Last Updated : 11 Dec, 2023 04:30 AM

 

Published : 11 Dec 2023 04:30 AM
Last Updated : 11 Dec 2023 04:30 AM

ஆண் பிள்ளைக்கு பெண் நட்பு அவசியமா?

"ஏதாவது ஒன்னாவது கிடைக்குமா என்று தேடினேன். எங்குமே கிடைக்கவில்லை. அருணை அழைத்து "விஸ்பர்" இல்லனா "ஸ்டேஃபிரீ" ஏதாவது ஒரு பாக்கெட் வாங்கிட்டு வா" என்று அருணின் கையில் பணத்தைத் திணித்தேன். ஒரு நாள் கூட இதெல்லாம் நான் வாங்க மாட்டேன் என்று அவன் கூறியதும் இல்லை. நானும் இது பொம்பளைங்க சமாச்சாரம் என்று எண்ணி அவனிடம் சொல்வதற்குத் தயங்கியதும் இல்லை. பீரியட்ஸ் நேரங்களில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி, கால் குடைச்சல் என்று அசந்துபடுத்து இருந்தேன். சின்னவன் முகில் பிஞ்சு விரல்களால் கால்களை அமுக்கினான். உனக்கு கை வலிக்கும் தங்கம் வேண்டாம் என்றேன். இல்லம்மா... நீ மட்டும் எனக்கு கை கால் அமுக்கிற என்று மழலை மொழியில் வலி பறந்தோடியது.

நாப்கின் வாங்கி வந்து வைத்துவிட்டு "அம்மா கேர்ள்ஸ் எல்லாருக்குமே அந்த நேரத்துல இப்படித்தான் இருக்குமா?" என்று கேட்டான் அருண். "ஆமாங்கண்ணு, பெரும்பாலான கேர்ள்ஸ்க்கு இப்படித்தான் இருக்கும். அந்த நேரத்துல கோபம் கோபமா வரும். உடல் வலி மட்டும் இல்ல, மனசுலயும் பெரும் குழப்பம் இருக்கும். உளவியல் ரீதியான குழப்பங்கள் இருக்கும். இதையெல்லாம் புரிஞ்சிக்கிற ஆம்பளப் பசங்க எந்தப் பெண்ணுக்கும் பிரச்சினை தர மாட்டாங்க" என்றேன். ஒருநாள் மாலை ஒரு போன்கால் பள்ளித் தோழன் அழைத்திருந்தான். பேசி முடித்து வைத்தவுடன், "ஏம்மா நீயும் அந்த அங்கிலும் சின்ன வயசுல இருந்தே பிரண்ஸ்தானே" என்று கேட்டான் அருண்.

"ஆமாண்டா சிலம்பம் கிளாஸ் சேர்ந்து போவோம். அவனோடு சேர்ந்து நான் கிரிக்கெட், பல்லாங்குழி, நொண்டி, கொல கொலயா முந்திரிக்கானு நிறைய விளையாடிருக்கேன். உனக்கு யாராவது கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்களா?" "போம்மா கேர்ள்ஸ் எல்லாம் யாரும் இல்லை" "ஏன்?"

"ஏன்னு தெரியல. சின்ன வயசுலேயே பாட்டி வீட்டுல கேர்ள்ஸ்கூட விளையாடிருக்கேன். அதுக்கப்புறம் ஸ்கூல்ல எல்லாம் யார்கிட்டயும் பேசமாட்டேன். சில பொண்ணுங்க ரொம்ப பிகு பண்ணுவாங்க. சில பேரு வந்து பேசுவாங்க. ஆனா நான் பேசமாட்டேன்".

"ஏன்டா பேசுடா. பெண் பிள்ளைகளோட மனநிலை எப்படி உனக்குத் தெரியும்?"

"அதெல்லாம் நான் ஏமா தெரிஞ்சுக்கணும்?"

"உன்னோட வாழ போறவங்களோட மனநிலை புரிஞ்சிக்கணும். அவங்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கணும்னா அதே வயசு இருக்கிற பெண்களோட பழகும்போது சுலபமா புரிஞ்சுக்கலாம்". "நீ வேற காமெடி பண்ணிட்டு. நீ மட்டும் ஏம்மா வித்தியாசமா இருக்கே?" "வித்தியாசமாவா என்னடா சொல்ற?" "என்னோட பிரண்ட்ஸோட அம்மா எல்லாம் பொண்ணுங்க கிட்ட பேசினாவே திட்டுவாங்களாம்" இன்னைக்கும் என்னோட சின்ன வயசுல இருந்த நட்பு தொடருது. ஏன்ன அவன் என்னை அவ்வளவு புரிஞ்சுக்குவான். சில இடங்களில் ரொம்ப பாதுகாப்பாகவும் என்னை உணரவச்சிருக்கான்.

நான் எப்படி என் நண்பனைப் பற்றி உன்கிட்ட இவ்ளோ நல்லதா சொல்லிட்டு இருக்கேனோ அப்படி உன்னோடு பழகுற கேர்ள்ஸ் எத்தனை வருஷம் கழிச்சாலும் உன்னோட நட்பை சிலாகிக்கணும். உன்னை எங்காவது பார்த்தாலும் உன்கிட்ட வந்து பேசணும். போறாம் பாரு இவனெல்லாம்னு சொல்லாம அவளோட ஹஸ்பண்டை உங்கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கணும். அப்படியான ஒருத்தனா நீ இருந்தாலே எனக்கு சந்தோஷம். அப்படியான ஆத்மார்த்தமான புரிதலான ஒரு பெண்ணோட நட்பு ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் தேவை. உன்னை ஊக்கப்படுத்தி, தளர்ந்து போகும்போது ஆறுதல் சொல்லி, உணர்வுகளைப் புரிந்து கொள்கிற நட்பு ரொம்ப பெரிய பலம்னு நான் நினைக்கிறேன்"

"ஐ அம் ரியலி லக்கி மா" என்று என் கரம் பற்றினான் அருண்.

- கட்டுரையாளர் எழுத்தாளர், கதை சொல்லி, (மந்திரக் கிலுகிலுப்பை, கடலுக்கு அடியில் மர்மம் உள்ளிட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்) தொடர்புக்கு: sarithasanju08@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x