

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் இந்தியா முன்னேற்றம் அடையக் காரணம், அன்று நமக்கு வாய்த்த தலைவர்கள் நாடு குறித்தும் நாட்டு மக்கள் குறித்தும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டதுதான். ஆழ்ந்த அக்கறையோடும் பரந்த மனப்பான்மையோடும் தேர்ந்த அறிவாற்றலோடும் வலுவான இந்தியாவை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள். அத்தகைய தலைவர்களில் ஒருவர்தான் மெளலானா அபுல் கலாம் ஆசாத்.
விளையும் பயிர்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் 1888ஆம் ஆண்டு பிறந்தார் ஆசாத். இரண்டே ஆண்டுகளில் கொல்கத்தாவுக்கு அவரது குடும்பம் வந்து சேர்ந்தது. இவருடைய தந்தை சிறந்த அறிஞர். அதனால், வீட்டிலேயே தந்தை மூலமும் அறிஞர்கள் மூலமும் ஆசாத்துக்குக் கல்வி அளிக்கப்பட்டது. வங்கம், உருது, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். உலக வரலாறு, அறிவியல், தத்துவம், கணிதம் போன்றவற்றையும் கற்றுத் தேர்ந்தார்.
பத்திரிகை ஆசிரியர்: மிக இளம் வயதிலேயே வீட்டில் ஒரு நூலகத்தை அமைத்து, பலரையும் அழைத்து விவாதங்களை நடத்திவந்தார் ஆசாத். 12 வயதில் நூல் எழுதும் ஆர்வம் அவருக்கு வந்துவிட்டது. 14 வயதில் இலக்கிய இதழ்களுக்குக் கட்டுரைகளை எழுதினார். 15 வயதில் தன்னைவிட இரண்டு மடங்கு வயது அதிகமானவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்துவிட்டார். 16 வயதில் படிப்பை முடித்து, ஒரு பத்திரிகையையும் வெளியிட்டார். 18 வயதில் ஒரு செய்தித்தாளின் ஆசிரியராகவே பொறுப்பேற்றுவிட்டார்.
பல்துறை வித்தகர்: இந்திய விடுதலைப் போராட்டத்திலும் விடுதலைக்குப் பின்னரும் மக்களின் உயர்வுக்காகப் பங்காற்றிய தலைவர்களில் மிக முக்கியமானவர் ஆசாத். விடுதலைப் போராட்ட வீரர், கல்வியாளர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என ஏராளமான பொறுப்புகளைத் திறம்படக் கையாண்டு, வரலாற்றில் அழுத்தமான முத்திரையைப் பதித்த ஆசாத், மத நல்லிணக்கத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர்.
இந்தியர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்கிற எண்ணம் கல்வி அமைச்சராவதற்கு முன்பே ஆசாத்துக்கு இருந்தது. கல்விதான் அவரை மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக உருவாக்கியிருந்தது. ஒரு மனிதன் தன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றால், அது கல்வி கற்றால்தான் முடியும் என்பதில் அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
பல்கலைக்கழகம் தொடக்கம்: ‘கிலாபத்’ இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இளைஞராக இருந்த ஆசாத்துக்கு, காந்தி மீதும் அவரது கொள்கைகள் மீதும் மரியாதை ஏற்பட்டது. காந்தியும் கிலாபத் இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் ஆசாத். காந்தி, நேரு ஆகிய தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகினார். இந்தியர்களுக்கு உயர் கல்வி அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், 1920ஆம் ஆண்டு அலி சகோதரர்களுடன் இணைந்து, ‘ஜாமியா மிலியா’ இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவு இன்றியே இயங்கியது.
இந்தியன் என்பதில் பெருமிதம்: ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். 35 வயதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகி, அந்தப் பொறுப்பை வகித்த இளம் தலைவர் என்கிற சிறப்பைப் பெற்றார். இந்தியப் பிரிவினையின்போது, இஸ்லாமியத் தலைவர்கள் பலர் காந்தியை எதிர்த்தனர். அப்போது காந்திக்கு ஆதரவை நல்கினார் ஆசாத். பிரிவினையால் ஏற்பட்ட வன்முறைகளைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குமான நடவடிக்கைகளிலும் இறங்கினார்.
‘நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்தியத் தேசியத்தின் பிரிக்க முடியாத ஒற்றுமையின் ஒரு பகுதி நான். இந்த உன்னதமான கட்டமைப்புக்கு நான் இன்றியமையாதவன். நான் இல்லாமல் இந்தக் கட்டமைப்பு முழுமையடையாது. ஒருபோதும் இதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்று முழக்கமிட்டார்.
கல்வி அமைச்சர்: 1947ஆம் ஆண்டு நேரு அமைச்சரவையில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மெளலானா அபுல் கலாம் ஆசாத். அடிப்படைக் கல்வியை ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமையாக மாற்றுவதற்காக நாடு முழுவதும் பயணித்தார்.
14 வயது வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி, பெண்களுக்கான கல்வி, முதியோருக்கான கல்வி போன்றவற்றில் அக்கறை செலுத்தினார். ஆரம்பம், இடைநிலைக் கல்வி, அறிவியல் கல்வி, பல்கலைக்கழகங்களை நிறுவுதல், ஐஐடி போன்ற ஆராய்ச்சி - உயர்கல்விக்கான வழிகளை மேம்படுத்துதல், பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) உருவாக்குதல் போன்ற பல முக்கியமான செயல்பாடுகள் இவரது முயற்சியில் மேற்கொள்ளப்பட்டன.
கல்வி என்னும் பிறப்புரிமை: ‘குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வியையாவது பெறுவது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான பிறப்புரிமை’ என்று கூறியவர் அபுல் கலாம் ஆசாத். அனைவரும் கல்வியைப் பெறுவதற்கான திட்டங்களை வகுத்து, கல்வித்துறையில் இந்தியர்களின் இன்றைய முன்னேற்றத்துக்கு அகலப் பாதை அமைத்துக்கொடுத்தவரும் அவரே. அவர் பிறந்த நாளை ‘தேசியக் கல்வி நாள்’ ஆகக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது.