Published : 28 Feb 2024 04:29 AM
Last Updated : 28 Feb 2024 04:29 AM

மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா: அறிவியலின் வேலை அணுகுண்டு தயாரிப்பதல்ல; மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதே!

வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எந்த எந்த வேதிப்பொருள்களால் ஆனது? என கேட்டால் அது எப்படி சொல்ல முடியும் நிலா எதனால் ஆனது எனக் கேட்டாலாவது சந்திரயான் விண்கலத்தை அனுப்பியோ அல்லது மனிதனே நிலாவுக்கு நேரில் சென்றோ சோதனை செய்து கூற முடியும்.

சூரியன் போன்ற கொதிக்கும் நட்சத்திரங்கள் எதனால் ஆனது என அறிய ஆள்களை அனுப்பவா முடியும்? அறிய முடியும் அதுவும் பூமியிலிருந்தே என்று ஒரு விஞ்ஞானி அறிவித்தார். அவர் அதற்கு ஒரு கோட்பாட்டையும், ஒரு சமன்பாட்டையும் தந்தார். அவர்தான் மேக்நாட் சாகா.

அவர் அமெரிக்கரோ ஐரோப்பியரோ அல்ல. இந்தியர் குறிப்பாக வங்காளி. அவர் தந்த கோட்பாடு வெப்ப அயனியாக்ககோட்பாடு; அவர் தந்த சமன்பாடு சாகா சமன்பாடு. இக்கண்டுபிடிப்புகளால் மேக்நாட் சாகா ‘நவீன வானியற்பியலின் தந்தை', ‘வானியலின் டார்வின்’ என அழைக்கப்படுகிறார். மேக்நாட் சாகா 1893 அக். 6-ம் தேதி டாக்கா நகருக்கு அருகில் உள்ள சியரத்தாலி குக்கிராமத்தில் பிறந்தார். தற்போது இந்த இடம் வங்கதேசத்தில் உள்ளது.

மறைக்கப்பட்ட அறிவியல் பேரறிஞர்: மேக்நாட் சாகாவின் தந்தை பெட்டிக் கடைக்காரர். ஏழ்மையில் வாழ்ந்த சிறு வியாபாரி; படிப்பு வாசனை அறியாதவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் மேக்நாட் சாகாவும் தன் வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்தார்.

இந்த தீண்டாமை இன்றுவரை அவர்மீது சுமத்தப்படுவதால் பள்ளி, கல்லூரிகளில் அவரைப் பற்றி பாடம் வைக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் இப்படியொரு விஞ்ஞானி இருந்தார் என்பதுகூட அறிவியல் படித்தவர்களுக்குக் கூட தெரியாது! மேக்நாட் சாகா சிறுவயது முதலே படிப்பில் கெட்டி. உள்ளூரில் தொடக்க கல்வியை முடித்து அப்பாவின் எதிர்ப்பையும் மீறி மேற்படிப்பை தொடர்ந்தார்.

12 வயதிலேயே இந்தியவிடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டார். பின் தன் விடாமுயற்சியால் டாக்காவில் மேல்நிலைக் கல்வியை முடித்தார். பாடப் புத்தகங்களை மட்டுமல்லாமல் இலக்கியம் முதலான ஏராளமான நூல்களை படித்தார்.

மேல்நிலைக் கல்வி முடித்து கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் கணிதத்தில் பிஎஸ்ஸி, எம்எஸ்ஸி பட்டங்கள் பெற்றார். அங்கேயே விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார்.

அங்கு ஜெகதீஸ் சந்திரபோஸ், பி.சி.ராய், சி.வி.ராமன் போன்ற அறிவியல் மேதைகளும் பணியாற்றினர். இந்த காலகட்டத்தில்தான் 1920-ல் சர்வதேச அறிவியல் பத்திரிகை ஒன்றில் வானியலின் ரகசியங்களைத் திறந்த மந்திர சாவியாக சாகாவின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியானது. அந்த கட்டுரைகள் சாதாரண வானியலை நவீன வானியற்பியலாக மாற்றின.

