

தேநீர்க் கடை, ரயில் பயணம், நடைபயிற்சி, வீடு மற்றும் அலுவலகங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனிதன் நாட்டைப் பற்றிய தனது அதிருப்தியை வெளிக்காட்டுகிறான். தெருவெல்லாம் குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. நமது தெருவே ஒரு குப்பைத் தொட்டி தான். மக்கள் வீட்டைப் பெருக்கி, குப்பையை தெருவில் கொட்டுகிறார்கள். பிளாஸ்டிக் பயன்படுத்தாதே என சொல்லும் அரசு, பிளாஸ்டிக் உற்பத்தி செய்வதை தடுக்கலாம் அல்லவா என பல்வேறு அதிருப்திகளை வெளிக்காட்டுகின்றனர்.
சேரன் அவர்கள் இயக்கிய படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசும் வசனம் ஒன்று வரும். "துபாயில ரோட்டுல சோத்தை குழச்சி அடிக்கலாம் டா" என்று. நமது ஊரில் அப்படி இல்லை. குப்பைகளின் மத்தியில் நாம் வாழ்கிறோம். சாக்கடையின் ஓரம் குடிநீரைப் பிடிக்கிறோம். இதற்கு அரசை மட்டும் குறை சொன்னால் போதாது. மக்களின் மனநிலையும் மாற வேண்டும். விதிகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு வாழ்கின்றனர்.
சுத்தம் சுகம் தரும்: ஐந்தில் வளையாதது ஐம்பதில்வளையாது என்பார்கள். சிறுவய திலேயே குழந்தைகளிடம் சுத்தம் குறித்த நல்ல எண்ணங்களை விதைத்து, வளர்க்க வேண்டும். தங்களது இருப்பிடத்தை, வகுப்பறையை, வீட்டை, தான் பயன்படுத்தும் அத்தனை இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க பழக்கப்படுத்த வேண் டும். ‘சுத்தம் சுகம் தரும்' என்பது பழமொழி. சுத்தமாக இருப்பது நல்ல ஆரோக்கியத்தை, உடல்நலத்தை தரும். சுத்தமான சூழல் நல்ல மனநிலையையும் கொடுக்கும்.
தினமும் வகுப்பறை சுத்தம்: நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபடுவதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்கப்படுத்த வேண்டும். தினம் தினம் தங்களது வகுப்பறையை மாணவர்கள் சுத்தப்படுத்தலாம் என்பது எனது கருத்து. இதில், ஆசிரியர்களும் மாணவர்களோடு ஈடுபட வேண்டும்.
நற்பண்புகளை வளர்க்கும்: அனைத்து வகைப் பள்ளிகளிலும் தோட்டம் ஏற்படுத்தி, தோட்டக்கலை குறித்து மாணவர்கள் நேரிடையான அறிவைப் பெற வேண்டும். இன்றைய மாணவர்களில், குறிப்பாக நகர்ப்புற வாழ் மாணவர்களிடத்தில், செடி, கொடி மரங்களின் வகைகள் குறித்து கேட்டால் தெரிவதில்லை. ஒரு கீரையைக் காட்டி, அதன் பெயரைக் கூற சொன்னாலும், பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. பள்ளிகளில் தோட்டம் வைப்பது, மாணவர்களின் அறிவை மட்டுமல்ல, அவர்களிடையே நற்பண்புகளையும் குறிப்பாக ஒழுக்கத்தையும் வளர்க் கும்.
தோட்டக்கலை பயிர்கள்: மரங்கள், செடிகள் வளர்க்கும் போது, அழகுக்காக அவற்றை வளர்ப்பதை விட பயன்பாட்டிற்காகவும் வளர்க்கலாம். பயனுள்ள மரங்களை வளர்க்க வேண்டும். யாரோ ஒருவர் நட்ட மரம், போகும் வழியில் நமக்குநாவற் பழங்களைத் தருகிறது. ஒரு வீட்டில் வளர்க்கும் முருங்கை, பக்கத்து வீடுகளுக்கும், உறவினர்களுக்கும், தங்களுக்கும் பயனுள்ளதாக முருங்கக்காயை, முருங்கக் கீரையைத் தருகிறது. அதில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதை குழந்தை களுக்கு கற்பிக்க வேண்டும்.
உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் டெங்கு போன்ற நோய்களுக்கு சுகாதாரமின்மையே காரணம். சுகாதாரத்தைப் பேண, ஒவ்வொருவரும் தங்களுடைய இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
விளக்குமாறுகளை கையில் எடுப்போம். பூமியின் அழகை விளக்குமாறு எனும் தூரிகையால் மிளிரச் செய்வோம். "சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்" என்ற பாடல் வரிக்கேற்ப சுத்தம் என்ற நல்ல பழக்கத்தை நம் வீட்டிலிருந்தே தொடங்குவோம். சுத்தத்தால் நாமும் அழகாவோம்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, செங்கல்பட்டு மாவட்டம்.