

டிரைவர் அண்ணே! கொஞ்சம் வண்டிய நிறுத்துறீங்களா? என கேட்டது யாழினி டீச்சரின் வெண்கல குரல். டீச்சர்!.. நீங்க இறங்க வேண்டிய இடம் இன்னும் வரல இது பொட்டல் காடு இந்த இடத்தில ஒரு ஈ காக்கா நடமாட்டம் கூட இருக்காது. நல்லா பாருங்க, நாளைக்கு உங்களுக்கு ஏதாவது ஒன்னுனா எங்கள தான் கேள்வி கேப்பாங்க என்றார் ஓட்டுனர்...
யாழினி டீச்சரோ, அவசரமாய் தூரத்தில் தெரிந்த ஒரு பழைய கட்டிடத்தை காண்பித்து அங்கு செல்லப் போவதாக கூறினார். டீச்சர்! அது ரொம்ப நாளா பூட்டி கிடக்கிற பாழடைந்த லைப்ரரி. அதுக்குள்ளே புத்தகங்கள் இருக்காது. பாம்புகளும் வௌவால்களும் வேண்டுமானால் இருக்கும் என்றார் நடத்துனர்.
டீச்சரின் பிடிவாதம்: டீச்சரின் பிடிவாதம் ஜெயிக்க, பேருந்தை விட்டு இறங்கினார் யாழினி. ஆனால் அவர் பேருந்தில் இருந்து பார்த்த கட்டிடமோ கண்ணுக்கு புலப்படாமல், கருவேல காட்டுக்குள் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது. திசை தெரியாது தவித்து நின்றார் டீச்சர்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் தென்படவில்லை. தேடி தேடி கால்கள் வலித்தன. மிகவும் அசந்து போனவராய், அருகில் இந்த குட்டிச்சுவரில் போய் உட்கார்ந்தார். அப்போது ஏதோ ஒன்று கால் களின் மேல் ஊற காலை உதறினார் யாழினி. குட்டிப் பாம்பொன்று சத்தமில்லாமல் ஊர்ந்து சென்றது.
அங்கே அவர் கண்ணில்பட்டது பாம்பு மட்டுமல்ல. அந்த குட்டி சுவரில் இருந்த வாசகமும் தான். மங்கலாக தெரிந்த எழுத்துக்கள், இது பாரதி நூலகம் செல்லும் வழி என்பதை அம்புக்குறி போட்டு அவருக்கு காண்பித்தது.
துணிந்தவளுக்கு பயமில்லை: துணிந்தவளுக்கு பயமில்லை என்பது போல் நடக்கத் தொடங்கினார் யாழினி, இதோ அவர் தேடியது அவர் கண் முன்னே தெரிந்தது. பாரதி நூலகம் 100 சதுர அடியில் பாழடைந்து, ஆங்காங்கே சுவர்கள் பெயர்ந்து விழுந்திருக்க, மரக்கிளைகள் நூலக கட்டிடத்திற்குள் ஊடுருவி சென்று கொண்டு இருந்தது.
மூடிக் கிடக்கும் நூலகம்: மனிதன் மறந்து போன ஒன்றை மரங்கள் செய்து காட்டுகிறதோ? நூலகத்தை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டார் யாழினி. நூலகத்தின் வாசலில் 80 வயதை தாண்டிய ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார்.
சட்டென அந்த மூதாட்டியின் காலை தொட்டு வணங்கி, வணக்கம் அம்மா! நான் இந்த ஊருக்கு வந்திருக்கிற புது ஆசிரியர் யாழினி. பல வருஷமா மூடிக் கிடக்குற இந்த லைப்ரரிய திரும்பவும் திறக்கலாம் என்ற ஆர்வத்தில தேடி வந்தேன். இந்த கால பிள்ளைகளுக்கு புத்தகமா மாறிடுச்சு செல்போன். பசங்க புத்தக வாசிப்பை மறந்துட்டாங்க.
நாம தான் கைபேசியை கையில எடுத்துக்கிட்டு புத்தகங்களை தூக்கி எறிஞ்சுட்டோமே என்று தழுதழுக்கும் குரலில் யாழினி டீச்சர் சொல்லவே, அந்த மூதாட்டி சட்டென யாழினியை பார்த்து, அம்மாடி! நீ ஆசிரியரா? .. உனக்கு கோடான கோடி வணக்கம் என்றார்.
சமூக விரோதிகளின் கூடாரம்: இந்த லைப்ரரி கேட்பாரற்று சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது. அதனால் இங்கேயே தங்கி இந்த நூலகத்தை பாதுகாத்து வருகிறேன் என்று கூறி நூலகத்தை திறந்தார். அங்கே புத்தகங்கள் அனைத்தும், அட்டை போட்டு அழகாய் பராமரிக்கப்பட்டிருந்தது சரஸ்வதிதேவியே நேரில் நிற்பது போல் தோன்றுகிறதம்மா.
தாங்கள் யார்? என யாழினி கேட்க, சட்டென உள்ளேயிருந்த மூட்டையை உதறினார் மூதாட்டி. அதிலிருந்து விழுந்த புத்தகங்கள் அனைத்திலும் எழுத்தாளர் சிவகாமசுந்தரி என்று அச்சிடப்பட்டிருந்தது. இவை அனைத்தும் நான் எழுதியது தான். நானும் ஒரு பள்ளி ஆசிரியரே.
கடைசி மூச்சு வரை... செல்போன் வராத அந்த காலத்துல இந்த லைப்ரரி பசங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இன்று? கண்கள் கலங்கினார் அவர். என் கடமை முடிஞ்சிருச்சு. இனிமேல் உன் கடமையை செய் என்று சிவ காமசுந்தரி நூலகத்தின் சாவியை யாழினியிடம் கொடுத்துவிட்டு சரிந்து விழுந்தார். கடமையை முடித்தது போல் எழுத்தாளர் சிவகாம சுந்தரியின் மூச்சுக் காற்றும் நிம்மதியாய் முடிந்துவிட்டது.
- கட்டுரையாளர் எழுத்தாளர் ஆவடி, சென்னை