இன்றைய மாணவர் நாளைய தலைவராக ‘மகிழ் முற்றம்’

இன்றைய மாணவர் நாளைய தலைவராக ‘மகிழ் முற்றம்’
Updated on
2 min read

மாணவ, மாணவியரின் தனித்திறமைகளை ஊக்குவிக்க பலவிதமான இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. பல்வேறு மன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடும்போது பல்வேறு விதங்களிலும் பக்குவப்படுகிறார்கள். எதிர்காலத்தில் இவர்கள் நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பு உண்டு. சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், கருணை, மனிதநேயம், அகிம்சை, சமாதானம், தோழமை போன்ற நற்பண்புகள் வளர்கிறது.

இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்த்திட நவம்பர் 14-ம் தேதி ‘மகிழ் முற்றம்’ என்ற புதிய செயல்பாடு தொடங்கப்படுகிறது. 1 முதல் 12 வகுப்பு மாணவர்களிடையே அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவத் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இவர்கள் நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று பதவியேற்பர். மாதிரி நாடாளுமன்றம், சட்டமன்றம் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குழுவில் இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும்.

ரூ.2 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத ஒருமித்த முடிவு, ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்துதல், தலைமைப் பண்பை வளர்த்தல், அனைத்து மாணவர்களுக்கு வாய்ப்பு, நேர்மறை நடத்தைகளை வலுவூட்டுதல், கற்றல் திறன் மேம்பாடு, மாணவர்கள் விடுப்பு எடுப்பதைக் குறைத்தல், மாணவர்களின் பங்களிப்பை அதிகரித்தல், ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவித்தல் ஆகியன முதன்மை நோக்கமாகும்.

5 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் மாணவர் குழு அமைப்பின் தலைமை பொறுப்பாளராக இருத்தல் வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கான குழு, குலுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவர்.

மாணவர் தலைவர்: ஒவ்வொரு பள்ளியிலும் அப்பள்ளியின் உயர் வகுப்பில் பயிலும் மாணவர்களுள் ஒவ்வொரு மாணவர் குழுவிற்கு இரண்டு தலைவர்கள் நியமிக்கப்படுவர். இருபாலர் பயிலும் பள்ளியில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி இருவரும் குழு தலைவர்களாக செயல்படுவர்.

ஒவ்வொரு வகுப்பிலும் மற்றும் வகுப்பிற்கான பிரிவிலும் ஒவ்வொரு குழுவிற்கான வகுப்பு தலைவர் நியமிக்கப்படுவர். குலுக்கல் முறையில் இரண்டுக்குமான தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு குழுவிற்குமான மாணவர் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள் மற்றும் தலைமை பொறுப்பு ஆசிரியர் குழுவிற்கான பொறுப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கான பதவியேற்பு விழாவானது குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி நடைபெறும்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுதல் வேண்டும். பள்ளி அளவில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பு கணக்கிடப்பட்டு மாத இறுதியில் அதிக புள்ளிகளை பெறும் குழுவானது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி குழுவிற்கான வண்ணக் கொடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கு எதிர்வரும் மாதம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மாதமும் பெறும் புள்ளிகள் இதற்கான தனியான தகவல் பலகையில் குறிப்பிட்டுக் காட்சிப்படுத்தப்படும்.

ஆட்சியர் முதல் ஆசிரியர் வரை: 2024-25-ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் குழு (House System) அமைப்பினை ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமுறைக்கு வருகிறது. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் இந்த ‘மகிழ் முற்றம்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள ஆட்சியர் முதல் ஆசிரியர் வரை அனைவரும் ஒன்றிணைந்து செவ்வனே செயல்முறைப்படுத்தினால் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களாக உருவெடுப்பது உறுதி.

- கட்டுரையாளர்: ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம் ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல்; தொடர்புக்கு: choraamu@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in