Last Updated : 28 Feb, 2024 04:20 AM

 

Published : 28 Feb 2024 04:20 AM
Last Updated : 28 Feb 2024 04:20 AM

இந்திய அறிவியல் தினம் கொண்டாட காரணமான ராமன் விளைவு | தேசிய அறிவியல் நாள் 2024

உலகமே வியந்து பார்த்த அறிவியல் உண்மை அது. இன்று நாம் தேசிய அறிவியல் தினத்தை அந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்ட நாளை நினைவுகூரும் விதமாக கொண்டாடுகிறோம். அந்த கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு கூட கிடைத்தது. ஆனால், அந்த கண்டுபிடிப்பிற்காக விஞ்ஞானி செலவழித்த தொகை ரூபாய் 200 மட்டும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா? ஆம் நோபல் பரிசினைப் பெற பல லட்சம் செலவிலான ஆய்வுக்கூடம் தேவையில்லை. பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவிலான ஆய்வுகள் தேவையில்லை.

இந்த உண்மையின் பின்னணியில் அறிவியல் எங்கும் காணக்கிடைப்பது. எளிமையானது உண்மையானது என்பதை உலகுக்கு உணர்த்திய விஞ்ஞானி வேறு யாருமல்ல. நமது சர். சி.வி ராமன். அந்த கண்டுபிடிப்பே ‘ராமன் விளைவு’ என்ற பெயரில் ஒளிச்சிதறலின் அறிவியலை விளக்குகிறது.

இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் உயிருக்கும் உணர்வுக்குமே இந்தியர்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில் அறிவியலை எங்கே தேடுவது!? ஆனாலும் ராமன் போன்றவர்கள் சோர்ந்துவிடவில்லை. அடிப்படையில் சென்னை மாநிலக்கல்லூரியில் பி. ஏ ஹானர்ஸ் மற்றும் முதுகலைப் படிப்பையும் முடித்தார். அதன் பின்னர் அறிவியலை மேலும் கற்க விரும்பினார்.

ஆனால், வாழ்க்கை அவரை கணக்காளராகப் பணியாற்ற கொல்கத்தாவுக்கு அனுப்பியது. அதுவும் அவருக்கு நன்மை பயப்பதாகவே முடிந்தது. கொல்கத்தாவில் பணியாற்றியபோது ஒரு நாள் டிராம் வண்டியில் பயணித்துக்கொண்டிருக்கிறார். வழியில், இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான அமைப்பு என்ற (Indian association for Cultivation of Science) பெயர்ப்பலகையைக் காண்கிறார். உடனடியாக ஓடும் டிராமிலிருந்து குதித்து அந்நிறுவனத்தில் சரண் புகுந்தார்.

நீல நிற வானம் எதனால்? - இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்காக 1876 ல் மகேந்திரலால் சர்க்காரால் தோற்றுவிக்கப்பட்ட முதல் நிறுவனம் இதுவே. பணி செய்துகொண்டே மாலை நேரத்தில் அந்நிறுவனத்தில் தமது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அங்குதான் அவருக்கு கே எஸ் கிருஷ்ணன் என்ற அறிவியல் அறிஞரோடும் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

உண்மையில் சென்னையில் படிப்பை முடித்ததும் இவர் அயல்நாடு சென்று கல்வி பயிலவே பலரும் யோசனை கூறினர். ஆனால், இவரது உடல்வாகு வெளிநாடு சீதோஷணத்துக்கு ஒத்துவராது என்று மருத்துவர் கூறவே இந்திய விஞ்ஞானியாகத் தப்பினார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியர் பணி கிட்டியது.

அந்நாளைய வழக்கப்படி இந்தியப் பல்கலைக்கழகங்களில் பணியில் சேர்வோர் அயல்நாட்டிற்குச் சென்று பயிற்சி பெற்று வரவேண்டும். ஏற்கெனவே அடிமை இந்தியாவில் இந்தியர்கள் பலரும் அறிவாளிகளாயிருந்தும் சமமாக நடத்தப்படவில்லை.

உடல்நிலை காரணமாகவும் சுயமரியாதை மேலிட்டவராகவும் இருந்ததால் ராமன் அயல்நாட்டிற்குப் பயிற்சி பெற செல்வதில்லை என்று முடிவெடுத்தார். அதற்கும் கொல்கத்தா பல்கலையின் துணைவேந்தர் மாற்று வழி கண்டறிந்தார்.

ஐரோப்பாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் பிரதிநிதியாக ராமன் அனுப்பப்பட்டார். அவ்வாறு அந்த மாநாட்டிற்குச் செல்லும் வழியில்தான் வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்ற சிந்தனை அவருக்கு எழும்பியது.

மத்திய தரைக்கடல் பகுதியில் அவர் பயணித்தபோது ஏற்பட்ட சிந்தனையே இது. திட திரவ வாயு உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் ஒளி ஊடுருவிச் செல்லும்போது அதன் இயல்பில் ஏற்படும் மாறுதல்களால் ஒளியின் மூலக்கூறு சிதறல் அடைகிறது என்ற பெரும் உண்மையினை ஒரே வரியில் இப்போது கூறிவிடுகிறோம்.

ஆனால், அதற்காக அவர் மேற்கொண்ட ஆய்வு கொஞ்சநஞ்சமல்ல. கடற்பயணத்தில் இந்த சிந்தனை தோன்றினாலும் உடனடியாக அவரால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. அதற்குப் பிறகும் பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகே முடிவுக்கு வர இயன்றது.

நகைச்சுவை உணர்வு மிக்கவர்: இத்தகைய சாதனையாளரான அவருக்கு இசையிலும் அதீத நாட்டம் இருந்தது. அந்த துறையிலும் சில ஆய்வுகளை மேற்கொண்டார். 1924 ஆம் ஆண்டில் ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டிஷ் அரசால் மிகச்சிலருக்கே வழங்கப்படும் உயரிய விருதான சர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

அந்த சர் பட்டதை இணைத்தே அவரை நாம் சர் சி.வி ராமன் என அழைக்கிறோம். பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியேற்ற முதல் இந்தியரும் இவரே. பின்னாளில் அவரது சொந்த முயற்சியால் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பையும் அவர் நிறுவினார்.

இந்திய அரசும் அவரை கௌரவிக்கத் தவறவில்லை. 1986 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் அறிவியல் பரிமாற்றத்துறை அவரது ராமன் விளைவு கண்டுபிடிப்பை வெளியிட்ட நாளான பிப்ரவரி 28-ஐ தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாட முடிவு செய்து இன்று வரை நாம் கொண்டாடி வருகிறோம்.

அறிவியல் கூடங்கள் நிறைய வசதியுடன் நவீன தொழில்நுட்பங்களுடன் இயங்கினாலும் மனித மொழிதான் சிறப்பானதும் துல்லியமானதும் ஆகும் என்று ஒரு முறை மனித மூளையின் உழைப்பைப் பற்றிக்கூடச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்.
இவரது வாழ்க்கையில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை.

ஒரு முறை அயல்நாட்டு விருந்தொன்றில் அவருக்கு நண்பர்கள் மது அளிக்க முன்வந்தனர். அதனை நாசூக்காக மறுத்த அவர் நீங்கள் மதுவில் இராமன் விளைவைக் காணலாம். ஆனால், இராமனிடம் மதுவின் விளைவைக் காண இயலாது என்றாராம். எப்படிப்பட்ட மனிதர் அவர்.

- கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்; தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x