

பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கு தொடங்கி தாங்களே கையாளலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முந்தைய தலைமுறையைவிட இளம் வயதினர் மத்தியில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இதில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு நிதி அறிவை ஊட்டுவது இன்றைய முக்கிய தேவைகளுள் ஒன்று.
குழந்தைகளுக்குப் பெற்றோர் உண்டியல் வாங்கி கொடுக்கும் வழக்கம் நம்மிடையே உண்டு. அதில் அவர்கள் சேகரித்து வைக்கும் பணத்தை விளையாட்டாகச் செலவழித்துவிடாமல் வங்கிக் கணக்கு தொடங்கி முறையாகச் சேமிக்கும் வழக்கத்தைப் பெற்றோர் இனி அறிமுகப்படுத்த வேண்டும். இதற்கு வட்டி கிடைக்கும்.
ஜாடி முறை: வீட்டில் சிறார் பணம் சேமிப்பதில், அமெரிக்க நிதி ஆலோசகர் டேவ் ராம்சே பிரபலப்படுத்திய ஜாடி முறையைப் பின்பற்றலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்று ஜாடிகளைக் கொடுக்கலாம். சேமிப்புக்கான ஒரு ஜாடி, உதவி தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்க ஒரு ஜாடி, செலவுக்கு ஒரு ஜாடி என அவற்றைப் பிரித்து அதன்படி பணத்தைப் பிரித்து செலவு செய்யப் பழக்கலாம். பெற்றோர் ரூ.100 கொடுத்தால் சேமிப்புக்கு ரூ.30, உதவி செய்ய ரூ.20, செலவுக்கு, ரூ.50 எனப் பிரித்து ஜாடிகளில் போடலாம்.
பள்ளிக்கூடத்திலேயே பிள்ளைகளுக்குப் பணவீக்கம், பணத்தின் கால மதிப்பு உள்ளிட்டவற்றைச் சொல்லிக் கொடுப்பது அவசியமாகும். பணவீக்கம் ஒருவரின் செலவிலும், சேமிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ரூ. 30 ஆயிரம் என வைத்துக்கொண்டால், பணவீக்க விகிதம் ஆண்டுக்கு 5 சதவீதம் என்றால், ஐந்து ஆண்டுகள் கழித்து 40 ஆயிரம் இருந்தால்தான் அந்தக் குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க முடியும்.
இதில், “72இன் விதிமுறை” (Rule of 72) முக்கியமானது. நம்முடைய சேமிப்புக்கு 8 சதவீதம் வட்டி கிடைக்கிறது என்றால், 72ஐ 8ஆல் வகுத்துப் பார்க்க வேண்டும். இதன் மூலம் நம் பணம் எத்தனை ஆண்டுகள் கழித்து இருமடங்காகும் என்பதைக் கண்டு கொள்ளலாம். சேமிப்பு, முதலீடுகளை நிறுத்தாமல் தொடர வேண்டும் என்பதைக் குழந்தைகளுக்கு விளக்கமாகச் சொல்லித் தர வேண்டும்.
தேவையான செலவு: எது தேவையற்ற செலவு, எது தேவையான செலவு என்பதை பதின் பருவத்தினருக்கு விளக்க வேண்டும்.
* அவசியத் தேவைகள் - அளவானவை - செலவிடுங்கள்.
* ஆசைகள் - அளவற்றவை - கட்டுப்படுத்துங்கள்.
* தீய பழக்கங்கள் - ஆபத்தானவை - தவிர்த்துவிடுங்கள்.
வாழ்க்கையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய பண மொழிகள் இவை. அவசியமான பொருள் என்றாலும் அதற்குரிய பணத்தைச் சேமித்து வைத்து வாங்கப் பழகுதல் நலம். பிற்காலத்தில் தேவையான பொருட்களைக்கூடக் கடனில் வாங்காமல் பணம் சேர்த்த பின்பு வாங்கத் தூண்டுகோலாக இது அமையும்.
14 வயதினிலே: குடும்பத்தின் வருமானம் என்ன, செலவு எவ்வளவு என்பதை எடுத்துச் சொல்லி 14 வயதில் சிறாருக்குக் குடும்ப பட்ஜெட் போடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கலாம். செலவுகளை அவசிய செலவு, ஆசைக்கான செலவு, எதிர்கால தேவைக்கான செலவு என மூன்றாகப் பிரித்துக் கொண்டால் சம்பளத்தைச் சரியாகப் பயன்படுத்த முடியும்.
முதலீடு, சேமிப்புக்குப் பணம் ஒதுக்குவதற்கு 50:30:20 என்கிற விதிமுறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை இளம் வயதிலேயே விளக்கி விட வேண்டும். 50 சதவீதத்தைக் குடும்ப செலவுக்காக ஒதுக்க வேண்டும். வீட்டுக் கடன், வீட்டு வாடகை, தனி நபர் கடன், வாகன கடன், வீட்டு மளிகைச் செலவு, கல்விக் கட்டணம், மருத்துவச் செலவு உள்ளிட்டவை இதில் அடங்கும்.
30 சதவீத தொகை குடும்பத் தேவைகளைப் பொருத்தது. அது விடுமுறை நாள்களை மகிழ்ச்சியாகக் கழிக்கச் செலவிடும் தொகையாக இருக்கலாம். மீதமுள்ள 20 சதவீதத் தொகையைச் சேமிப்புக்கோ, முதலீட்டுக்கோ பயன்படுத்த வேண்டும். இதுதான் எதிர்காலத்தில் நமக்கு உற்ற தோழனாக அமையும். வருமானம் கூடக் கூட சேமிப்பையும் அதிகரிக்கப் பழக வேண்டும்.
- கட்டுரையாளர்: ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அய்யம்பாளையம், திண்டுக்கல் மாவட்டம்; choraamu@gmail.com