

பத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவச் செல்வங்கள் தேர்வை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாத காலமாக உணவு, உறக்கம் மறந்து புன்னகைக்கக்கூட நினைவின்றி நாட்கள் நகருகின்றன.
தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக் கும் மாணவர்களைச் சந்தித்து உரை யாடும் போது அதீத பயம் அவர்களுடைய முகத்திலும், உள்ளத்திலும் குடி கொண்டிருப்பதை உணரலாம். பெற்றோர்களும் ஆசிரியர்களும் முதலில் நீக்க வேண்டியது அவர்களுடைய தேர்வு குறித்த பயத்தை மட்டுமே.
மதிப்பெண்கள் எவ்வளவு முக்கியம் என்று உணர்த்துவதோடு, எந்த முறையில் மதிப்பெண்களை வசப்படுத்துவது என்ற சூத்திரத்தை கற்றுக் கொடுத்தால் அவர்களது பயம் குறைந்து அறிவு தெளிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை உடனடியாக செய்ய வேண்டியது அவசியம்.
ஆலோசனைகள் அவசியப்படுமா? - பெற்றோர்களும் உறவினர்களும் நண்பர்களும், ஆசிரியர்களும் என பல்வேறு மனிதர்கள் அறிவுரை கூறிக் கொண்டே உள்ளனர். தன் மீது ஒரு பெரும் சுமை சுமத்தப்பட்டுள்ளதாக குழந்தைகள் உணர்கின்றனர்.
படித்த தெல்லாம் திடீரென மறந்து விடுமோ? அல்லது மறந்துவிட்டது என்ற உணர்வு அவர்களை ஆட்டிப் படைக்கிறது. அவர் களுக்கு தற்போதைய தேவை தட்டிக் கொடுத்தல் மட்டுமே. மதிப்பெண்ணை மடைமாற்றம் செய்வது எப்படி என்ற ஆலோசனைகள் அவர்களது சிந்தனையை செழிப்பாக்கும்.
நேர மேலாண்மை: தேர்வுக்கு முன்பும் தேர்வறையிலும் குழந்தைகள் கைக்கொள்ள வேண்டிய மந்திரச் சொல் "நேர மேலாண்மை"நன்கு தெரிந்த விடைகளை அதிகமான பக்கங்களும், அதிக மதிப்பெண்ணுக்கு உரிய வினாக்களுக்கு குறைந்த விடைகள் என எப்படி நேரத்தை கையாள்வது என்ற மனக்குழப்பம். இதில் அதீத தெளிவு தேவைப்படுகிறது.
திட்டமிடல்: தேர்வுக்குத் தயாராகும்போது திட்டமிடுதல் முதல் படி. பாடப்பகுதிகளையும் வினாத்தாள் அமைப்பு முறையையும் விடை அளிக்க வேண்டிய பக்கங்களையும் முன்கூட்டியே திட்டமிடல் பெரும் நல் விளைவை ஏற்படுத்தும்.
பல்வேறு மாதிரி வினாத்தாள்களுக்கு விடைகளை எழுதி பார்த்தல், மீண்டும் அதை சரிபார்த்தல், அவர்களுடைய நிறைவு பெற்ற விடைத்தாள்களை மீண்டும் பார்த்தல், தவறுகளைப் புரிந்து கொள்ளுதல், சரியான விடைகளைத் தெளிவாக்குதல் என படிப்படியான திட்டமிடுதலை கைக்கொண்டால் தேர்வுகள் சிறகாக மாற வாய்ப்புகள் உண்டு.
உடல் நலம்: அமர்ந்த இடத்திலேயே படித்துக்கொண்டிருத்தல், ஓய்வறைகளுக்குக் கூட நேரம் ஒதுக்காமல் அமர்ந்த நிலையிலேயே இருத்தல், போதிய நீர் அருந்தாமை, சரியான உணவு பழங்கள், ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்களை உட்கொள்ளாமல், இரவில்போதிய நேரம் உறங்காமல் இப்படியாக பல்வேறு மன உளைச்சல்களை குழந் தைகள் எதிர் கொண்டுள்ளனர்.
இதனால் நீர்ச்சத்து குறைந்து போதல், உடலின் வெப்பநிலை அதிகரித்தல், பசியின்மை, மறந்து போதல், உடல் சோர்வு என பல்வேறு பின் விளைவுகளைத் தேர்வு காலத்தில் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, உடல் நலம் பேணுதல் அவசியம்.
புன்னகையை சூடிக் கொள்ளுங்கள்: அன்பிற்கினிய குழந்தைகளே! தேர்வை எதிர்கொள்ளப் போகும் உங்களது மனநிலை சற்றே பதற்றம் நிறைந்ததாக இருந்தாலும் அது ஒருஆண்டு காலம் நீங்கள் புரிந்த தவத்திற்கு கிடைக்கப் போகும் வரம் என்பதை உள்வாங்கிக் கொள்ளுங் கள். உடலையும் மனதையும் ஒருமுகப் படுத்துங்கள். எதிர்காலத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் படி... வெற்றி யாகத்தான் அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்" என்கிறார் வள்ளுவர். சரியான திட்டமிடுதல், காலம் தவறாமை, கொண்ட கொள்கையில் உறுதிஎன மன வலிமையோடு நீங்கள் செயலாற்றும்போது உங்களது தவங்கள் பலிக்கும். வெற்றிகள் உங்களை அணிந்து கொள்ளும். புன்னகையை நீங்கள் சூடிக் கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. வெற்றி வசப்பட வாழ்த்துக்கள்.
- கட்டுரையாளர் ஆசிரியர் எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி பிராட்டியூர், திருச்சி