படம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார். இதுபோன்று, வன்முறையற்ற சமூக நீதியைப்பின்பற்றக் கூடிய திரைப்படங்களைத் தேடிக் கண்டுபிடித்து குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோரையே சேரும்.
கண்டு ரசித்தல்: வீட்டில் குடும்பத்தோடு சேர்ந்து ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் பார்ப்பது இன்று சகஜமாகிவிட்டது. அவ்வாறு பார்க்கும்போது ஒவ்வொரு படம் தொடங்கும் முன் அதில் காண வேண்டிய வயது வரம்பு குறிப்பிடப்படும். இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்காக மட்டுமே எடுக்கப்படும் பல திரைப்படங்கள் உள்ளன. அவற்றை மட்டும் கண்டு ரசிக்கப் பழக்கப்படுத்த வேண்டும்.
எல்லாத் திரைப்படங்களையும் காணக்கூடிய வயதை எட்டிய பிறகு காட்சிகளை உற்று நோக்கி அதில் உள்ள உட்பொருளை அலசி ஆராயும் நுண்ணறிவைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். மனிதரை எளிதில் வசப்படுத்தி, கட்டிப் போடக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் காட்சி ஊடகமாகும்.
எல்லாவற்றிலும் நன்மை தீமைகள் கலந்தே உள்ளன. திரைப்படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பார் கணியன் பூங்குன்றனார். தேடித்தேடி தகுதியானவற்றைத் தேர்ந்தெடுத்து, நம்மைத் தகவமைத்துக் கொள்ள, நம் குழந்தைகளைத் தகவமைக்க முயற்சிப்போம்.
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், திருச்சிராப்பள்ளி; agracy5533@gmail.com