

நடைபெற்று வரும் சென்னைப் புத்தகக் காட்சியில் சிறாரின் அறிவுப் பசிக்கு தீனிபோட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘தமிழ் திசை’ பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ள புத்தகங்களில் சில ஒரு பார்வை:
குட்டிகளுக்கான கதைக்குறள்!
உலகம் போற்றும் திருக்குறள் வெறும் மனப்பாடப் பகுதியாகத் தேங்கிவிடாமல் சிறார் மனத்தில் தித்திக்கும் கரும்பாக அவர்களது வாழ்க்கைத் துணையாக மாறிட எழுதப்பட்டதே ‘குட்டிகள் குறள்’. சிறார் இலக்கிய எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மமதி சாரி ‘கெட்டிக்குட்டி’ என்கிற சிறுவன் மூலம் திருக்குறளை அற்புதமான கதைக்களத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இதன் முதல் பாகம் பரவலாக சிறுவர்களை ஈர்க்கவே தற்போது ‘குட்டிகள் குறள்- பாகம் 2’ உங்களுடன் ஆடி, பாடி, விளையாடத் தயார்.
ஆங்கிலம் பேசும் உத்தி!
ஆங்கிலம் சரளமாகப் பேசப் பயிற்சியும் முயற்சியும் வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இருப்பினும், “எதை செஞ்சாலும் பிளான் பண்ணி செய்யணும்” என்பதுபோல் ஆங்கிலம் வசப்படத் தேவை கொஞ்சம் உத்தி. இதனை எளிதில் புரியும்படி உரையாடல் வழியாக அற்புதமாக கற்றுத் தர வந்திருக்கிறது, மொழி பயிற்றுநர் ஷர்மிளா ஜெய்க்குமாரின் “கொஞ்சம் Technique கொஞ்சம் English”.
தளிர் கதாசிரியரே
நல்ல கதைகளைச் சிறார் வாசிக்க வேண்டும் என்பதோடு அவர்களே நல்ல கதாசிரியராகவும் உருவெடுக்க வேண்டும் என்கிற உயரிய சிந்தனையின் வெளிப்பாடே, “நீங்களும் கதாசிரியரே!”. ஆர்வமாகக் கதை சொல்லும் குழந்தைகள் தாங்களே தங்களது கதைக்கு எப்படி எழுத்து வடிவம் கொடுத்து மெருகேற்றலாம் என்பதை நூலாசிரியர் விஷ்ணுபுரம் சரவணன் தெள்ளுத் தமிழ் நடையில் எழுதியுள்ளார்.
வேலை வேண்டுமா?
தொழிற்புரட்சி 5.0 காலத்தில் நாளுக்கு நாள் அதிநவீன வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் இவற்றுக்கு வழிகாட்ட ஏராளமான நூல்கள், இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தமிழில் இதனை சிறப்பாக எடுத்துரைக்க அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து தொழிற்துறை, பணிச்சந்தை என்னவாக மாறும் என்பதை கூர்ந்து கவனித்து உரிய வழிகாட்டுதல் அளிக்கும் திறனும் அறிவாற்றலும் அனுபவமும் படைத்தவராக இருத்தல் வேண்டும். இவை அனைத்தும் ஒருசேர பெற்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் இரா.நடராஜன் எழுதியிருக்கும் நூல், ‘வேலைக்கு நான் தயார்’.