Last Updated : 06 Nov, 2023 04:30 AM

 

Published : 06 Nov 2023 04:30 AM
Last Updated : 06 Nov 2023 04:30 AM

வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி...

இரவு உறங்கும் முன்பே எத்தனை மணிக்கு எழ வேண்டும், என்பதில் தொடங்குகிறது இன்றைய மாணவ இளம்பருவத்து சவால். கண் விழிக்கும் பொழுதே பல்வேறு இலக்குகளை நோக்கிய சிந்தனைகள் சுமையாகி, முன்னோக்கி தள்ளும்.

இயற்கையின் கொடை: அழகிய அதிகாலை ஈரப்பதத்தைத் தாங்கிய மெல்லிய காற்று மெதுவாகநடை பயின்று, தேகம் சிலிர்க்க வைக்கும். கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு பறவைகள் மரக் கிளைகளுக்குள் நேற்றைய கதையைப் பேசிதீர்த்துக் கொண்டிருக்கும். இயற்கையோடு இணைந்து நேற்றைய பாடப்பகுதிகளைப் புரட்டும் இனிமையான பொழுது அதிகாலை. "காலை எழுந்தவுடன் படிப்பு" என்கிறார் பாரதி.

பரிதியின் பார்வை பாரில் விழ ... உலகம் செழிக்கிறது. ஆனால், வெயில் என்பது இக்கால குழந்தைகளுக்கு அவ்வளவாக பிடிப்பதே இல்லை பள்ளியின் வழிபாட்டுக் கூட்டத்தில்கூட வெகுநேரம் வெயில் தாங்கி நிற்க முடியாது மயங்கி விழுகிற குழந்தைகளைத் தான் தற்போது காண முடிகிறது. மெலிந்த குழந்தைகளைக் காரணம் கேட்டால் வைட்டமின் டிகுறைபாடு என்கிறார்கள். சூரியக்குளியல் இப்போது உள்ள காலக்கட்டத்தில் எல்லா குழந்தைகளுக்கும் தேவைப்படுகிற அருமருந்து.

சூரிய வெளிச்சத்தில் சூடு பறக்க கை கால்களை இயக்கி விளையாடி, வியர்வைத் துளிகள் சிந்த சிந்த குழுவாக ஆர்ப்பரித்து, விளையாடும் விளையாட்டு தற்போது முகவரி இன்றி, வெயில் படாத இடத்தில் அமைதியாக, வீட்டுக்குள்ளேயே முடங்கி காட்சிப் பிம்பத்தையே உலகமாகவும், இணைய தள விளையாட்டுக்களையே கடவுளாகவும், திரையில் கண்டு கைதட்டி ரசித்து விட்டுப் போகும் மனோபாவத்தையும் கண்கூடாக காண முடிகிறது. மூன்று வயதில் இருந்தே பார்வைக் குறைபாட்டால் கண்ணாடி அணிய வேண்டிய சூழல்தான் நிலவுகிறது .

உணவும், உறக்கமும்: உண்ணும் உணவு சரிவிகித உணவாக இருப்பதில்லை. சரியான தூக்கமும் நிறைவான விளையாட்டும் குறைவில்லாத பொழுதுபோக்கும் சரிவிகித அளவில் இருத்தல் அவசியம். அவ்வாறு இருக்கும் போது அன்றாடம் ஏற்படக்கூடிய உடல் நலக் குறைவுகளை எளிமையாக எதிர்த்து புறம்தள்ள முடியும். மதிப்பெண்ணை மட்டுமே நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் பிள்ளைகளை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்யும்போதுதான் வெயிலின் அருமை புரியும். வெயிலோடு விளையாடாது, இக்கால குழந்தைகள் மதிப்பெண்ணோடு மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நடை பயிலுங்கள்: வெற்றுப் பாதங்களோடு நில மகளை சந்திப்பது குதிரை கொம்பாகி விட்டது. பதின்பருவ குழந்தைகள்கூட வெற்றுக்காலில் ஓடிச் செல்வதை தவிர்க்கின்றனர். தவிர்ப்பது என்பது உடல் ரீதியான பாதிப்பையே உண்டு பண்ணுகிறது. சற்று தொலைவு ஓடிய பிறகு கால் முழுக்க காயப்பட்டு கதறிஅழும் குழந்தைகளை பார்க்கும்போது அக்காலத்தில் வெறும் காலோடு பலமைல் தூரம் பள்ளிக்கு நடந்து சென்ற குழந்தைகளின் கால்நடை பயணம் நினைவில் வந்து செல்கிறது.

நாகரீகம் என்ற பெயரில் நடப்பதற்கும் உட்காருவதற்கும் சொல்லிக் கொடுக்கும் நாம் விளையாடுவதற்கான பயிற்சிகளை சிந்திப்பதே இல்லை. உணவிற்கும், படிப்பிக்கும், ஆடம்பரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற பெற்றோர் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் நட்பையும்மீட்டுக் கொடுக்கிற விளையாட்டுகளைக் கண்டு கொள்வதில்லை. விளையாட்டில் சாதனையாளர்களை மட்டுமே உருவாக்கி, ஊக்குவித்து கரை சேர்க்க முயலும் வர்த்தக உலகம் இது.

உற்சாக மருந்து: விளையாட்டின் அடிப்படை மகிழ்ச்சி மட்டுமே. மாலை முழுதும் விளையாட்டு என்பது போய், மாலை முழுதும் டியூஷன் வகுப்புகள் என்றாகிவிட்டது. உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை விளையாட்டு மட்டுமே. குழு உணர்வை வளர்த்தெடுக்கும் பயிற்சிப்பட்டறை விளையாட்டு மைதானமே. பிணிகளைப் போக்கி புத்துணர்வை மீட்டுருவாக்கும் கலைக்கூடம் விளையாட்டு. குளிரூட்டப்பட்ட அறையில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் போல அல்லாமல், ஆடி, ஓடிவிளையாட அனுமதிப்போம். வியர்வைசிந்த, சின்னச் சின்ன காயங்கள் பெற ஒத்துழைப்பு கொடுப்போம்.

குழந்தைகளை வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட வைத்து, விளையாடி மகிழ பழக்குவோம்.

- கட்டுரையாளர் ஆசிரியை எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி பிராட்டியூர், திருச்சி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x