

நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு என்.எம்.எம்.எஸ். தேர்வு நடத்தி வருகிறது. மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்க MAT தாள் மற்றும் பாடத்திறன் சார்ந்த SAT தாள் என்று இரு தாள்களுடன் ஒரே நாளில் எழுதப்படும் தேர்வு இது.
தேர்வாகும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் ஆண்டிற்கு ரூ.12,000 வழங்கப்படுகிறது. இத்தேர்வானது பின்வரும் காலங்களில் எதிர்கொள்ளவிருக்கும் மற்ற போட்டித்தேர்வுகளுக்கு அடித்தளமாக அமைகிறது. தமிழக மாணவர்கள் இப்போட்டித் தேர்வை திறம்பட எதிர்கொள்வதற்கு ஆசிரியர்கள் பலர் ஒன்றிணைந்து காலாண்டுத்தேர்வு விடுமுறையில் “சொல்லி அடி NMMS” என்ற இணையவழி செயல்பாட்டை உருவாக்கி உள்ளனர்.
மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வாரத்தின் முதல் 4 நாட்கள் கற்றல் வளங்களைப் பெற்றுக்கொள்ளவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இணையவழித் தேர்வை எழுதும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுதி முடித்தவுடனேயே மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு எழுதிய வினாக்களின் அடிப்படையில் தகுந்தவிளக்கமும் பின்னூட்ட மும் உடனுக்குடன் வழங்கப்படும்.
இந்த இணையவழிப் பயிற்சியை மாணவர்கள் எளிதில் கையாள வரும் 02.02.2025 வரை இங்கே கொடுக்கப்பட்டுள்ள QR Code-ஐ நாள்தோறும் ஸ்கேன் செய்து அதில் பதிவேற்றப்படும் பாடங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.