

தூங்குவது போல் நடிப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். வேட்டையாடி விலங்கைக் கண்டால் சட்டென்று அருகே உள்ள புதரில் நுழைந்து ஆடாமல் அசையாமல் மடிந்ததுபோல் நடித்து ஏமாற்றுகிறது பகடைப் பாம்பு. மடிந்த உடலின் உள்ளே நச்சு கிருமிகள் பெருகி ஆபத்து விளைவிக்கும். எனவே ஒருசில விலங்குகள் தவிர மற்றவை இறந்த இரையை உட்கொள்வதில்லை.
தன்னை வேட்டையாட வரும் விலங்கிடமிருந்து தப்பிக்க சில விலங்குகள் திடீரென கைகால் உடலை நீட்டி ஆட்டி எதிராளியைத் திடுக்கிடச் செய்யும். சில நீர்வாழ் உயிரினங்கள் நீல நிற பொருளை துப்பி எதிராளியைத் திக்குமுக்காடச் செய்யும். சிலவகை விலாங்கு மீன்கள் மின் அதிர்ச்சியைக் கூட தரும்.
தப்பிக்க இத்தனை வழிகளா? - அமெரிக்காவைச் சேர்ந்த வர்ச்சீனிய தூவால் மான் தன்னை வேட்டையாட வரும் விலங்கை கண்டால் நிமிடத்துக்கு 155 லிருந்து வெறும் 38 டாக தன் இதய துடிப்பை குறைத்துக்கொண்டு கீழே விழுந்து கிடக்கும். வேட்டையாடி விலங்கு அதன் அருகில் வந்து மோப்பம் பிடித்து பார்த்தாலும் இதயத் துடிப்பை எளிதில் கேட்க முடியாது.
இறந்த மான் என நினைத்து வேட்டையாடி விலங்கு செல்ல, சற்றென்று துள்ளிக் குதித்து மான் தப்பிவிடும். மான் மட்டுமல்ல பறவைகளிடமிருந்து தப்பிக்க சில வகை லார்வா புழுக்கள், பர்மிஸ்டர் இலை தவளை, சாதா உழவாரன் எனும் குருவி, பகடைப் பாம்பு உட்பட சில வகை பாம்புகள் என பல உயிரிகள் பிணம் போல நாடகமாடி எதிரியிடமிருந்து தப்பிப் பிழைக்கும்.
‘டைஸ் பாம்பு’ எனப்படும் பகடைப்பாம்பு கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட நச்சு அற்ற பாம்பு வகையாகும். எதிராளியைக் கண்டால் ஆடாமல் அசையாமல் வாயை பிளந்து பகடைப் பாம்பு பிணம் போல காட்சி தரும். ஆயினும் சில கூடுதலாக ரத்த வாந்தி எடுத்தும், உடல் முழுவதும் மலம் மற்றும் உமிழ்நீர் பூச்சை பூசிக்கொண்டும் அருவெறுப்பு தோற்றம் தந்து கூடுதலாக நடிக்கும்.
என் வழி தனி வழி! - ஏன் சில பகடைப்பாம்புகள் மட்டும் ரத்த வாந்தி எடுத்தும் மலத்தையும் உமிழ்நீரையும் பூசிக்கொண்டும் காட்சி தருகின்றன? செர்பியாவில் உள்ள பெல்கிரேட் பல்கலை உயிரியலாளர்கள் வுகாசின் பிஜெலிகா (Vukasin Bjelica), அனா கோலுபோவிக் (Ana Golubovic) ஆகியோர் இதனை பரிசோதனை செய்தனர். வடக்கு மாசிடோனியாவில் உள்ள கோலெம் கிராட் தீவில் 263 காட்டுப் பகடை பாம்புகளைப் பிடித்தனர். பின்னர் இந்த பாம்புகளை தரையில் விட்டுவிட்டனர்.
அப்போது ஆபத்தை உணர்ந்த நொடியில் 40% பாம்புகள் வெறும் வாயை ஆவென பிளந்து நாக்கை வெளியே தள்ளி ஆடாமல் அசையாமல் 40 விநாடிகள் வரை பாசாங்கு செய்தன. 50% பாம்புகள் தம் மீது மலம் உமிழ்நீர் பூச்சை பூசிக் கொண்டு வாயை திறந்து நாக்கை வெளியே தள்ளியபடி பிணம் போல 2 நொடிகள் மட்டுமே கிடந்தன. 10% பாம்புகள் கூடுதலாக வாயில் ரத்தத்தை கக்கி அவையும் 2 நொடிகளுக்கு குறைவாகவே நடித்தன.
வாயை ஆவென பிளந்து, நாக்கு வெளியே தள்ளி, இதயத் துடிப்பைக் குறைத்து மூச்சு விடாமல் உடல் சிலிர்க்காமல் பிணம்போல சில நொடிகள் காட்சி தரலாம். ஆனால், இதே நிலையில் நீடித்து இருக்க முடியாது.
வேட்டையாடி உடனே அகலாமல் சந்தேகக் கண்ணுடன் சுற்றி சுற்றி வந்தால் நடிப்பு கலைந்து அந்த உயிரி அகப்பட்டுவிடும். எனவே ‘ஓவர் ஆக்டிங்’தான் உடனடியாக உதவும். வேட்டையாடியின் தலை திரும்பியதும், சட்டென்று நம்ம பகடைப்பாம்பு தப்பி ஓடிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com