

நமது மாநில அரசு ஆங்கில வழிக் கல்வியினை அரசு பள்ளிகளில் தொடங்கியது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. இருந்தபோதிலும் இதுபற்றிய சிந்தனை என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. ஆங்கில வழிக் கல்வியினை ஒரே பள்ளி வளாகத்தில் ஒரே மாதிரியாக நடத்தும்போது என்ன மாதிரியான விளைவுகளை மாணவர் மத்தியில் ஏற்படுத்தும் என்று சிந்தித்ததன் விளைவே இக்கட்டுரை.
கிராமப்புற மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை மேம்படுத்தும் நோக்கிலும், பெற்றோரின் பொருளா தார சுமையைக் குறைப்பதற்காகவும், சமுதாயத்தின் கல்வித் தரத்தினை உயர்த்தவும் உருவாக்கப்பட்டதே அரசு பள்ளிகள். இத்தகைய பள்ளிகளின் வரவால் எத்தனையோ படிப்பறிவற்ற ஏழை மக்களின் பிள்ளைகள் கல்வி கற்றிடும் அரிய வாய்ப்பு கிடைத்தது. மெக்காலே போன்ற ஆங்கிலேயர்களின் சீர்திருத்தத்தால் கல்வி கற்றல் கற்பித்தலில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
சமச்சீர் கல்வி
‘மெட்ரிகுலேஷன் போர்டு’ என்று தனிப்பட்ட ஒரு நிர்வாகத்தின் கீழ் அமைந்த ஆங்கில வழிப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்து சரளமாக ஆங்கிலத்தில் பேசச் செய்திட வேண்டும் என்ற விருப்பத்தில் பெற்றோர் ஆங்கில வழிப் பள்ளியை நாடினர்.
கல்வியில் புரட்சி என்ற நோக்கில் சமச்சீர் கல்வி என்ற திட்டம்அறிமுகப்படுத்தப்பட்டது. ஐசிஎஸ்சிஇ,சிபிஎஸ்இ, சமச்சீர் கல்வி முறையை பின்பற்றும் மாநில கல்வி என்ற மூன்று விதமான கல்வி வாரியங்கள் தற்போது பின்பற்றப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆங்கில வழிக் கல்வியின் மூலம் எந்த மாதிரியான மனநிலைக்கு மாணவர்கள் உள்ளாகி றார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
பெற்றோரின் ஆர்வம்
தாய்மொழியில் கல்வி கற்கும் எந்த ஒரு மாபல்லோட்டிணவரின் சிந்திக்கும் ஆற்றலும் படைப்பாற்றலும் அளப்பரிய தாக உள்ளதாக ஆய்வுகளின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் ஆங்கில வழியினை நாடிச் செல்லும் பெற்றோரின் ஆர்வத்தை காலனிய ஆதிக்கத்தின் விளைவு என்றே நாம் கருத்தில் கொள்ள முடிகிறது.
சாதகங்கள்
ஆங்கில வழியில் அனைத்து பாடங்களையும் கற்கின்ற ஒரு மாணவர் மேற்படிப்புக்கு செல்லும் போது எளிமையாக பாடங்களை கற்க முடிகிறது. போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் படிப்பிற்காகவோ, வேலையின் நிமித்தமோ செல்லும் போது தயக்கமின்றி செல்ல முடிகிறது. வெளிநாடுகளில் வேலை பார்க்கவும் மேற்படிப்பை தொடரவும் பேருதவி புரிகிறது.
பாதகங்கள்
பாட நேரம் தவிர பிற வேளைகளில் தாய் மொழியில் உரையாடுவதால் ஆங்கில மொழிப் புலமை முழுமையாக கிடைப்பதில்லை. தாய் மொழியையும் முழுமையாக அறியாமல் ஆங்கில வழி கல்வியையும் முழுமையாக புரியாமல் மொழித்திறனும் இன்றி அனைத்துப் பாடங்களிலும் தோல்வியைத் தழுவுகின்ற மாணவர்களும் இருக்கின் றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. கற்றலில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் உளவியலையும் வெகுவாக பாதிக் கிறது. படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது.
தீர்வுதான் என்ன?
ஆங்கில வழிக் கல்வி பயிலும்மாணவர்களுக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமனம் செய்யவேண்டும். தமிழ் வழி மாணவர் களுக்கும் ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கும் தனிப்பட்ட வளாகங்கள் இருக்க வேண்டும்.
ஆங்கில மொழியில் தன்னம் பிக்கையுடன் பேசுவதற்கும், வாசிக்கும் திறனை மேம்படுத்தவும் பயிற்சி அவசியம். ஆங்கில மொழி சார்ந்த விளையாட்டுகளையும் புதிர்களையும் மாணவர்களிடம் அறிமுகப்படுத்தி அவர்களது கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
“தாய் மொழியின் மீது பற்று தலையும் ஆங்கில மொழியின் மீது ஆர்வத்தையும் முறைப்படுத்துவது அரசின் கடமை மட்டுமல்ல, ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கடமையும்தான்...”
கட்டுரையாளர்
தலைமை ஆசிரியர்
பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி
நாகமலை, மதுரை.