

‘தேர்வு இல்லை' ‘கேள்வி பதில் இல்லை.'
‘திட்டு வாங்காத வகுப்பு.' இதுதான் என் வாசிப்பு இயக்க வகுப்பிற்கு குழந்தைகள்
கொடுத்த அடையாள அட்டை.
வாசிப்பு இயக்க புத்தகத்திற்கு நான் வைத்த பேர் "Magic Book". மாணவர்கள் வாசிக்கையில் அவர்கள் முகம் மாறுவதை கவனிப்பேன். அது நான் படித்த புத்தகமாகத்தான் இருக்கும். இருந்தாலும் இவர்களின் முக மாற்றம் இன்னொரு முறை எடுத்து என்னை வாசிக்க வைக்கிறது. மாணவர்கள் வாசிக்கும்போது தன்னையே அறியாமல் வாய்விட்டு சிரிக்கிறார்கள். யோசிக்கிறார்கள். கேள்வி கேட்கிறார்கள்.
ஆரம்பத்தில் வகுப்பில் நின்று பாட எனக்குக் கூச்சம் இருந்தது. அப்புறம் நானும் சில மாணவிகளும் சேர்ந்து பாடினோம். இப்போ ஒரு கச்சேரியே ஏற்பாடு பண்ணலாம். எனக்குள்ள இருந்த கூச்சத்தை உடைத்தது வாசிப்பு இயக்கம் தான். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாட்டு தேவையா? என முதலில் தோன்றியது. கல்யாணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான எனக்கே அந்தப் பாடல்களைப் பாடும் போது மனசு லேசாகிறது. இப்போது அவர்களுக்கு பாடல்கள்தான் தேவை எனத் தோன்றுகிறது.
இடையார்பாளையம் ஐந்தாம் வகுப்பு மாணவி, ‘சேவல் முட்டை'கதையைப் படித்துவிட்டு ஐயோ!என்று தலையில் அடித்துக்கொண்டாள். என்ன ஆச்சு? எனக் கேட்டேன். "இந்த சேவலுக்குஅறிவே இல்ல. முதல்லயே தப்பிச்சுஓடி இருக்கலாம். நரி காலுல கட்ட வரும் போதே கொத்தி வச்சுட்டு ஓட வேண்டியது தானே" நான் ஒன்றும் சொல்லாமல் திரும்பி நின்று சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.
மலைப் பயணம்: தூமனூர் மலைப் பள்ளிக்குக் மாங்கரையில் இருந்து ஜீப்பில் தான் போக வேண்டும். பேருந்துஇல்லை. முதல் தடவை சென்றபோது பயம். வளைவில் ஜீப்பில்இருந்து விழுந்தால் அவ்வளவுதான். யானை அல்லது புலிக்கு தான் வாசிப்பு இயக்கம் நடத்த வேண்டும். பல தடவை மனதில் தோன்றியது. 'இறங்கி ஓடிடு தேவி' அப்புறம் இந்த ஒரு முறை மட்டும் போய் பாப்போம் என நினைத்துப் போனேன். அது பள்ளி மட்டும் இல்லை. அழகான குடும்பம். குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு. எந்த ஒரு விசயத்தையும் தயங்காமல் ஆசிரியரிடம் பேசும் குழந்தைகள். பார்க்கவே வியப்பாக இருந்தது. நான் புத்தகத்தை தந்த உடனே வாங்கி அழகாக படிக்க ஆரம்பித்தார்கள். ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் எனக்கு புத்தகம் இல்லையா என சண்டை போட்டு வாங்கி படம் பார்க்கிறார்கள்.
அடுத்து ஆனைக்கட்டி பனப்பள்ளி. பேருந்தில் போகும் போது கொஞ்சம் தலை சுத்தும். மலையில் உள்ள பள்ளி. அருகில் கேரளா எல்லை. அந்தக் கிராமத்துக் குழந்தைகள் மட்டுமே அங்கே படிக்கிறார்கள். கதை சொல்ல தயக்கம் காட்ட மாட்டார்கள். அவர்கள் பேசுவது கொஞ்ச நேரத்துக்கு நமக்கு புரியாது. ஏன்னா மலைவாழ் மக்களின் மொழியும் சேர்ந்து இருக்கும். ஆனால் கேட்கஅழகாக இருக்கும். முதலில் நேரம் தர யோசித்த தலைமை ஆசிரியர்களும், "இப்போது இன்னும் கொஞ்ச நேரம் எடுங்க. பசங்க நல்லா ஆர்வமா வாசிக்கிறாங்க. இதே மாதிரி ஆங்கிலத்திலும் புத்தகம் கொடுங்க" என சொல்கிறார்கள். இதை மாற்றத்திற்கான அடையாளமாகப் பார்க்கிறேன். இது வாசிப்புஇயக்கத்திற்கான அங்கீகாரம்.
- ஸ்ரீ தேவி; கட்டுரையாளர் வாசிப்பு இயக்கக் கருத்தாளர் கோவை.