

கண்ணை மட்டும் விட்டுவிடுங்கள். மற்றபடி, அடங்கவில்லை என்றாலோ படிக்கவில்லை என்றாலோ தோலை உரித்து எடுங்கள் என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் ஆசிரியர்களிடம் சொல்லும் பொதுவான கூற்று. அப்போதெல்லாம் இதைச் சொல்லித்தான் பள்ளியில் விடுவார்கள். இப்போதோ, ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுவிட்டன, பள்ளியில் கண்டிக்காததால் பல்வேறு குற்றங்கள் பெருகுகின்றன என பேசுவதைக் கேட்கலாம்.
உண்மையில், கோல் கொண்டுதான் பாடம் நடத்த வேண்டுமா? குழந்தைகள் என்ன மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்ட விலங்குகளா? குழந்தைகள் தவறு செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கியே ஆக வேண்டும்.
இல்லையேல், அவர்கள் கெட்டு விடுவார்கள், நாளைய சமுதாயம் பாதிக்கப்படும் என்றால், குழந்தைகளைவிட, வளர்ந்து பெரிய ஆளாகி அதிக அளவில் குற்றம் செய்யும் பெரியவர்களையும் கோல் கொண்டு கற்பிக்கலாமா? அதைவிட இன்று இளம் வயதினர் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகரிக்க நம்மை போன்ற வளர்ந்தவர்களே முதன்மையான காரணம் என்பதை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
தாயும் தந்தையும் ஏன் ஆசிரியர்களும் பொது மக்களும் தனது அன்றாட வாழ்வில் தவறுகள் செய்வதே இல்லையா? தண்டனை தான் தீர்வு என்றால், நாம் மனிதர்களா இல்லை இயந்திரமா? குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன? அன்பைத்தான்.
அன்பின் வழியது உயிர்நிலை: முன்பெல்லாம், கல்வித்துறை அதிகாரி பள்ளிக்கு வரும்போது, பள்ளியே தடபுடலாக தயாராகும். அதிகாரியைப் பார்த்ததும் குழந்தைகள் வணக்கம் வைத்து வரவேற்று, கேட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதெல்லாம் கற்றுக் கொடுப்பார்கள். அதனால், அதிகாரியைப் பார்த்ததும் பல குழந்தைகளுக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விடும். ஆனால், இப்போது அப்படி இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை.
இப்போதெல்லாம் அதிகாரிகள் குழந்தைகளோடு இணக்கமாகப் பழகுகின்றனர். குழந்தை மையக் கல்வி முறையில், குழந்தைகளோடு ஒன்றாக அமர்ந்து உண்ணுதல், குழந்தைகளின் தேவைகளைக் கேட்டு, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றைச் செய்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம் அண்மையில், அச்சிறுப்பாக்கம் வட்டார வள மையத்துடன் இணைந்துள்ள பகல் நேரக் காப்பகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அன்புடன் அளவளாவியது குறித்து அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மன நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். எழுதுகோல் தேடிய சிறுமியிடம் தனது பச்சை நிறப் பேனாவை அளித்து, குழந்தையின் அருகில் அமர்ந்து அவர் எழுதுவதை ரசித்துக் கொண்டே பாராட்டியபோது, அந்த குழந்தையின் மனது மட்டுமல்ல சுற்றியிருந்த அனைவரின் மனதும் அன்பில் நனைந்து குளிர்ந்து.
‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற திருக்குறளின்படி, அன்பினால் குழந்தையை அரவணைத்து உற்சாகப்படுத்தும்போது, அந்த குழந்தையும் சரி, சுற்றியிருப்பவர்களும் சரி, நேர்மறை எண்ணம் அதிகரித்து, தங்களது செயல்பாட்டில் உத்வேகம் கொள்வர்.
’ஊக்குவிப்பவனை ஊக்கு வித்தால், ஊக்குவிப்பவனும் தேக்கு விப்பான்’ என்பது உண்மை. குழந்தைகளிடம் நாம் செய்ய வேண்டுவது தட்டிக் கொடுப்பது மட்டுமே. ஒரு செடிக்குத் தேவையானவற்றை அளித்தால், அது தானாக வளரும். வேகமாக வளரும். அதுபோலத்தான் குழந்தைகளும். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவை அன்பும் அரவணைப்பும், ஊக்கப்படுத்துதலும்தானே தவிர. தண்டனைகளும், கண்டிப்புகளும் அல்ல.
குழந்தைகளை வரவேற்கும் இதயம்: வகுப்பறையிலிருக்கும் கரும்பலகையில் அன்று ஆசிரியரைத் தவிர, வகுப்புத் தலைவர் மற்றும் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர். இன்று அப்படியல்ல. அனைத்துப் பள்ளிகளிலும் கீழ்மட்டக் கரும்பலகை வசதி உண்டு. அனைத்து மாணவர்களும் எழுதிப் பார்க்க சுதந்திரம் உண்டு.
குழந்தைகளை அடித்து இழுத்து வந்த காலம் மாறி, பள்ளியை நோக்கி குழந்தைகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வரும் கற்றல் சுதந்திரம் இன்று வகுப்பறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் படைப்புகள் தோரணங்களாக வகுப்பறையை அலங்கரிக்கின்றன.
பள்ளிக்கூட வாசல்கள் குழந்தைகளை வரவேற்கும் இதயமாகின்றன. அவர்களின் சிந்தனைச் சிறகுகள் சுதந்திர வானில் சிறகடித்துப் பறக்கின்றன. அதிகாரிகளும், ஆசிரியர்களும் இரண்டாவது அன்னையாகக் குழந்தைகளைத் தொடர்ந்து அரவணைப்போம். பெற்றோரும் குழந்தையிடம் வெளிப்படும் குழந்தைமையை ரசித்து, இயந்திர உலகிலிருந்து இதய உலகிற்குக் குழந்தைகள் தொடர்ந்து பயணிக்க உத்வேகம் அளிப்போம்.
கட்டுரையாளர்: எழுத்தாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, செங்கல்பட்டு மாவட்டம்.