

உற்சாகமாகத் தமிழ்ப்பாடவேளை நிறைவுற்றது. மாணவர் மனங்களிலும் முகங்களிலும் மகிழ்ச்சி இன்னும் கொஞ்சம் கூடியது. அடுத்த பாடவேளை என்ன? எனக் கேட்டேன். மாணவர்கள் உரத்த குரலில் உற்சாகத்துடன் உடற்கல்விப் பாடவேளை என்றனர். அனைவரும் எழுந்து நன்றி ஐயா என்றனர். நன்றி. அமருங்கள். இப்போது உடற்கல்வி பாடவேளைதானே? அதனால்... என சில வினாடிகள் இடைவேளை விட்டேன். அனைவர் முகத்திலும் பேரதிர்ச்சி. இந்தப் பாடவேளையிலும் பாடம் நடத்துவாரோ என்று.
அனைவரும் உடனடியாக விளையாடச் செல்லலாம் என்றேன். மகிழ்ச்சிப் பெருக்கோடு ஆடுகளத்துக்கு ஓடினார்கள். இது நடந்தது 10-ம் வகுப்பில். ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் பங்கேற்கிறார்களோ அந்த அளவுக்கு மாணவிகளும் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள். மாணவர்கள் எந்த அளவிற்கு விளையாடுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்களது உடலும் உள்ளமும் புத்துணர்வு பெறுகின்றன.
வாரத்தில் இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த நாட்களில் மாணவர்களின் வருகை இயல்பாகவே அதிகரிக்கிறது. பெரும்பாலும் 6 முதல் 9 ஆம் வகுப்புவரை மாணவர்கள் உடற்கல்விப் பாடவேளைகளில் தடையின்றி விளையாடுகிறார்கள். 10, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுதவேண்டும். அதைக் கவனத்தில் வைத்து விளையாட்டை ஓரங்கட்டு என நாம் கூறுகிறோம்.
உற்சாகமாக படிக்க: நாள் முழுவதும் தொடர் பாடவேளைகளில் இடர்பட்ட பறவையென இருக்கிறது மாணவர் மனம். குறைந்தபட்சம் வாரம் இரண்டு பாடவேளைகளிலாவது விளையாடும்போது உற்சாகம் பெறுகிறார்கள். பள்ளியில் மாணவர்கள் அதிகம் மனம் விட்டுப் பேசிப்பழகும் ஆசிரியராக உடற்கல்வி ஆசிரியர் இருக்கிறார். மாணவர்களின் கவனம் படிப்பிலேயே இருக்க வேண்டும், அதிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றே பொதுவாகப் பெற்றோரும் ஆசிரியர்களும் நினைக்கின்றனர்.
மாணவர்கள் மனதோ கொஞ்ச நேரம் விளையாடினால் படிப்பில் இன்னும் உற்சாகம் கிடைக்குமென நினைக்கிறது. பல நேரம் காலாண்டு, அரையாண்டு, கோடைவிடுமுறைகளில் கூட குழந்தைகளை விளையாட அனுமதிக்காமல் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பி சிரமப்படுத்தும் பெற்றோர்களும் உண்டு.
கிராமங்களில் விவசாயிகள் ஒரு போகம் அறுவடை செய்தபின்பு, அந்த வயலைக் கொஞ்சம் ஆறப்போடுவார்கள். அதில் உரமிடுவார்கள். பண்படுத்தி மாற்றுப்பயிர் இடுவார்கள். அந்த நிலம் அடுத்த அறுவடைக்குத் தன்னைத் தயார்ப்படுத்தும். இது மண்ணுக்கு மட்டுமல்ல. மாணவர்களுக்கும் பொருந்தும்.
ஓடி விளையாடும் மாணவர்களுக்கு, உடல் நலத்தில் குறையிருக்காது. விளையாட்டில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க முன்னுரிமையும், உடனடி வேலைவாய்ப்பிற்கான முன்னுரிமையும் கிடைக்கின்றன. பாப்பாப் பாட்டு பாடிய பாரதி 'மாலை முழுதும் விளையாட்டு' என்றான். மாலை முழுதும் இல்லையென்றாலும் கிடைக்கும் நேரத்தில், விளையாட்டுப் பாட வேளைகளில் விளையாட வாய்ப்பளித்தால் மாணவர்கள் மனதளவில் மிகுந்த உற்சாகம் அடைவார்கள்.
வார்த்தை விளையாட்டு: முன்பு, வீட்டிற்குள் விளையாடினால் வெளியில் போய் விளையாடு என்பார்கள். இப்போது உள்ள தலைமுறை ஆடு களங்களை மறந்து, திறன்பேசியில் இணைய விளையாட்டுகளில் தங்கள் இதயத்தைத் தொலைத்துத் திறனற்றவர்களாக மாறிவருகிறார்கள்.
படிக்கும் காலம் பொற்காலமாக, நற்காலமாக அமைய மாணவர்களைக் கல்வி இணைச் செயல்பாடுகளில் பங்கேற்க ஊக்குவிப்போம். விளையாட்டுகளோடு மாணவர்களின் கற்றலையும் ஊக்குவிப்போம். வகுப்பறையில் பாடங்களுடன் தொடர்புடைய சிறுசிறு வார்த்தை விளையாட்டுகள் மாணவர்களைக் கற்றலோடு ஒன்றிணையச் செய்கின்றன.
கற்றல்- கற்பித்தல் முழுமையடைய மாணவர்களின் பங்கேற்பு முதன்மையானது. உலக வரைபடத்தில் சிறுபுள்ளியாக இருக்கும் ஜமைக்காவை உலகமே வியந்து பாராட்டக் காரணமாக இருந்தார் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட். அவரைப்போன்ற வீரர்கள் நம் வீட்டில், நம் வகுப்பறையிலும் இருக்கலாம்.
நம் தமிழகத்தின் பிரக்ஞானந்தாவைப் போல, மாரியப்பனைப்போல, அஷ்வினைப்போல பலர் நம்முள் இருக்கலாம். வாய்ப்புகள் கிட்டும்போது வெற்றியும் வந்து தட்டும். கற்றலைக், கற்பித்தலை ஊக்குவிக்கும் விளையாட்டை நாமும் ஊக்குவிப்போம். களம் ஆடும் கால்கள், நலம் தரும் கல்வியில்.
- கட்டுரையாளர்: தமிழாசிரியர், ‘மகள் வரைந்த கோடுகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: tamilkavibabu@gmail.com