

வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் ஈரடிகளில் அற்புதமாக எடுத்துச் சொல்லும் உலகப்பொது மறை திருக்குறள் உண்மையாகவே எப்போது உலகினால் கொண்டாடப்பட்டது தெரியுமா? தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படத் தொடங்கியதிலிருந்துதான். அவ்வாறு இதுவரை 120-க்கும் அதிகமான மொழிகளில் அய்யன் வள்ளுவரின் குறள்கள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் மொழி, மதம், இனம், தேச எல்லைகள் கடந்து அனைவராலும் போற்றப்படும் சமயசார்பற்ற இலக்கியமாக குமரி முனையில் வீற்றிருக்கும் வள்ளுவர் சிலை போல கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
தமிழர் அல்லாவதரும் குறள் அறிந்து பயனுறுவது போன்று இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை தமிழர்கள் அறிந்திட வேண்டும். குறிப்பாக இன்றைய மாணவர்கள், உயர்கல்வி, போட்டித்தேர்வு, ஆராய்ச்சி படிப்பு, சமூக அறிவை வளர்த்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய நூல்களை ஆவலுடன் தேடி வருகின்றனர். அவர்களுக்கு தாய்மொழியில் இதுதொடர்பான நூல்கள் கிடைத்தால் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அது மிகப்பெரிய உந்துசக்தியாக மாறும். இந்த உயரிய சிந்தனையின் வெளிப்பாடே தமிழகஅரசின் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம். தமிழ்நாடு பாடநூல் கழகமும், கல்வியியல் கழகமும் இணைந்து இத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
உயர்தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், செயற்கை நுண்ணறிவு, கலை, சமூகவியல், இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பல்துறை சார்ந்த உலகின் சிறந்த நூல்கள் தமிழாக்கம் செய்து வெளியிடப்படுகின்றன. தமிழின் கருத்தாழமும் அழகியலும் பொதிந்த ஆகச்சிறந்த படைப்பு களும் பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒருநூற்றாண்டுக்கு முன்பே கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்,இங்கர்சால், டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட புரட்சிகர சிந்தனையாளர்களின் எழுத்துக்களைத் தமிழில் மொழியாக்கம் செய்த முன்னோடிகளில் ஒருவர் பெரியார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக அரசால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணியின் மூலம் 1002 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்காற்றிவரும் தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவின் இணை இயக்குநர் முனைவர் சங்கர சரவணனிடம் இது குறித்து பேசுகையில், “ஐஏஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணியில் உயரிய பதவி வகிக்க கனவு காணும் மாணவர்களுக்கு வழிகாட்ட ஆங்கி லத்துக்கு இணையாக தமிழில் நூல்கள் இல்லை என்கிற குறை நெடுங்காலமாக நீடித்தது.
இந்த குறையை நிவர்த்தி செய்ய இத்திட்டத்தின்கீழ் சிறந்த நூல்கள் மொழிபெயர்ப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், சோழர் வரலாறு, தென்னிந்திய வரலாறு, தென்னிந்தியாவை பற்றிவெளிநாட்டவர் குறிப்புகள், பாண்டியர் வரலாறு போன்ற தமிழ் சார்ந்த நூல்கள், வின்செண்ட் ஸ்மித் ஆக்ஸ்போர்ட் இந்திய வரலாறு போன்ற தமிழ் மொழி, வரலாறு மற்றும் நிலவியல், அறவியல் போன்ற துறைகள் சார்ந்த அரிய புத்தகங்களும் போட்டித் தேர்வர்களால் விரும்பி வாசிக்கப்படுகின்றன. வேறெங்கும் கிடைக்காத இந்நூல்கள் மிகக்குறைந்த விலையில் இங்கு விற்கப்படுவதால் குடிமைப்பணி தேர்வர்கள், தமிழ் இலக்கியம், வரலாறு பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி பொறியியல் படிக்கும் மாணவர்கள்கூட இந்நூல் களை தேடி வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது” என்றார்.
தமிழ்நாடு பாடநூல் கழக ஆலோசகர் அப்பணசாமியிடம் இது குறித்து கேட்டபோது, “உயர்கல்வி நுழைவுத் தேர்வர்களில் எளிதில் தேர்ச்சிபெற வழிகாட்டும் நூல்கள் வெளியிடுவதில் புகழ்பெற்ற பியர்சன் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் பிளஸ் 1, பிளஸ் 2 ஆம் வகுப்புக்கான புத்தங்கள் ஒவ்வொரு பாடத்திலும் இரண்டு தொகுதிகள் என வினா வங்கிகள் ஆறு தொகுதிகள் வெளியிட்டுள்ளோம்.
இதேபோன்று உயர்கல்வி பயிலும்மாணாக்கர்களுக்கான உலக, இந்தியஅளவில் பின்பற்றப்படும் நூல்கள்தமிழாக்கம் செய்யப்பட்டு இத்திட் டத்தின்கீழ் வெளியிடப்படுகின்றன. இதற்கென புகழ்பெற்ற Penguin Random House, Harper Collins,Oxford University Press, Routledge உள்ளிட்ட 20 க்கும் அதிகமான பதிப்பகங்களுடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தலைசிறந்த பேராசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழியாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொறியியல், வேளாண்மை, கால்நடை அறிவியல், மீன்வளம் உள்ளிட்ட அனைத்து துறைசார் உயர்கல்வி நூல்கள் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. குறிப்பாக, மருத்துவக் கல்வி பயிலும் மாணாக்கருக்கான பாட நூல்கள் ஆசியாவிலேயே முதல் முறையாக தமிழ்மொழியில் மொழிபெயர்க் கப்பட்டு இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன” என்றார்.