

ஒரு நல்ல இடத்தை வாடகைக்குப் பிடிச்சு, மதிய சாப்பாடு, வாசிக்க தேவையான புத்தகங்கள், உற்சாகப்படுத்த பரிசுகள், உடன் தன்னார்வலர்கள் என எல்லாம் தயார் செய்து வாசிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சோம். மாணவர்கள் வந்தாங்க. ஆனா புத்தகம் வாசிக்க ஆர்வம் இருந்தும் சுணக்கம் தெரிஞ்சது. ஏன், என்ன காரணம்னு தெரியல! இளம் தலைமுறையை வாசிப்பில் ஈடுபடுத்த பல முயற்சிகளை மேற்கொள்ளும் களச்செயல் பாட்டாளர் ஒருவர் சமீபத்தில் சோர்வுடன் பகிர்ந்து கொண்ட தகவல் இது.
குழந்தைகளின் வாசிப்பு தொடர்பாக பேசும் பலரும் சொல்வது:
# வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
# குழந்தைகள் பார்வையில் இருக்குமாறு புத்தகங்களை வைக்க வேண்டும்.
# பெரியவர்கள் நாமும் புத்தகம் எடுத்து அவர்கள் முன்பாக வாசிக்க வேண்டும்.
# குழந்தைகளுக்குப் புத்தகம் வாசித்து கதைச் சொல்ல வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்தாலும், குழந்தைகளால் வாசிப்புக்குள் போக முடிவதில்லை என்பது தான் கசப்பான உண்மை. இதற்கான காரணங்களைக் கண்டறிய, என் வகுப்பு மாணவர்கள் வாசிப்பில் ஈடுபடும்போது தொடர்ச்சியாக கவனிக்க ஆரம்பித்தேன்.
எது தடுக்கிறது? - பிடித்த புத்தகங்களை அட்டைப்படம் பார்த்து அவர்களே தேர்ந்தெடுத்தனர். சிறிது நேரத்தில் என் மாணவி ஒரு புத்தகத்தை எடுத்து வந்தார். முதல் பக்கத்திலே பல சொற்களை அடிக்கோடிட்டு இருந்தார். வாசிக்க சிரமமாக இருக்கிறது என்றார். வாசிக்கச் சொல்லித் தந்ததும், அந்த சொற்களுக்கு அர்த்தம் கேட்டார்.
அர்த்தம் புரியாததால் கதையைப் புரிந்து கொள்வதிலும் சிக்கல் இருந்தது. கடின சொற்கள் வாசிக்கும் ஓட்டத்திற்குத் தடையாக இருப்பதால், இயல்பாகவே வாசிக்கும் ஆர்வத்தை அவர் இழப்பதைப் பார்த்தேன்.
"ஏதாவது விளையாடலாமா டீச்சர்?" என வாசிப்பதைத் தவிர்த்தார். அடுத்தடுத்து பல மாணவர்களும் வாசிப்பதில் இருந்த ஆர்வத்தை இழந்ததை கவனித்தேன். அதே நேரத்தில் மிக நன்றாக படிக்கும் சில மாணவர்கள் கதை வாசித்து பகிர்ந்ததும் நடந்தது. அப்படியென்றால் பெரும்பான்மை குழந்தைகளின் வாசிப்புக்குத் தடையாக கடின சொற்கள் முக்கியகாரணியாக இருப்பதை அறிய முடிகிறது.
எளிமை எனும் சிரமம்: பிரபல அமெரிக்கக் குழந்தை எழுத்தாளர் டாக்டர் சியூஸ் (Dr.Seuss) எளிய மொழியில் குழந்தைகளுக்கு எழுத வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். "பெரியவர்களுக்காக எழுதப்படும் இரண்டு அத்தியாயங்கள், குழந்தைகளுக்காக எழுதப்படும் இரண்டு வாக்கியங்களுக்கு சமம். மிகுந்த சிரத்தை எடுத்து எளிமையாக எழுத வேண்டும்" என்கிறார்.
மேலும் டாக்டர் சியூஸிடம் ஒரு சவால் விடுக்கப்பட்டது. முதல் வகுப்பு குழந்தைகளை வாசிப்பில் கொண்டு வர வெறும் 250 எளிய சொற்களைக் கொடுத்து, அவற்றை வைத்து ஒரு கதை எழுதச் சொன்னார்கள். ஒரு கதை எழுத இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகுமா!? அதுதான் இல்லை.
250 எளிய சொற்களில் ஒரு கதை எழுத அவர் எடுத்துக்கொண்ட காலம், ஒரு வருடம். அந்தக் கதைதான் உலகப் புகழ் பெற்ற "The Cat in the hat". குழந்தைகளுக்கு எழுதும் கதைகளில் ஏன் இவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டும் எனத் தோன்றும். வாசிப்புக்குள் நுழையும் குழந்தைகளுக்கு நாம் தரும் புத்தகங்களும் பாடப்புத்தகங்கள் போன்ற உணர்வையே தந்துவிடக்கூடாது.
இங்கு வாசிப்பை குழந்தைகள் ரசித்து செய்யாமல் சுமையாக, வீட்டுப்பாடமாக மட்டுமே பார்க்கிறார்கள். பல பள்ளிகளில் வாசிக்கப் புத்தகங்கள் தந்ததும், "இத அப்படியே படிச்சி மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கனுமா?" என்றனர். பொதுவாக குழந்தைகள் வாசிக்க மறுத்தால் அவர்கள் மீதுதான் ஏதோ தவறு என்று நாம் நினைப்பதை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். இணைய பயன்பாடு, செல்பேசி, தொலைக்காட்சி போன்றவை குழந்தைகள் வாசிப்பு நோக்கி நகர தடையாக இருப்பதாக பேசுகிறோம்.
இதே இணைய உலகில் வெளிநாடுகளில் குழந்தைகளுக்காக எழுதப்படும் புத்தகங்கள் சர்வசாதாரணமாக 250 மில்லியன் பிரதிகள் விற்பதையும் பார்க்கிறோம். ஆகையால் எளிமையாக எழுத வேண்டிய கட்டாயம் சிறார் எழுத்தாளர்களுக்கு இருக்கிறது.
மறுபுறம் குழந்தைகள், வாசிப்பு நோக்கி நகராமல் இருப்பதற்கு காரணம் புத்தக தேர்வில் நாம் செய்யும் தவறாகவும் இருக்கலாம். ஜே. கே. ரவுலிங் கூறியதுபோல், "உங்களுக்கு வாசிக்கப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இன்னும் சரியான புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை."
- கட்டுரையாளர்: அரசு பள்ளி ஆசிரியர், சிறார் எழுத்தாளர்; தொடர்புக்கு: muthukumari.15@gmail.com