

பொருளாதாரம் காரணமாகப் படிப்பு தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. "நன்கு படித்து உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட வேண்டும்.
வறுமையில்லாத சமத்துவம் வாய்ந்த அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை நாம் வருங்காலத்தில் உருவாக்க வேண்டும். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும். கல்வி கற்க தடங்கல் ஏற்பட்டால் அதை உடைத்தெறிந்து மாணவ சமுதாயம் வெற்றி பெற வேண்டும்" என்று திட்டத்தின் தொடக்க விழாவில் முதல்வர் பேசிய வார்த்தைகளை மாணவர்கள் மனதில் பதிக்க வேண்டும்.
உயரிய நோக்கம்: மாதந்தோறும் உதவித்தொகை பெறும் மாணவர்கள் சிலரிடம் பேசும் போது அதில் ஒருவர், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்கி விடுவேன். மாதந்தோறும் அரசு கொடுக்கும் பணத்தில் இ.எம்.ஐ., கட்டி விடுவேன் என்றதும் அதிர்ச்சியாய் இருந்தது. அரசாங்கம் உங்களுக்குக் கொடுக்கும் பணம் முகம் தெரியாத பல லட்சம் பேர் செலுத்தும் வரிப் பணமாகும்.
உயர்கல்வி பயில்வதற்கு உங்களுக்கு மட்டுமல்லாது, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கில் '"ஊட்டச்சத்தை உறுதி செய்", தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு "இல்லம் தேடி கல்வி”, 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு "வாசிப்பு இயக்கம்", குடிமைப்பணி தேர்வில் முதல்நிலை தேர்வுக்குத் தயாராகும் 1000 மாணவர்களைத் தேர்வு செய்து மாதம் ரூ. 7500 வழங்குதல், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இவைதவிர 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு “முதலமைச்சரின் திறனறி தேர்வு" மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பிளஸ் 2 படிக்கின்ற வரை மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது. மேலும் காலை உணவுத் திட்டம் இவையெல்லாம் கல்வி சார்ந்த அரசின் முன்னோடி திட்டங்களாகும்.
புதுமைப்பெண் திட்டம் மூலம் 2.73 லட்சம் மாணவிகள், தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.370 கோடியும், ரூ.401.47 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் மாணவர்களை வளர்க்கும் உயரிய நோக்கத்தில் அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பயனுள்ள வகையில்... மாதந்தோறும் நீங்கள் வாங்கும் ஆயிரம் ரூபாயில் முதல் செலவு ஒரு தினசரி நாளிதழுக்காக இருக்க வேண்டும். எத்தனை பேர் வீடுகளில் நாளிதழ் வாங்கி வாசிக்கிறீர்கள்? மாணவர்கள் ஏதாவது ஒரு நாளிதழை தொடர்ந்து வாசிக்கும்போது அவர்களின் பார்வை விரிவடைகிறது. நாட்டு நடப்பு, உலக நடப்புகளைத் தெரிந்து கொள்கிறார்கள்.
புத்தகம், நாளிதழ், பருவ இதழ்களைக் கையில் எடுத்துப் படிக்கும்போது அது புது வித அனுபவமாக அமையும். நீண்ட நேரம் ஸ்மார்ட்போனில், கம்ப்யூட்டரில் வாசித்து விட முடியாது. பாடம் தொடர்பான புத்தகங்கள் வாங்க, பொது அறிவு இதழ்கள், தன்னம்பிக்கை நூல்கள், வேலை வழிகாட்டி நூல்கள், என மாதம் ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கி விடுங்கள். தேர்வு கட்டணம் உள்ளிட்ட சில அத்தியாவசிய கட்டணங்களுக்கு இப்பணத்தை பயன்படுத்துங்கள்.
நண்பர்கள், தோழிகளுடன் சேர்ந்து அருகில் உள்ள கோட்டை, வேளாண் பண்ணை, கால்நடை பண்ணை, தொழிற்சாலைகள், அருங்காட்சியகம், நினைவு மண்டபம் உள்ளிட்டவற்றை மாதம் ஒருமுறை சென்று பார்வையிட்டு அதன் மூலம் அனுபவம் பெறலாம். இப்படியான இடங்களுக்குச் செல்வதன் மூலம் தொழில் முனைவோராக உருவாகலாம். புகை, மது, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது அதிகரிக்கிறது.
பெற்றோர்களுக்கும் அரசுக்கும் இது கவலையளிக்கிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது, வாழ்க்கை பாதை மாறுகிறது, எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிறது, படிப்பு கெடுகிறது பெற்றோர்கள் தலைகுனிகிறார்கள். கல்வி கற்க வேண்டிய பருவத்தில் காவல்துறையின் விசாரணைக்கு உட்பட வேண்டியதாகிறது. உடல் பலம், மனோபலம், அறிவு பலத்துடன் மாணவர்கள் இருக்க வேண்டும்.
புதுமைப் பெண்களே... தமிழ்ப் புதல்வர்களே... காந்தியின் மூன்று குரங்கு பொம்மையை மனதில் நிறுத்துங்கள். நல்லதைப் பாருங்கள், நல்லதைப் பேசுங்கள், நல்லதைக் கேளுங்கள். அரசு வழங்கும் உதவித் தொகையை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தும்போது அது உங்களை உயர்த்தும் ஏணியாக அமையும்.
- கட்டுரையாளர்: ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி அய்யம்பாளையம், ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல்; தொடர்புக்கு: choraamu@gmail.com