

படி..படி..படித்தால்தான் உருப்படுவாய்; சாதிக்கலாம்; சம்பாதிக்கலாம்.. எனப் பெற்றோரும், ஆசிரியர்களும் எந்நேரமும் கூறுவதை தங்களது கடமை யெனக் கருதுகின்றனர். மாணவர்களோ இதைக் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டனர். இதில் ஓர் உண்மையை அறிந்து கொண்டால் அந்தச் சொற்களின் வீரியத்தை மாணவர்கள் உணரச் செய்ய முடியும்.
“பிறவித் திறமையை வளர்ப்பதற்காகவே கல்வியறிவு பயன்பட வேண்டும்” என்றார் தத்துவ ஞானி பிளாட்டோ. இன்றைய கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கிடையே ஏற்படும் பல்வேறு விரும்பத்தகாத செயல்களுக்கு முக்கியக் காரணம், மாணவர்களின் தனித்தன்மைகளுக்கு ஏற்ற லட்சியத்தை அவர்களுக்குள் விதைக்கத் தவறுவதே ஆகும். லட்சியம் அலட்சியம் செய்யப்படுவதற்குப் பெற்றோர், ஆசிரியர், சமூகம் என்ற மூன்று தரப்பினரும் பொறுப் பேற்றாக வேண்டும்.
லட்சிய பாதையில் குடும்பம்: ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று ஒரு சிறந்த லட்சியத்தைத் தேர்ந்தெடுத்து அதனை அடையும் முயற்சியோடு தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால், உலகத்தின் இயக்கமே புதுமையாகி விடும். தேவையற்ற வன்முறைகளும், சமூக ஏற்றத் தாழ்வுகளும் தானாகவே மறைந்து போக வழியேற்படும். லட்சிய வேட்கையை எப்படி விதைப்பது? சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு லட்சியம் என்ற வாழ்க்கையின் உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டால் போதும்.
தனக்கும், சமூகத்துக்கும் பயனுள்ள விதத்தில் வாழ வழி வகுத்துவிடலாம். குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுத்தப்படும் லட்சிய உணர்வு அதிக வலிமையானது. எதனாலும் தகர்க்கப்பட முடியாதது. எது ஒன்றும் பழக்கமாகி விட்டால், பிறகு அவர்களே மாற்ற நினைத்தாலும் அதை மாற்றிக் கொள்வது கடினம்.
இப்போதெல்லாம் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவதற்கு முன்பே பெற்றோர் அவர்களுக்கு எழுத்துகளையும், சொற்களையும் எழுதவும் சொல்லவும் கற்பிக்க முயல்கின்றனர். அதற்குப் பதிலாக ‘லட்சியம்’ என்ற வீரியமிக்கச் சொல்லை அதன் பொருளோடு அறிமுகம் செய்துவிட வேண்டியது பெற்றோரின் கடமை.
அதை உணர்ந்து விட்டாலே தொடங்கிவிடும் லட்சிய வேட்கை. இன்றைய குழந்தைகளின் முதன்மையான பொழுதுபோக்கு சாதனமான அலைபேசியின் வாயிலாகவே எண்ணற்ற சிறந்த உதாரணங்களையும், லட்சியங்கள் குறித்த சிறந்த முன்மாதிரிகளையும் காண்பித்து ஆர்வத்தை எளிதில் தூண்டிவிட முடியும்.
அது நல்ல விளைநிலத்தில் விழுந்த விதையாக ஏற்ற காலகட்டத்தில் வேர்விடத் தொடங்கி விடும். பிறகு படிக்கச் சொல்லித் தொந்தரவு செய்ய வேண்டிய அவசியமே பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படாது. லட்சியத்தை அடைவதற்குக் கல்வியும், விடாமுயற்சியும் தேவை என்பதைத் தேர்வு செய்யப்பட்ட லட்சியமே அவர்களது உள்ளுணர்வைத் தூண்டி கற்றுக் கொடுத்துவிடும்.
ஆசானின் பங்கு: லட்சியத்தை ஏற்படுத்தும் கடமையில் பெற்றோருக்கு இணையான இடத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். குறைந்த கல்வியறிவு உடைய, லட்சியப்பாதை வகுக்கத் தெரியாத பெற்றோரின் பிள்ளைகளுக்குள் லட்சியம் என்னும் உயிர் மூச்சை ஆசிரியர்களால் தான் தொடங்கி வைக்க முடியும். கற்பித்தல் என்பது வெறுமனே பாடப்பொருளை கற்பிக்கும் செயல் அல்ல. பாடங்களின் வழியே மாணவர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் லட்சியங்களைச் சுட்டிக்காட்டும் உத்தி அது.
கல்வியறிவு ஒருவரை மனிதராக்குகிறது என்றால், லட்சியம்தான் அவரை மாமனிதராக்குகிறது. எனவே ‘அனைவருக்கும் கல்வி’ என்ற நிலையை இச்சமூகம் முழுமையாக அடைய ‘அனைவருக்கும் லட்சியம்’ என்பதும் இன்றியமையாதது. இந்தப் புத்தாண்டில் லட்சிய வேட்கையைக் குழந்தைகள் மனத்தில் விதைப்போம்.
- கட்டுரையாளர்: ஆசிரியர், உவாக்கர் மேல்நிலைப் பள்ளி டோனாவூர், திருநெல்வேலி. ‘அனைவருக்கும் இலட்சியம்’ நூலாசிரியர்; emmimajansy@gmail.com