

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 86ஆவது சட்டத் திருத்தத்தின்படி 2002இல் சட்டக்கூறு 21 – A சேர்க்கப்பட்டது. இது 6 முதல் 14 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் இலவச – கட்டாயக் கல்வியை உறுதிசெய்கிறது. சட்டக்கூறு 21 – A-ஐ உள்ளடக்கிய இலவச – கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, ஒவ்வொரு குழந்தையும் தரமான, சமத்துவ, முழுநேர ஆரம்பக் கல்வியைப் பெற வழிவகுக்கிறது. இந்தச் சட்டம் 2010, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.
கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள ‘இலவசக் கல்வி’ என்பது மிக முக்கியமான அம்சம். தேசியக் கல்வி நாள் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான ‘மிகவும் பின்தங்கியவருக்கும் கல்வி’ என்பதைப் பிரதிபலிக்கிறது. எந்தவொரு குழந்தையின் ஆரம்பக் கல்வியும் வறுமையின் காரணமாகத் தடைபடக் கூடாது என்பதற்காக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைப் பயிலும் எந்தவொரு குழந்தையும் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பது வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள, மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளும் ஆரம்பக் கல்வி பெற வழிவகுக்கிறது. ‘கட்டாயக் கல்வி’ என்பது எந்தவொரு குழந்தையும் ஆரம்பக் கல்வி பெறுவதில் இருந்து விடுபடக் கூடாது என்பதை உணர்த்துகிறது.
தண்டிக்கக் கூடாது: 6 முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, அவர்கள் பள்ளிக்குத் தொடர்ந்து வருவதைக் கண்காணிப்பது, தொடக்கக் கல்வியைப் பூர்த்திசெய்ய உதவுவது போன்றவை மாநில அரசுகளின் பொறுப்பு. மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இந்தக் கல்வி உரிமைச் சட்டத்தால், பள்ளியில் சேராத குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்கள் வயதுக்கேற்ப வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவதும் கல்வி பெறுவதும் உறுதிசெய்யப்படுகின்றன.
அனைவருக்கும் இலவச – கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வேறு சில முக்கியப் பரிந்துரைகளையும் முன்வைக்கிறது. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் வகையில் ஆசிரியர் - மாணவர் விகிதம் முறைப்படி பராமரிக்கப்பட வேண்டும். கிராம – நகரப் பள்ளிகளில் ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் சரியான எண்ணிக்கையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை பராமரிக்கப்பட வேண்டும். கற்றல் பணிகள் தவிர்த்துப் பிற பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படக் கூடாது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தேர்தல் பணிகள், பேரிடர் மேலாண்மைப் பணிகள் போன்றவை விதிவிலக்கு.
குழந்தைகளுக்கு உடல்/மன ரீதியான தண்டனைகள் வழங்குவதை இந்தச் சட்டம் தடைசெய்கிறது. குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு எந்த வகையிலும் தகுதித் தேர்வு வைப்பதையும் சேர்க்கைக் கட்டணம் வாங்குவதையும் ஆசிரியர்கள் பணம் பெற்றுக்கொண்டு தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள் நடத்துவதையும் இந்தச் சட்டம் தடைசெய்கிறது.