Last Updated : 14 Nov, 2023 04:33 AM

 

Published : 14 Nov 2023 04:33 AM
Last Updated : 14 Nov 2023 04:33 AM

குழந்தைகள் தினம் 2023: நேரு பிறந்தநாள் குழந்தைகள் தினமானது ஏன்?

அனைவருக்கும் வாக்குரிமை, பலகட்சித் தேர்தல் ஆகியவற்றுக்கு வித்திட்டு, ஜனநாயக முறை இந்திய மண்ணில் மலர போராடியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. இனவெறி, ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்கு எதிராக குரல் கொடுத்த சற்குணர். எல்லா நாடுகளும் சமாதான சுகவாழ்வு வாழ வேண்டும் என்ற கொள்கையை வகுத்து, உலக அமைதிக்கு முக்கியத்துவம் அளித்த பண்பாளர். இப்படிப்பட்டவர், தனது பிறந்த தினத்தை, அமைதிக்கான தினமாக அறிவிக்காமல் குழந்தைகளுக்குரிய நாளாக கொண்டாட ஆசைப்பட்டதேன்? இன்றைய குழந்தைகள், நாளைய ஆகச் சிறந்த மாமனிதராக விளங்க வேண்டுமெனில், அவர்கள் மிகச் சிறந்த புத்தகங்களை வாசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஆம், நேரு என்னும் மாமனிதர், புத்தக வாசிப்பின் மீது தீராத ஆசை வைத்திருந்தார். ஒரு முறை நேரு, வெளியூர் செல்லும் சூழல் ஏற்பட்டது. 10 மணி நேர பயணம் அது. பயண நேரத்தை பயனுள்ளதாக்கும் எண்ணத்தோடு நேரு, சுமார் 50, 60 புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டார். அவரது மகள் இந்திரா, இதனைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். “அப்பா, இத்தனை புத்தகங்களையும் உங்களால், இந்தப் பயணம் முடிவதற்குள் படித்து முடிக்க இயலுமா?” என்று கேட்டார். “படிக்க முடிகிறதோ, இல்லையோ, ஆனால், இவை என்னுடன் இருக்கையில், இந்தப் புத்தகங்களை எழுதிய அறிஞர்கள் அனைவரும் என்னுடன் பயணிப்பது போன்ற உணர்வு எனக்குள் ஊற்றெடுக்கும்.

அந்த எண்ணமே, எனக்கு மிகப் பெரிய பலத்தை வழங்கும்” என்று கூறினாராம். நேரு புத்தகங்களை நேசித்தது மட்டுமல்லாமல், அந்த புத்தகங்களை சுவாசித்தார் என்பது, இந்நிகழ்விலிருந்து நாம் அறிய வேண்டிய ஒரு அனுபவ பாடம். அகமதாபாத்தில் இருந்த நேரு, முசௌரியில் படித்துக் கொண்டிருந்த தனது பத்து வயது மகள் இந்திராவுக்கு, 30 கடிதங்களை எழுதினார். இந்தப் பரந்த பூமி, இயற்கை மற்றும் மனித வரலாறு ஆகியவை பற்றிய செய்திகளை அறிவியல் ரீதியாக இக்கடிதங்களில் விளக்கியுள்ளார். இந்தக் கடிதங்களின் தொகுப்பு, நேரு வேண்டுகோளின்படி, ‘தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்’ என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது. பத்து வயது சிறுமிக்கு புரியுமா, புரியாதா என்ற சந்தேகம் சிறிதுமின்றி, உலகம் பற்றிய பரந்த ஒரு கண்ணோட்டத்தை இப்புத்தகத்தின் மூலம் எல்லாக் குழந்தைகளுக்கும் காட்சிப்படுத்தினார்.

“ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்ட போது, ‘‘ஒரு நூலகம் கட்டுவேன்” என்று மகிழ்வோடு கூறியவர் நம் மகாத்மா. நேரு வாழ்ந்த இல்லமான, “தீன் மூர்த்தி பவன்”, நேருவின் நினைவைப் போற்றும் அருட்காட்சியகமாகவும், மிகச் சிறந்த புத்தகங்களைக் கொண்ட நூலகமாகவும் மாற்றப்பட்டு, மகாத்மா கண்ட கனவை நனவாக்கி, வாசிப்பின் மகிமையை உணர்த்தி நிற்கிறது. ஆம், உலகம் முழுவதும் சமாதானம் நிலவ வேண்டுமெனில், இன்றைய குழந்தைகள் நற்பண்பு உடையவராகவும், சமத்துவமும் சமாதானமும் கொண்டவராகவும் திகழ வேண்டும் என்பதை உணர்ந்திருந்தவர், நம் மனிதருள் மாணிக்கம் நேரு.

தனது சுவாசம் முழுதும் நிறைந்து, சுகமளித்த புத்தக வாசிப்பின் மகிமையை, குழந்தைகள் எண்ணிப் பார்க்க வேண்டும் என விரும்பித்தான், அவர், தன் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும் என்று கூறியிருப்பார் போலும். இன்றைய மாணவர்களிடம் நூலக புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க, நம் பள்ளிக் கல்வித் துறை பற்பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. குழந்தைகள் தினத்தில் நேருவின் அன்பையும் அறிவையும் பற்றி பேசுவதைக் காட்டிலும், புத்தகத்தை சுவாசித்த புனிதர் அவர் என்பதைப் பற்றி பேசுவதே இன்றைய நாளின் அவசியத் தேவையாகும்.

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சிங்காடிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x