

வாசிப்பு இயக்கம் என்பது 1996களில் இந்தியா முழுவதும் ஒலித்த சொல். தமிழ்நாட்டில் 1990களில் நடந்து வந்த முழு எழுத்தறிவு இயக்கமான அறிவொளி இயக்கத்தில் எண்ணும், எழுத்தையும் கற்றுக் கொண்டனர். புதிய கற்போர், அவர்களுக்கு வார்த்தைகளாக வாசிக்க, வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த இதே காலக்கட்டத்தில் பல்வேறு சிறு புத்தகங்களோடு சில மாவட்ட அறிவொளி இயக்கம் முயற்சித்தது.
அந்த நேரத்தில் மக்கள் வாசிப்பு இயக்கம் தமிழ்நாட்டிலும் தொடங்கப்பட்டது. லியோ டால் ஸ்டாய் போன்ற பெரும் எழுத்தாளர்களின் கதைகள் முதல் உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகள் வரை16 பக்கங்களில் சுருக்கி அழகுபட வடிவமைத்து மக்களிடம் வாசிக்கப் பட்டது. மந்தைகள் தொடங்கி அடுக்குமாடி குடியிருப்புகள், வங்கிகள், கல்லூரி வளாகங்கள் வரை வாசிப்பு இயக்கம் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கும் பழக்கத்தை இந்த இயக்கம் ஏற்படுத்தியது. பல்வேறு தலைப்புகளில் வந்த புத்தகங்கள் லட்சக்கணக்கில் அச்சிடப்பட்டு விற்பனையானது. தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் வகுப்பறைதோறும் இந்த வாசிப்பு இயக்கத்தை கொண்டு செல்ல முதல் கட்டமாக 53 சிறு புத்தகங்களோடு களமிறங்கியுள்ளது பள்ளிக் கல்வித்துறை. தொடர் வாசிப்பை வளப்படுத்த பலவகை வடிவங்கள் தேவைப்படுகிறது.
உரக்க வாசித்தல்: புதிய வாசிப்பாளர்களை உருவாக்குவதற்கு இந்த உரக்க வாசித்தல் என்ற வடிவம் முதன்மையானது. ஒருவர் புத்தகத்தை சுயவாசிப்பு செய்துவிட்டு அந்த புத்தகத்தை உரக்க வாசிக்கும் போது மற்றவர்கள் அதை கேட்பதன் மூலமாக அந்த புத்தகத்தை வாசிக்கிறார்கள்.
கூட்டு வாசிப்பு: ஒரு புத்தகத்தை ஒரு குழுவாக சேர்ந்து ஒவ்வொருவரும் சில பக்கங்களை பகிர்ந்து வாசிப்பது கூட்டுவாசிப்பு அல்லது குழு வாசிப்பு ஆகும். உரக்க வாசித்தலில் ஒருவர் மட்டுமே தொடர்ந்து வாசிக்கிறார். இந்த வடிவத்தில் பலரும் வாசிக்கி றார்கள். உரத்த வாசிப்பின் போது சில நிமிடத்தில் சிலர் கவனம் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. கூட்டு வாசிப்பில் பல குரல்கள் பக்கங்களை பகிர்ந்து வாசிப்பதால் முழுமையாக ஈர்க்க முடியும்.
கதையும் வாசிப்பும்: இந்த வடிவத்தில் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். ஒரு புத்தகத்தை ஒருவர் உரக்க வாசிப்பார். சில பக்கங்கள் வாசித்தபின் அதன் தொடர்ச்சியை மற்றொருவர் கதையாக தொடர்வார். இது கேட்பவர்களை கவனம் சிதறாமல் கேட்கத் தூண்டும்.
காட்சியும் வாசிப்பும்: வாசிக்கப் போகும் புத்தகத்திலி ருந்து சில பக்கங்கள் உரக்க வாசிக் கப்படும். அதன் தொடர்ச்சியாக சிலர் அதே புத்தகத்தில் உள்ள சம்பவங்களை காட்சியாக நடித்துக்காட்டுவார்கள். இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு வடிவம். இப்படி ஒரு முயற்சியை வகுப்பறைக்குள் தொடர்ந்து செய்யும் போது இன்னும் புதிய வடிவங்களை குழந்தைகளேகூட உருவாக்குவார்கள்.
முதலில் புத்தகத்தை தொடுவதற் கான ஆர்வத்தை ஏற்படுத்துவது, புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்ப்பது, படங்களை பார்த்து கதைகளை வாசிக்க முயற்சிப்பது, அதாவது வாசிப்பு இயக்கத்தின் வருகையை திருவிழாவாக கொண்டாடி வரவேற் பது, தொடர் வாசிப்புக்கான ஊக்கத்தை கொடுப்பது என விதவித மான வடிவங்களை தொடர்ந்து முயற்சிப்பது வாசிப்பு இயக்கத்தின் வெற்றிக்கு வழியாகும்.
சிறு புத்தகங்களில் இருந்து பெரும் இலக்கியங்களை கையில் எடுக்க திசை காட்ட வேண்டும். உள்ளூர் எழுத்தாளர்கள் சந்திப்பு, நூலகப்பயணம் போன்ற நிகழ்ச்சிகள் இன்னும் கூடுதல் சிறப்பானதாக இருக்கும்.
- கட்டுரையாளர் வாசிப்பு இயக்க முதன்மைக் கருத்தாளர், இயக்குனர், கலிலியோ அறிவியல் மையம், மதுரை.