

மண்ணில் விழுந்தால் விதையாய் வீழ்வோம், பாலைவனத்தில் ஒட்டகமாய் நடப்போம், ஆழ்கடலில் திமிங்கலமாய் வலம் வருவோம், விண்ணில் ராஜாளி பறவையாய் பறப்போம், இதுதான் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தன்னம்பிக்கை ஒவ்வொரு மனிதனுடைய வெற்றிப் பயணத்திற்கான ஆற்றல்.
மண்ணுக்குள் போடப்படும் அனைத்தும் மட்கி உரமாவது நமக்கெல்லாம் தெரிந்தது. உயிருள்ள மனிதன்கூட தப்ப இயலாது. அவனும் மடிவது உறுதியே. மண்ணையே ஏமாற்றும் ஒரே பொருள் மனிதனால் உருவாக்கப்பட்ட நெகிழிப்பை. மனித உடலையே மட்கச் செய்யும் மண் கூட தோற்றுப் போவது நெகிழிப்பையிடம் தான்.
இது மண்ணின் தோல்வி அல்ல மனிதனின் வீழ்ச்சி. அப்படிப்பட்ட மண்ணை துளைத்துக்கொண்டு முட்டிமுளைத்து வெளிவரும் விதையிடம் தோற்றுப் போகிறது மண். விதையிடம் மண் தோற்றுப் போவது வளர்ச்சி. நெகிழிப்பையிடம் தோல்வி அடைவது வீழ்ச்சி. ஆம், மாணவர்களே தோல்விக்குப்பின் வளர்ச்சி இருக்குமேயானால் தோல்வி கூட தேவையே.
ஆக, மண்ணில் விழுந்தால் விதையாக விழுந்திடுங்கள். அதுபோல வானில் பறந்தால் ராஜாளியாக இருந்திடுங்கள். பறவைகள் எல்லாம் மழைக்காலத்திற்கு மரங்களில் கூடு கட்டியும் பொந்துகளில் தங்கியும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். அவற்றின் தன்னம்பிக்கையைக் கண்டு வியக்கிறோம் நாம்.
இன்று வரை பறவைகள் தங்களுக்கான கூடுகளை தாமே கட்டிக் கொள்கின்றன. தூக்கணாங்குருவிகள் நம் தாத்தா காலத்திலும் ஏன் அதற்கு முன்னரும் எப்படி கூடு கட்டியதோ அப்படித்தான் இன்றுவரை தன் கூட்டினை கட்டிக்கொள்கிறது.
பறவைகளின் தொழில்நுட்பம் இன்று வரை மாறவில்லை. இப்படி பறவைகள் எல்லாம் பாதுகாப்பிற்கு கூடு கட்டும் போது ராஜாளி பறவை மட்டும் மழையை தவிர்ப்பதற்காக மேகக் கூட்டங்களுக்கு மேலே பறந்து கொண்டிருக்கும். ராஜாளியின் மேம்பட்ட இந்தச் சிந்தனை அதன் தனித்தன்மை. பறவைகளில் நாம் ஏன் ராஜாளியாக இருக்கக்கூடாது. சிந்தியுங்கள் மாணவர்களே!
தனித்தன்மையுடன் வாழ்வதுதான் வெற்றி. தனிமையில் இருந்து சிந்திப்பவர்களே தனித்தன்மையை பெறுவார்கள். ஆம், சுவாமி விவேகானந்தரின் “தனித்திரு விழித்திரு பசித்திரு” என்ற பொன்மொழியை பின்பற்றினால் ஒவ்வொரு சொல்லிலும் இறுதியில் இருக்கும் “திரு” என்ற சொல்லின் பொருள் புரியும். ‘திரு’ என்பது மரியாதையை குறிக்கும் சொல் என்பதை நாம் அறிவோம். அறிவுப் பசியோடு, விழிப்புணர்வோடு, தனித்தன்மையோடு இருப்பவர்களை ‘திரு ‘தேடி வந்து சேரும் என்பதை உணருங்கள்.
வானும் மண்ணும் மட்டும்தான் பூமியில் இருக்கின்றனவா? ஏன் ஆழ்கடலும் பாலைவனமும் கூட இருக்கின்றனவே. நம்மை யாரேனும் ஆழ்கடலில் தூக்கி வீசினால் அங்கு கப்பலையே கவிழ்க்கும் நீலத்திமிங்கலமாக நாம் உருவெடுக்க வேண்டும். ஆழ் கடலையே ஆட்சி செய்யும் திமிங்கலம் கடலுக்குப் பெருமை. திமிங்கலத்தின் ஆற்றல் அளவிடற்கரியது. அப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவராக நாம் உருவெடுக்க வேண்டும். பிறப்பு ஒரு முறை தான் அதை பதிவு செய்துவிட்டு மறைந்த பின்னும் வாழ்வதுதான் சாதனை, பாரதியை போல், வள்ளுவரைப் போல்...
என் ஆற்றல்மிகு மாணவர்களே ஏதேனும் ஒரு சூழ்நிலையில் நமது பயணமானது பாலைவனத்தில் நடக்குமேயானால் அங்கே நாம் ஒட்டகமாக மாறி நம் பயணத்தை வெற்றிப் பயணமாக மாற்ற வேண்டும். நாம் எங்கே இருக்கிறோம் என்பது முக்கியமல்ல எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். சிங்கத்தின் வாலாக இருப்பதைவிட கொசுவுக்கு தலையாய் இருப்பதே சிறந்தது என்று சொல்வார்கள்.
ஆம், நாம் எங்கு இருந்தாலும் அதிக ஆற்றலோடு, நல்ல நினைவாற்றலோடு, அறிவாற்றலோடு, இயங்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தனித்தனி படைப்புகள். நாம் படிப்பாளிகளாய் இருப்பதைவிட நல்ல படைப்பாளிகளாய் வாழ்வோம்.
கல்வியினால் மட்டுமே மனிதன் உயரமுடியும். கல்வியினால் மாணவரும்,மாணவரால் மாநிலமும், மாநிலத்தால் நானிலமும் உயரும் வெற்றி பெற உழைப்போம், உழைப்போம்...
- கட்டுரையாளர் கல்வியாளர், எழுத்தாளர், மயிலாடுதுறை