Published : 20 Nov 2023 04:25 AM
Last Updated : 20 Nov 2023 04:25 AM

இயற்கையின் வலை

விழாக்கள் என்ற உடனேயே மழலைகளின் நினைவுக்கு வருவது புதிய ஆடைகள், தின்பண்டங்கள். வேலைக்குச் செல்லும் இல்லத்தரசிகளின் நினைவுக்கு வருவது வீட்டை சுத்தம் செய்தல். அதுபோன்று ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது வீட்டில் படிந்திருந்த ஒட்டடையையும் அதனை கட்ட பலமுறை முயற்சி செய்து கொண்டிருந்த சிலந்தியையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். பொதுவாக ஒட்டடை அல்லது நூலாம் படை என்று கூறப்படும் இந்த சிலந்தி வலையைப் பற்றிய ஆச்சரியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த சிலந்திகள் உண்மையில் இயற்கையின் வரப்பிரசாதங்கள். அவற்றின் அருமை தெரியாமல் நாம் தான் அருவருப்பும் பயமும் கொள்கிறோம். பூச்சிக்கொல்லி நஞ்சுகளினால் தினம் தினம் சாகடித்து வருகிறோம். சிலந்திகளின் குணாதிசயங்களில் பொதுப்பார்வைக்கு அதிகம் தென்படுவது வீடுகளில் உள்ளே இவை இழைகளினால் பின்னி வைத்திருக்கும் வலைகள்தான். சிலந்தி இழைகள் நாம் நினைப்பது போல் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. இழைகளை உருவாக்குவதற்கு என்று சிலந்திகளின் வயிற்றுப்புறத்தில் ஏராளமான சுரப்பிகள் உள்ளன. மொத்தம் ஏழு வகைகள். ஒரு சிலந்தியிலேயே எல்லா வகைகளும் இருப்பதில்லை.

ஒவ்வொரு வகையும் குறிப்பிட்ட ஒரு தொழிலுக்கான இழைகளை சுரக்கின்றன. சிறப்பு திரவம் வெளிவந்ததுமே அதில் உள்ள புரத மூலக்கூறுகள் தன்னுடன் தானே மீண்டும் மீண்டும் இணைந்து புரதச்சங்கிலியாக நீண்டு இறுகி விடுகிறது. இந்தப் புரத நாருக்கு பைப்ரோனின் என்று பெயர். பெயரைச் சூட்டிய விஞ்ஞானிகளால்கூட இந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்பதை இதுவரை விளக்க முடியவில்லை. இதைவிட ஆச்சரியம் சிலந்தி இழைகளின் தாங்கும் பலம் சாதாரணமாக மனிதர்களால் 10 cm தூரத்தில் தெளிவாக பார்க்கக்கூடிய ஒரு பொருளின் தடிமன் 25 மைக்ரான்கள்.

ஒரு சிலந்திஇலையின் தடிமன் இந்த நுண்ணிய அளவை விடவுமே 100 மடங்கு நுண்ணியது. சராசரியாக 0.15 மைக்ரான்கள் ஒளிபட்டு பிரதிபலிக்கும் போது மட்டுமே காண முடிகிறது. மனிதர்களின் தயாரிப்பான நைலான் நார்களை விடவும் அதிக இழுவைத் தன்மை கொண்டவை. பென்சில் அளவு தடிமன் கொண்ட சிலந்தி இழையால் ஒரு போயிங் 747 விமானத்தின் பறத்தலைக்கூட இழுத்து நிறுத்திவிட முடியுமாம். நினைத்துப் பார்க்கவே மிகவும் அதிசயமாக இருக்கிறது. சிலந்திகள் தமது இரைகளைப் பிடிப்பதற்கு கையாளுகின்ற உத்திகள் மதிநுட்பம் வாய்ந்தவை.

முக்கோண சிலந்தி தனது முக்கோண வடிவ வலையை பின்னி முடித்துவிட்டு அந்த வலையை இயக்கக்கூடிய ஒரு இழையை மட்டும் தன்வசம் வைத்துக்கொண்டு காத்திருக்கும். பூச்சி வலையில் அமர்ந்தஅதே கணத்தில் சிலந்தி தான் வைத்திருந்த இழையைவிட, வலை ஒரு போர்வையைப் போல இரையை மூடிக் கொள்ளும். இனி அந்த வலையை மீறி போவது என்பது பூச்சிக்கு முடியாத காரியம். எல்லா சிலந்திகளும் வலை பின்னு வது இல்லை. போலாஸ் என்னும் சிலந்தி தூண்டில் போடுவது போல ஓர் இரையை நோக்கி வீசுகிறது. இரையின் முனை குமிழ் போல பருத்துப் பசை தன்மையாக இருக்கும்.

இதில் உள்ள பெரோமோன்களால் கவரப்பட்டு பூச்சி அப்படியே வந்து ஒட்டிக்கொள்கிறது. சிலந்திகளிலேயே மிகப்பெரிய கோலியாக் சிலந்தி கால்களை அகல பரப்பிய நிலையில் ஒரு சாப்பாட்டுத்தட்டு அளவில் சுமார் 11 அங்குலம் வரை இருக்கும். இது சிறு பறவைகள், பாம்புகள், தவளைகளைக்கூட மயக்கித் தனது வலைகளுக்குள் இழுத்து விடுகிறது. சிலந்திகள் எல்லாமே நஞ்சுகளை கொண்டிருந்த போதும் நஞ்சின் வீரியம் அவற்றின் இரைகளைக் கொல்லும் அளவிலேயே இருக்கிறது.

சிலந்திகளில் மிகப்பெரிய சிலந்தியின் விஷம்கூட மனிதர்களில் உச்சபட்சமாக ஒரு குளவி கொட்டிய தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. சிலந்திகள் இரைகளுக் கென ஒதுக்கி வைத்திருக்கும் நஞ்சுகளை வீணாக்க விரும்புவதில்லை. தற்காப்புக்கென மனிதர்களை கடிக்க நேரிடும்போது முதற்கொட்டு நஞ்சில்லாத உலர் கடியாகவே இருக்கிறது. இயற்கை பெருவாரியாக உள்ள பூச்சிகளின் எண்ணிக்கையை சமநிலையில் வைத்திருப்ப தற்காகவே சிலந்தியினை பூச்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலும் பூச்சி உண்ணிகளாக படைத்துள்ளது.

சிலந்தி வலையினை காணும் போதெல்லாம் நிச்சயம் இந்த தகவல்களை நினைவு கூர்வீர்களா?

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x