அதிசய கிணறு

அதிசய கிணறு
Updated on
2 min read

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா என்ற இடம் செங்கடலில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இங்குள்ள பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது ஜம் ஜம் என்ற அதிசய கிணறு. பாலைவன தேசத்தில் எந்த நீர் நிலைகளும் இல்லாத இடத்தில் அமைந்துள்ள இந்த கிணற்றிலிருந்து தினசரி எடுக்கும் தண்ணீரானது லட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது.

எந்த ஊற்றாக இருந்தாலும் தோண்டிய காலத்திலிருந்து ஒரு சில ஆண்டுகளிலே வற்றிப் போக வாய்ப்பு இருக்கும் சூழலில் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவான ஒரு கிணறு இன்று வரை தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை கொடுப்பது மிகப்பெரிய அதிசயம். தினமும் வினாடிக்கு 8000 லிட்டர் தண்ணீரை ராட்சத மோட்டார் கொண்டு உறிஞ்சி எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. 692.2 மில்லியன் லிட்டர் நீரை தினமும் வெளியேற்றிய பிறகும் அந்த கிணற்றின் தண்ணீர் வற்றாமல் அதே அளவு இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.

சுகாதார நடவடிக்கை: கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய மருத்துவர் ஒருவர் சுகாதார நடவடிக்கையாக கிணற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்று அரேபிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட சவுதி அரசு 8 அதிநவீன ராட்சச பம்பு செட்டுகளை வைத்து நீரை வெளியேற்றியது. ஆனாலும் நீரின் அளவு குறையாமல் ஏற்கனவே இருந்த அளவைவிட ஒரு பங்கு கூடுதலாக நிரம்பி இருந்தது என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது.

எது எப்படி இருந்தாலும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு கிணறு இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்பது வியப்பின் உச்சமாக இருக்கின்றது. வற்றாத இந்த கிணறு எப்படி ஒரு அதிசயமோ அதே போல் எவ்வளவு தண்ணீரை அந்த கிணற்றில் ஊற்றினாலும் அத்தனையும் உறிஞ்சி உள்ளே இழுத்து உடனடியாக வற்றிப் போகும் ஒரு அதிசயக் கிணறு ஒன்றும் உள்ளது.

வற்றும் அதிசய கிணறு: இந்த கிணறு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் அமைந்துள்ளது. வெள்ளக் காலங்களில் உபரி நீரை இந்த அதிசய கிணற்றில் விடுகின்றனர். வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை இந்த அதிசய கிணற்றுக்குள் விட்டாலும் உறிஞ்சி உள்ளே இழுத்து வற்றிப் போகிறது. இந்த அதிசய கிணறு மூலம் சுற்றுப் பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிலப்பரப்பில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் இந்த பகுதி மக்கள் இந்த கிணற்றை பொக்கிஷமாக கருதி மகிழ்ச்சி அடைகின்றனர்.

அப்படி என்ன அதிசயம் இந்த கிணற்றுக்குள் இருக்கிறது என்ற ஆய்வு சமீபத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் பெருமழை பெய்து பெருவெள்ளம் வந்த சமயத்தில்கூட இந்த அதிசய கிணறு நிரம்பவில்லை என்றதும் சென்னை ஐஐடி அறிவியல் ஆய்வாளர்கள் இங்கு வந்து இந்த கிணற்றை ஆய்வு செய்தனர். கிணற்றின் கீழ் சுண்ணாம்பு பாறைகள் உள்ளது என்றும் அது 50 கிலோ மீட்டர் தூரம் வரை பரவியுள்ளது என்பதனையும் கண்டறிந்துள்ளனர். அதுதான் மிக விரைவாக நீரை உறிஞ்சுவதற்கு காரணமாக உள்ளது என்றும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி கூறியுள்ளனர்.

வற்றும் அதிசயக் கிணறுக்கான காரணம் கிடைத்துவிட்டது. ஆனால் வற்றாத கிணற்றுக்குள் இருக்கும் அதிசயம் என்னவென்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த பிரபஞ்சம் இதுபோன்ற நிறைய அதிசயங்களை தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது.

கட்டுரையாளர், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,

குலமங்கலம், மதுரை மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in