

“காலை எழுந்தவுடன் படிப்பு,
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;
மாலை முழுதும் விளையாட்டு,
என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!”
என்று பாடிச் சென்ற பாரதியின் வரிகளையும், இன்றைய காலகட்ட குழந்தைகளின் நிலையையும் பற்றிய சிந்தனை என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
“காலை எழுந்தவுடன் ஒரு டியூஷன்
பகல் முழுவதும் பள்ளிக்கூடம்
மாலை வந்தவுடன் அடுத்த டியூஷன்
என்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ள மாணவர்கள்!”
அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையோ அந்தோ பரிதாபம்! கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே டியூஷன் வகுப்பு என்ற நிலையில் இருந்தது கல்வி. கற்றலில் பின்தங்கி இருப்போருக்கென பிரத்யேகமாக ஆசிரியர்களின் வழிகாட்டுதல் தேவைப்பட்டதால் டியூஷன் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பின்பு மதிப்பெண்களை மட்டுமே நோக்கிய பயணத்தின் விளைவால் டியூஷன் வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
கணிதத்திற்கு ஒரு டியூஷன், இயற்பியலுக்கு ஒன்று, வேதியலுக்கு மற்றொன்று, ஆங்கிலத்திற்கு என்றுதனியாக என்று பல்வேறு கோணங்களில், பல்வேறு நேரங்களில் பாடவாரியாக டியூஷன் அனுப்புகிற ஆர்வம்பெற்றோர்களிடம் அதிகரித்தது.
நன்மைகள்: டியூஷன் வகுப்பில் பாடங்கள் வேகமாக முடிக்கப்பட்டு விடுவதால் அந்தப் பாடங்களை திருப்புதல் பணிநடைபெறும். எனவே மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்கின்ற வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்களின் மதிப்பெண்ணும் தேர்வில் உயர்கிறது.
படித்த பெற்றோர்களாக இருந்தாலும் கூட தங்களது பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பிவிட்டால் தங்களது கடமை முடிந்து விட்டது என்று எண்ணத் தொடங்கியுள்ளனர். தனது ஒரு பிள்ளைக்கு கவனம் செலுத்தி பாடம் சொல்லித் தருவதற்கு அவர்களுக்கு பொறுமையும் இருப்பதில்லை; நேரமும் இருப்பதில்லை. எனவே தங்களது நேரத்தை சேமிப்பதற்காக தங்களது பிள்ளைகளை டியூஷன் அனுப்புவதில் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
பாதக அம்சங்கள்: காலையில் 5 மணிக்கு ஆரம்பிக்கின்ற டியூஷன் வகுப்பு ஏழுமுப்பது வரை தொடர்ந்து, பின்னர்பள்ளிக்கு விரைந்து ஓடும் மாணவர்கள், மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு வீட்டுக்கு திரும்பியவுடன் மீண்டும் டியூஷன் பயணம் தொடங்குகிறது. நான்கு மணிக்கு ஆரம்பித்து 9 அல்லது 9:30 வரை நீடிக்கும் டியூஷன் கல்வி.
மாணவர்களின் மனநிலையை எண்ணிப்பாருங்கள்! ஸ்விட்ச் போட்டவுடன் செயல்படும் இயந்திரம் போன்ற வாழ்க்கை. விளைவு? படிப்பின் மீதும் பெற்றோரின் மீதும் கூட வெறுப்பினை காண்பிக்கும் மாணவ சமுதாயம். டியூஷன் வகுப்பில் கற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலையில் பள்ளி ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களின் மீது கவனமின்மை. விளைவு - கீழ்ப்படிதல் இல்லாத மாணவன் என்ற அவப்பெயர் பள்ளியில்.
ஆண்கள் மட்டுமே அல்லது பெண்கள் மட்டுமே பயின்ற பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் டியூஷன் செல்லும்போது எதிர்ப்பாலின ஈர்ப்பிற்கு அதிகமாக உள்ளாவதும் நடைபெறுகிறது.
தீர்வுதான் என்ன? - பள்ளியில் படிக்கும் போது கவனமுடன் படிக்க வேண்டும் என்று மாணவர்களின் மனதில் எண்ண வேண்டும். தங்களது பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்புவது மட்டுமே தங்களது கடமை என்று இல்லாமல் அவர்களை பள்ளிக்கு விடுப்பு எடுக்க விடாமல் முறையாக அனுப்புவதும் பெற்றோரின் கடமை என்று உணர வேண்டும்.
டியூஷன் வகுப்பில் மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் மேம்போக்காக பாடத்தை நடத்திடாமல், “தான் அறிந்த முழுவதையும் மாணவனுக்கு போதிப்பது” என்ற அறத்தை மறவாமல் ஆசிரியர்கள் விளங்க வேண்டும்.
“நட்டும் போல்ட்டும் இணைந்த இயந்திரம் அல்ல மாணவர்கள்;
ரத்தமும் சதையுமாக உணர்வுள்ளமனிதர்களே மாணவர்கள்!” என்பதை எப்போது உணர்ந்திடுவோம்?
- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.