சமூக வளர்ச்சிக்கான அறிவியல்: விடுதலைக்குப் போராடி சிறை சென்று வாழ்விழந்த வீரர்களுக்கு தன் சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் பணம் அனுப்பி உதவினார். தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்று சமூகநீதிக்காகக் குரல் கொடுத்தார். இதற்காக நிறைய அங்கீகாரங்கள், ஆராய்ச்சிக்கான உதவிகள் அவருக்கு மறுக்கப்பட்டது.

மேக்நாட் சாகாவைப் பொருத்தவரை ஒரு விஞ்ஞானி என்பவன் மக்களை விட்டும் மக்கள் போராட்டங்களை விட்டும் விலகி நிற்க கூடாது. அறிவியல் மேதை என்ற மமதையில் உச்சாணிக் கொம்பில் இருந்து விடாமல் மக்களிடம் இருந்து கற்று மக்களுக்கே சேவை செய்யவேண்டும்.

அறிவியலின் துணை கொண்டு மக்களின் பிரச்சினைகளான கல்வியின்மை, பட்டினி, நோய் ஆகியவற்றை வெற்றி கொள்ள அறிவியலை ஆயுதமாக்க வேண்டும். அவரைப் பொருத்தவரை அறிவியலின் வேலை அணுகுண்டு தயாரிப்பது அல்ல; மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது.

இந்த கருத்துகளை நாட்டின் தலைவர்கள், அறிவு ஜீவிகள் ஆகியோரிடம் பரப்ப ‘சயின்ஸ் அண்டு கல்ச்சர்' என்ற பத்திரிக்கையை நடத்தினார். நாடு விடுதலை அடையும் முன்பே, பொருளாதார திட்டமிடல், ஆற்றின் குறுக்கே பிரமாண்ட அணைகளை கட்டி விவசாயம், மின்சார உற்பத்தி, வெள்ளத் தடுப்பு ஆகியவற்றை மேம்படுத்துவது, தாய்மொழிக் கல்வி, ஆகிய கருத்துகளை முன்வைத்த முன்னோடி அவர்.

நாடாளுமன்றத்தில் கர்ஜனை: அணுக்கரு இயற்பியல் வளர்ந்து வந்தபோது இந்தியாவில் முதல் முறையாக எம்எஸ்ஸி அணு இயற்பியலை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாகாவிற்குப் பிடித்த தலைவர். சமதர்ம கருத்துகளை மேக்நாட் சாகா ஆதரித்தார்.

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சித்தாந்தத்தை எதிர்த்தார். நாடு விடுதலை அடைந்த பிறகு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் கொல்கத்தாவில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்று நாடாளுமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக கர்ஜித்தார்.

அணு ஆராய்ச்சியில் ஒளிவுமறைவு கூடாது என்று வற்புறுத்தினார். அகதிகள் மறுவாழ்வு, தடுப்புக்காவல் சட்டம் போன்ற கருப்பு சட்டங்கள் எதிர்ப்பு, ஏகாதிபத்திய சார்பற்ற சுயசார்பு பொருளாதாரம், அணு ஆயுதமற்ற உலகம் என சாகா போராடாத, குரல் கொடுக்காத துறையே இல்லை.

மேக்நாட் சாகா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவியலாளர்கள் கட்டாயம் பங்குபெற வேண்டும் என்றார். இந்த நோக்கத்திற்காக பல அறிவியல் கழகங்களை உருவாக்கினார். அணுக்கரு இயற்பியல் நிறுவனம் எனும் ஆய்வு நிறுவனத்தை கொல்கத்தாவில் உருவாக்கினார்.

அவருக்குப்பின் அது சாகா அணுக்கரு ஆய்வு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மாகாணங் களை மொழி வாரியாகப் பிரித்து மொழி வாரி மாநிலங்களை உருவாக்குவதில் அன்றைய மத்திய அரசு காட்டிய மெத்தனம் சாகாவின் ரத்த கொதிப்பை அதிகமாக்கியது. இதனால் தன் நாடாளுமன்ற காலத்தை முழுமையாகக் கூட முடிக்காமல் 1956 பிப்ரவரி 16-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டிய மகத்தான மக்கள் விஞ்ஞானி அவர்.

- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘மேக்நாட் சாகா: ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை’ நூலாசிரியர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x