

ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமான எண்ணங்களையும், ஆற்றல்களையும் தம்முள் கொண்டவர்கள். அந்த ஆற்றல்களும் எண்ணங்களும் அவர்களுக்குள் படிப்படியாக வளர்ச்சி பெறுகின்றன. இதில் பிறப்பதற்கு முன்பே குழந்தையின் மூளை முழு அமைப்பை பெற்றுவிடுகிறது. பிறந்தது முதல் 3 வயது வரை உள்ள குழவிப் பருவத்திலேயே கேட்கும் திறன் முழு வளர்ச்சி நிலையை எட்டுகிறது. குழந்தையின் துரிதமான வளர்ச்சிக்கு முதலில் தாய்ப்பாலும், அன்பும், அரவணைப்பும் அவசியம்.
பிறகு குழந்தைக்கு சத்துமிக்க உணவும், சுகாதாரமான சூழ்நிலையும், நிறைவான புலன் தூண்டல்களும் மிகவும் அவசியம். அதனால் பெற்றோர் குழந்தைகளிடம் பேசிக்கொண்டும், அவர்களைத் தொட்டு தூக்கி விளையாடிக் கொண்டும் இருக்க வேண்டும். மூன்று வயதில் குழந்தையின் உடல் வளர்ச்சி கொஞ்சம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏழு வயதில் இருந்து 10 வயதுக்குள் குழந்தையின் உடல்வாகு என்பது அமைந்துவிடுகிறது.
குழந்தைப் பருவத்தில் உடல் இயக்கச்செயல்கள் என்று கூறப்படும் கண்களைச் சுழற்றிப் பார்த்தல், தலையைத் திருப்புதல், உட்காருதல், நடத்தல், ஓடுதல் போன்றவற்றில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படும். இது போலவே புலன் இயக்கச் செயல்கள் என்று சொல்லப்படும் கண், கை இணக்கச்செயல்பாடு, இயக்கங்களை துல்லியமாகக் கட்டுபடுத்துதல், தூண்டல்களை உணர்தல் போன்றவற்றிலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. இந்தப் பருவத்தில் வண்ண வண்ணப் பொருட்களை காட்டுவதும், மரங்கள், செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றைக் காட்டி விளையாடுவதும் அறிவு வளர்ச்சிக்கு உதவும்.
உலக அறிவு: குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மூலமாகவே உலகத் தொடர்பு ஏற்பட்டு, உலக அறிவு கிடைக்கத் தொடங்குகிறது. அதனால் குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியில் நல்ல கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மன வளர்ச்சி: நல்ல ஆரோக்கியமான சிந்தனைக் கூறுகளில் குழந்தைகள் வளர்க்கப்படுவதன் மூலம் மட்டுமே நல்ல மனத்திறன் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். ஒரு சமூகம்தான் அங்கு வாழக்கூடிய குழந்தைகளின் மன வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. சிறு குழந்தைக்கு பொருள் அறிவு என்பது அநேகமாக இருக்காது. உங்கள் செல்ஃபோனை எடுத்து வைத்துக்கொண்டு விளையாடும் குழந்தைக்கு அது செல்ஃபோன் என்பது தெரியாது. இந்தக் கட்டத்தில் தன் உடலின் உள்ளே இருந்து எழும் தூண்டல்களுக்கு ஏற்ற மாதிரி குழந்தை செயலாற்றும்; பசித்தால் அழும், வலித்தால் அழும். 6 வயதிற்குப் பிறகுதான் கவனித்தல், புலன்காட்சித்திறன் போன்றவற்றில் வரிசைக்கிரமமான வளர்ச்சி தொடங்கும். இசைக்கு முறையாக நடனம் ஆடத் தொடங்குவது இந்த வயதில்தான்.
நினைவாற்றல்: நினைவாற்றல் இரண்டு வயதிலிருந்தே தொடங்கிவிடுகிறது. முந்தைய நாள் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட ஞாபகத்தில் மறுநாள் கோயிலுக்குச் செல்லும் போது குழந்தை தானாகவே சாமி கும்பிடும். அதுபோல இன்னொரு ஆச்சரியம், 3 வயதில் கற்பனை சக்தி தொடங்கிவிடும். மண்ணில் வீடு கட்டி விளையாடுவதும், சமையல் செய்து விளையாடுவதும் இந்த வயதில்தான் தொடங்குகிறது. தொடர்ந்து அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்வதும், நிறைய விளையாட்டுப் பொருள்களை வாங்கித்தருவதும், நினைவாற்றல், கற்பனை ஆற்றல் வளர உதவும்.
உண்மையில் குழந்தை பள்ளிக்கூடம் வருவதற்கு முன்பே பாதிப்படிப்பை முடித்து விடுகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு குழந்தைகளின் ஒவ்வொரு பருவத்திற்கும் தேவையான வசதிகளை உருவாக்கித்தரும் சமூக அமைப்பு இருந்தது. விளையாடவும், நட்புக் கொள்ளவும், ஆதரிக்கவும், அரவணைக்கவுமான சூழல் இருந்தது. எனவே குழந்தைகளின் வளர்ச்சி என்பது முழுமையாக இருந்தது. இப்போது பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். காப்பகங்களில் விடப்படும் குழந்தைகளுக்கு உடல் இயக்கச் செயல்பாடுகள் மற்றும் புலன் இயக்கச் செயல்பாடுகளின் வளர்ச்சிக்கு எந்த வாய்ப்புமே இல்லாமல் போய்விடுகிறது. இந்த நிலை நிச்சயமாக மாற வேண்டும். குழந்தைகள், குழந்தைகளாக வளர வேண்டிய சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
- கட்டுரையாளர்: பட்டதாரி ஆசிரியர்/ ஆட்சிப் பேரவை உறுப்பினர் பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்; தொடர்புக்கு: suriyadsk@gmail.com