

மாணவர்கள் பல்வேறு வடிவிலான பயிற்சி வகுப்புகளுக்குக் கோடை விடுமுறையில் செல்வது வழக்கமாகிவிட்டது. மேற்படிப்புக்கான தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு முதலியவற்றை எழுதப் பயிற்சி பெறுபவர்கள் ஒரு பக்கம். தற்காப்புக் கலை, நுண்கலை, சுயதொழில் பயிற்சி வகுப்பு, வாகன பழுது நீக்குதல், இலக்கியம், நடனம் சார்ந்து பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது இன்னொரு பக்கம்.
குறிப்பிட்ட சதவீத மாணவர்கள் எதுவும் வேண்டாம் என்று, உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், விழாக்களில் கலந்து கொள்ளுதல், பொருட்காட்சி, சுற்றுலா செல்லுதல் எனக் கோடையைக் கொண்டாடுகிறார்கள். வலுக் கட்டாயமாக எதையும் திணிக்காமல் எந்த ஒரு வடிவத்தில் மாணவர்கள் கோடையைக் கொண்டாடினாலும் அதன் மூலம் புதிய அனுபவம் பெறுவதுடன், அனுபவ அறிவும், உலகியல் பார்வையும் கிடைக்கிறது. உறவு, நட்பு வட்டம் விரிவடைகிறது.
சுட்டெரிக்கும் வெயிலுக்குப் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் செயற்கை குளிர் பானங்களைக் குடிப்பதைத் தவிர்ப்பது நலம். மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி, நீர்ச்சத்து காய்கள், கனிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். மண்பானை தண்ணீர் குடியுங்கள்.
வெயில் நேரத்தில் அதிக நேரம் வெளியில் சுற்றுவதைத் தவிர்த்து விடுங்கள். நீர் நிலைகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், வீட்டில் உள்ள பைக்கை எடுத்துக் கொண்டு ஒரே வண்டியில் மூன்று பேர், நான்கு பேர் எனச் சாகசத்துக்காகச் சவாரி செய்வது தவறு என உணருங்கள்.
வாசிப்பு, சேமிப்பு பழகுவோம்! - கோடை விடுமுறையை உள்ளூரில் இருந்தபடி கழித்தாலும் அல்லது உறவினர்களின் வீடுகளில் சென்று கழித்தாலும் பள்ளி மாணவர்கள் தினமும் ஏதாவது ஒரு செய்தித்தாள் வாசிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லதொரு பழக்கமாக இருக்கும். உள்ளூரில் உள்ள பொது நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து நூலகம் செல்வதையும், புத்தகங்களை எடுத்து வந்து வீட்டில் வாசிப்பதையும் மாணவர்கள் இந்தக் கோடை விடுமுறைக் காலத்தின்போது தொடங்கி விடலாம்.
அதேபோன்று உறவினர்கள் அன்புப் பரிசாகத் தரக்கூடிய தொகையை முழுவதுமாக செலவிடாமல் அதில் கொஞ்சம் சேமித்து வைத்தல் சிறப்பு. அடுத்த வகுப்புக்கு நாம் செல்லும்போது இப்பணம் நம் கல்வி சார்ந்து செலவிட பெரும் உதவியாக அமையும் என்பதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். நிதி கல்வி சார்ந்த விழிப்புணர்வு புத்தகங்களையும் வாசியுங்கள்.
சுற்றுலா அனைத்து வயதினருக்கும் பிடித்தமானது. பல்வேறு தரப்பட்ட பண்பாடுகள், உணவு முறைகள், மக்களின் பழக்க வழக்கங்களைச் சுற்றுலா நமக்கு கற்றுக் கொடுக்கிறது. அதேநேரம் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா செல்லும்போது பாதுகாப்பு உணர்வும் அவசியம்.
ஆண் குழந்தைகளும் சமைக்கலாம்: ஒரு நாளில் பெருமளவு நேரத்தை டிவி முன்பும், திறன்பேசியில் மூழ்கியபடியும் கழிப்பதைத் தவிர்த்து அன்றாடம் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடிக்க உதவலாம். உதாரணமாக, சமையலறையில் அம்மாவுக்குப் பெண் குழந்தைதான் உதவ வேண்டும் என்பதில்லை, ஆண் குழந்தையும் சமையல் கலையைக் கற்றுக்கொள்ளலாம். இது எதிர்காலத்தில் நமக்கு பெரும் உதவியாக அமையும்.
கோடை விடுமுறையின் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளி களுக்கு உதவி செய்தல், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்கு முடிந்த உதவிகளை சில நாட்கள் செய்வதையும் வாடிக்கையாகப் பலரும் கொண்டுள்ளனர். வயதானவர்களுடன் பொறுமையாகக் கலந்து பேசும்போது அவர்களின் அனுபவம் நமக்குப் பாடமாக அமையும்.
முடிந்தவரை சில மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து வாருங்கள். காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக இன்று உள்ளது. அதற்கு உதவிடும் பொருட்டு சுற்றுச்சூழல் சார்ந்து மாணவர்கள் கொஞ்சம் அக்கறை காட்டுவது எதிர்கால சந்ததியினருக்கு நல்லது. கோடை விடுமுறையை அனுபவித்துக் கொண் டாடுங்கள், பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள், புதியவற்றை கற்றுக் கொண்டபடியே கொண்டாடுங்கள்.
- கட்டுரையாளர்: ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மருதாநதி அணை, ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல்; choraamu@gmail.com