

உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருந்த என் சகோதரன் திக்குவாய் குறைப்பாட்டால் பல நாட்கள் திணறிக் கொண்டிருந்தான். அப்பள்ளியில் ஆண்டு விழாவில் நடக்கவிருந்த நாடகத்தில் அவன் நடிக்க ஆசைப்பட்டு சக மாணவர்களிடம் அதைத் தெரிவித்தான். அவர்கள் அனைவரும் கைகொட்டிச் சிரிக்க, அவன் தைரியமாக அந்நாடகத்தின் இயக்குநரான தனது தமிழ் ஆசிரியரை அணுகினான்.
ஆசிரியர் அவனை சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு ஐந்து பக்க வசனங்கள் கொண்ட தாட்களை அவனிடம் அளித்தார். மறுநாள் மனப்பாடம் செய்து தன்னிடம் ஒப்பிக்குமாறு கூறினார். அவனுக்கு பயங்கர அதிர்ச்சி. எனினும் அதை சவாலாக ஏற்றுக் கொண்டு மறுநாள் எவ்வித தடங்கல் இல்லாமல் அவரிடம் ஒப்பித்தான். அவர் மகிழ்ச்சியுடன் அந்நாடகத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க வைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுத் தந்தார்.
‘வேண்டாம்’-க்கு கிடைத்த ஊன்றுகோல்: மற்றொரு நிகழ்வில், தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் மூன்றாவதாக பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் ‘வேண்டாம்’ என்றஅவலமான பெயர் சூட்டினர். பலரின்ஏளனம் கடந்து பள்ளி படிப்பைமுடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்தபோது அக்கல்லூரியின் முதல்வர் அவரின் பெயரை கேட்க, வழக்கமான சங்கோஜத்துடன் தனது பெயரை கூறினார்.
முதல்வர் பெயர்க்காரணம் கேட்க, அப்பெண் தான் மூன்றாம் பெண்ணாகப் பிறந்ததால் தம் பெற்றோர் மறுபடியும் பெண் குழந்தை பிறக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ‘வேண்டாம்’ எனப் பெயரிட்டதாகக் கூறியபோது முதல்வருக்கு பயங்கர அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டது.
அன்றிலிருந்து அம்மாணவியின் கல்வி முன்னேற்றத்தை உற்றுக் கவனிக்க ஆரம்பித்த அக்கல்லூரியின் முதல்வர் அப்பெண்ணின் கல்லூரி இறுதி படிப்பு முடிந்த பிறகு ஜப்பான் மொழி கற்க உதவினார். தற்போது அப்பெண் ஜப்பான் நாட்டின் உயர்ந்த மென்பொருள் அலுவலராகப் பணி யாற்றி கொண்டிருக்கிறார்.
மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் இரண்டும் பள்ளி மற்றும் கல்லூரிஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் கொண்டிருந்த ஆரோக்கியமான உறவுக்கான முன்னுதாரணம். அனைத்து பள்ளிகளிலும் கல்லூரி களிலும் இம்மாதிரி உறவுகள் ஏற்பட நேர்ந்தால் நமது கல்விப் புலம் உலகத்தரம் வாய்ந்த ஒன்றாக மாறிவிடும் என்பது உறுதி.
ஆற்றுப்படுத்தும் ஆசான் அவசியம்: மாணவர்கள் அனைவரும் சமமானஅறிவுள்ளவர்களோ, கற்கும் திறன் உள்ளவர்களோ அல்ல. மாணவர்கள் பெற்றோரிடம், ஆசிரியர்களிடமும் எதிர்கொள்ள நேரும் ஒரு துன்பம் என்னவென்றால் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு குறை கூறுவது. இது மாணவர்களின் தவறோ குறையோ அல்ல. இதை வாசிக்க நேரும் மாணவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பள்ளியில் கற்கும்பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வித் திறன் அல்ல.
அதற்கு மேல் இசைத்திறமை, எழுத்தாற்றல், இலக்கிய ரசனை, சிறந்த நூல்களை வாசித்தல், உலக அளவில் வெற்றி பெற்ற அறிவியலாளர்கள், சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள், மனிதநேயர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் வெற்றிபெற்ற தொழிலதிபர்கள் ஆகியோர்களின் வாழ்வை படித்தல் போன்ற திறமைகள் என்பன பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை காட்டிலும் சிறப்பானவையாகும்.
மேற்கூறிய பழக்கங்களுடன் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் கூடுதல் சிறப்பாகும். மாணவர்கள் தங்களது குறைபாடுகளையும், மனக் கஷ்டங்களையும், சமூக வெளியில் தமக்கு ஏற்படும் இன்னல்களையும் தமது பெற்றோரிடம் கூற தயங்கினால் தமது ஆசிரியர்களிடம் தனி நேரம் கேட்டு பகிர தயங்கக்கூடாது. அப்போது ஆசிரியர்கள் பொறுமையாக அவற்றை செவி சாய்த்தல் அவசியம்.
மாணவர்களின் மனதில் தன்னால் முடியம் என்ற நம்பிக்கை விதையை ஆசிரியர்கள் ஆழ விதைக்க வேண்டும். அவ்விதை வேரூன்றி செடியாக முளைத்து, மரமாக வளர்ந்துஅவர்களை இவ்வுலகில் பேராண்மை யாக மாற பேருதவியாக அமையும்.
- ஆ. கிளெமென்ட் ஆரோக்கியசாமி, கட்டுரையாளர்: கல்வி ஆராய்ச்சியாளர், பள்ளி ஆசிரியர்களின் பயிற்றுநர்; தொடர்பிற்கு: idsfellowship2020@gmail.com