உன்னால் முடியும் தம்பி தம்பி...அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...

உன்னால் முடியும் தம்பி தம்பி...அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...
Updated on
2 min read

‘‘அக்கா உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்ற குரல் கேட்டு திரும்பினேன். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை நின்று கொண்டிருந்தாள். சொல்லுடா என்றேன். தயக்கத்தோடு கொஞ்ச நாளாகவே என்னால படிக்க முடியல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்னோட ஸ்கூல்ல இருந்த வரைக்கும் அப்படி இல்ல’’ என்று தயங்கித் தயங்கிப் பேசினாள்.

"என்ன பயம். ஏதாவது பிரச்சினையா? தைரியமா சொல்லுடா என்னால முடிஞ்ச உதவி செய்கிறேன்" என்றேன். மெதுவாக அவள்தோளில் கை போட்டு தட்டிக் கொடுத்தபடியே அவள் கண்களைப் பார்த்தேன்.

என் கண்களை பார்த்தவுடன் கீழே குனிந்தவரின் கண்ணீர் துளிகள் என் கால் கட்டை விரலை நனைத்தது. வாரி அணைத்தேன். கண்ணீர் துளிகள் தோள்களை நனைத்து. என்னை இறுக்கக் கட்டிப்பிடித்துக் கொண்டவள் தன்னை ஆசுவாசப்படுத்த இரண்டு மூன்று நிமிடங்களில் எடுத்துக் கொண்டாள்.

மெதுவாக என் அணைப்பிலிருந்து விடுவித்து, என் கண்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தாள். "நான் எங்கஸ்கூல்ல படிக்கும்போது நான் தான் எல்லாத்திலும் ஃபர்ஸ்ட் வருவேன்.ஆனா இங்க வந்த பின்னாடி என்னவிட நிறைய பேரு நல்லா படிக்கிறவங்க இருக்கிறதப் பார்த்தேன்.

அது என்னால ஏத்துக்க முடியல. மார்க்கு குறைஞ்சிடுச்சு அக்கா. என்னோட பள்ளிக்கூடத்தில் எடுத்தமார்க்கை விட ரொம்பக் குறைஞ்சிடுச்சு. என்னவிட நல்லாப் படிக்கிறவங்களைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு" என்றாள்.

அந்த பள்ளி ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஏற்படுத்தி இருக்கும் எலைட் பள்ளி.‌ ஒரு பெருமூச்சு எடுத்து என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். "பேசலாம் டா" என்று கூறி அவளிடம் இருந்து விடைபெற்றேன். அடுத்தநாள், அவள் படிக்கும் பள்ளியில் நான் பேசினேன். அப்போது, ஆறாம்வகுப்பில் இனி உங்கள் குழந்தைக்கு படிப்பு வராது என்று கூறி பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னி ரெண்டாம் வகுப்பு, மெக்கானிக் ஷாப், லாட்டரி டிக்கெட் விற்றல் போன்ற வேலைகளைச் செய்து கொண்டே பிரைவேட்டில் தேர்வு எழுதினார். பல போராட்டங்களுக்குப் பின்பு கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்து வெளியில் வந்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 எழுதி, ஐஏஎஸ் ஆக ஆசைப்பட்டு, முடிவாக ஐ.ஆர்.எஸ் ஆகி இன்று பணியில் இருக்கும் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் கதையைக் கூறினேன்.

நாமெல்லாம் ஒரு பக்கத்தை மனப்பாடம் செய்ய வேண்டும் என்றால் 10 முறை 20 தடவை, அதிகபட்சம் 30 முறை என வைத்துக் கொண்டாலும் அவர் ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்ய 300 தடவை படிக்க வேண்டுமாம். அவருக்கு அவரே போட்டியாளர். எழுத்துக்களின் வடிவத்தைக்கூட சரியாக உணர்ந்து கொள்ள முடியாத ஒரு டிஸ்லெக்ஸியா மாணவராகிய அவரால் சாதிக்க முடிந்தது.

உங்களுக்கு நீங்களே போட்டியாளர். கல்வி மட்டுமே உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று சுமார் 20 நிமிடங்கள் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் பற்றிப் பேசிவிட்டு வெளியேறும் போது ஓடி வந்த அந்தப் பெண் குழந்தை என் கரங்களைப் பற்றிக் கொண்டு "அக்கா எனக்காகத் தானே பேசினீங்க? நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுல இருக்கு.

எனக்குநான்தான் போட்டியாளர் என்று கூறிவிட்டு, என்னை கட்டி அணைத் தாள். அப்போது அவளது ஆனந்த கண்ணீர் என் தோள்களை நனைத்தது. வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாற்றில் இடம் உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கு இடமே இல்லை. உங்களால் முடியும் குழந்தைகளே!

- கட்டுரையாளர் கதை சொல்லி, ஈரோடு, (மந்திரக் கிலுகிலுப்பை, கடலுக்கு அடியில் மர்மம் உள்ளிட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்), தொடர்புக்கு: sarithasanju08@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in