

வழக்கம் போல் இருக்கும் முகவாட்டம் இல்லை. புத்தகமும் கையுமாக இருந்த ஒன்றை மீட்டெடுக்கும் போராட்டமாக கண்களை மூடியும், விரல்களை நீட்டியும், மடக்கியும் நாள் தோறும் நடக்கும் மனனப் பயிற்சிக்கு இன்று விடுமுறையோ? என்று யோசிக்க வைத்தது அன்றைய குழந்தைகளின் முகமலர்ச்சி.
நூறு சதவீத மகிழ்ச்சி: ஆம்... இன்பச் சுற்றுலா, இரண்டு மணி நேர தவம். கண்களில் துருதுரு... காதுகளில் நுனி கூர்மை ... சிகை அலங்காரங்கள், ஒப்பனைகள், சீருடைகூட சற்று நேர்த்தி. எல்லோர் முகத்திலும் நூறு சதவீத மகிழ்ச்சி. நண்பர்கள் அவரவர் கூட்டத்தோடு இதுவரை சேர்த்து வைத்திருந்த அனைத்து கதைகளையும் கூடி, பேசிகழிக்கிறார்கள். தினமும் நிகழும் பிரிவேளை வகுப்புகளுக்கு இன்று விடுப்பு. ஒரு நாள் இன்பச் சுற்றுலா இரண்டு மணி நேர பயணம் தான். ஆனால், பல ஆண்டுகளுக்கு நினைவில் நிற்கும் பெருநிகழ்வு.
பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டன. வகுப்பு வாரியாக மாணவர்கள் வருகை பதிவேட்டின்படி நிரப்பப்பட்டார்கள். ஆங்காங்கே அவரவர் நண்பர்களோடு இருக்கையில் இடம் பிடித்தாயிற்று...மெல்லிய காற்று மெது மெதுவாக தேகம் தொடுவது போல் பள்ளி பேருந்தானது வளாகத்தை விட்டு வெளியேறுகிறது. ஒரே மகிழ்ச்சி சொல்ல வார்த்தைகளே இல்லை. பாட்டு பாடலாமா விடை கிடைத்தவுடன் எத்தனை பாடல்கள் இரண்டு மூன்று குழுவினராக அடுத்தடுத்து இரண்டு மணி நேரம் பயணமும் பாடல்களால் ததும்பின.
சிற்பங்கள் பேசின: சேர வேண்டிய இடம் அடைந்த வுடன் வரிசையாக நிறுத்தப்பட்டு சுற்றுலாத்தலமான ராஜேந்திர சோழனின் கங்கைகொண்ட சோழபுரத்தை வலம் வர ஆயத்தமாயினர். மதங்களைக் கடந்தது மனிதம். அனைத்தையும் கடந்தது தோழமை. குழந்தைகளிடம் எந்த பேதமும் இல்லை. அவரவர் அவரவர் நண்பரோடு மகிழ்வோடும் மனநிறை வோடும் பேசி மகிழ்ந்தனர். தேடிச் சென்று வரலாறை கேட்டுத் தெளிகின்றனர். கட்டிட பிரமிப்பைக் கண்டு ரசிக்கின்றனர். கற்கள் அடுக்கப்பட்டுள்ளதை வியப்போடு நோக்குகின்றனர். வெட்ட வெளிக்கு வந்த பிறகு குழுவாக இணைந்து நிழற் படங்கள் எடுக்கப்பட்டன. விதவிதமாக நிழற் படங்களை எடுக்கச் சொல்லி ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டனர். மகிழ்ச்சியின் மிச்சமாக விளையாடி உற்சாகத்தில் திளைத்தனர். ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்றாக கூடி மகிழ்ந்து விளையாடும் தருணம் மிகப்பெரிய பேரின்பம்.
இன்பமாக கழிந்த நாள்: ஒரு நாள் பொழுது எவ்வாறெல்லாம் கழிகிறது? ஆயிரம் ஆயிரம் மனநிறைவுகளால் நிரம்புகிறது. ஆசை கள் நிராசைகள் ஆகி இலக்குகளாக மாறுவதும்கூட இயற்கை தான். குழந்தைகளின் உலகம் இன்பம் மிக்கது. நாள்தோறும் தேர்வோடும் மதிப்பெண்களோடும் போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு விடுப்பு என்பது பிடித்த செயல்களை விருப்பம் போல் செய்ய அனுமதிப்பது ஆகும்.
இன்பம் தரும் இலக்கியங்கள்: பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, உறவினர்களின் கேள்விக் கணைகள், ஆசிரியர்களின் நம்பிக்கை, பள்ளிகளின் இலக்கு, எதைப் படிப்பது? என்ன செய்வது? எதிர்கால சவால்கள் வரிசை கட்டி நின்று கொண்டுஅச்சுறுத்த மனம் உழன்று நிற்கின் றனர். அவர்களை ஆற்றுப்படுத்தும் ஒவ்வொரு சுற்றுலா பயணங்களும் இன்பம் தரும் இலக்கியங்கள்தான். மகிழ்விப்போம். குழந்தைகளைக் கொண்டாடுவோம்.
பயணம் புதிய வழியை உருவாக்கும். புத்துணர்வைக் கொடுக் கும். மனச் சுமைகளைச் திருடிச் செல்லும். பூமியை ஒற்றி நடவாத இன்பநிலையை அடையச் செய்யும். இடைவெளிகள் கிடைக்கும் போதெல்லாம் இட்டு நிரப்புங்கள்... மகிழ்ச்சி நிலைக்கும். பள்ளிகள் நீண்ட தூர சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு முன்பு பள்ளிகள் அமைந்துள்ள தங்கள் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்குகுறிப்பாக கோடை வாசஸ்தலங் களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது இயற்கை அழகை ரசிப்பதுடன், புத்துணர்வுடனும் மகிழ்ச்சி யாகவும் கல்வி கற்பதற்கான புதிய வாசல்களையும் திறந்துவிடும்.
- கட்டுரையாளர்: ஆசிரியை எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி மாவட்டம்.