

எங்களது பள்ளி ஆண்டு விழாவிற்காக ஆண்டறிக்கையினை வீடியோவாக பதிவு செய்வதற்காக நான் சந்திக்க நேர்ந்த ஒரு இளைஞரின் முயற்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. என்ன முயற்சி செய்தார்? என்று நீங்கள் சிந்திப்பதை என்னால் உணர முடிகிறது. எங்களது சந்திப்பில் கிடைத்த அனுபவத்தை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.
“கல்வி என்ற ஆயுதத்தால் இந்த சமுதாயத்தையே புரட்டிப் போட முடியும்!” என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழும் அந்த இளைஞரின் பெயர் அபிஷேக். அவருடைய சொந்த ஊர் திருவண்ணாமலை அருகில் உள்ள தேவிகாபுரம். சிறிய கிராமமாக இருந்தாலும் அவர்களது முயற்சியும் செயலும் உண்மையிலேயே போற்றத்தக்கது.
ஊடகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அபிஷேக், அவரைப் போன்று பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி இளைஞர்களுமாக இணைந்து மொத்தம் 28 இளைஞர்கள் ‘கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!’ என்ற விருது வாக்குடன் ‘கற்பி’ என்னும் அமைப்பினை 2016-ல் அவர்களது கிராமத்தில் நிறுவினர்.
இவர்களது குழுவில் பெண் உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் நோக்கமே உயர்கல்விக்கு செல்லாமல் கல்வியை பாதியிலேயே கைவிடும் சொந்த கிராமத்துக் குழந்தைகளைக் கண்டறிந்து உயர்கல்விக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாகும்.
அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் உயர்கல்வி கற்க வழிவகை செய்வது இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளான லயோலா கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதும், இந்த இளைஞர் குழுவில் இடம் பெற்றிருக்கும் அனைவருமே தங்களது பணியிலிருந்து விடுப்பு கிடைக்கும் நாட்களில் சொந்த ஊர் திரும்பும் போது மாலை நேர கல்வியாக தங்களது கிராமத்து பிள்ளைகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பதும் என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்தியது.
இவர்களது அமைப்பின் மூலமாக இதுவரை கிட்டத்தட்ட 14 மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுகின்ற வாய்ப்பினைப் பெற்று, பட்டதாரி ஆகி இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய தகவல். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த அபிஷேக் தனது சொந்த முயற்சியினால் படித்து இன்று பிரபல தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தான் மட்டும் கல்வியால் உயர்ந்தால் போதாது, தன்னை சுற்றி இருக்கும் கிராமத்து பிள்ளைகளும் உயர்கல்வி பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. தன்னலமற்ற அபிஷேக் மற்றும் அவர்களது அமைப்பு இன்றளவும் இளைஞர்களுக்கு பெரிய முன் உதாரணமாக திகழ்கிறது.
“கற்றறிந்த இளைஞர்கள்
தன்னலம் இன்றி இணைந்தால்
சமுதாய மாற்றம் சாத்தியமே!”
- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.