

இந்த வருடம் சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருது பெற்ற வானம் பதிப்பகம் வெளியிட்டு எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை பற்றி. உங்கள் பார்வைக்கு...
நம்முடைய வரலாறு என்ன? அந்த வரலாற்றை நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? அந்த வரலாற்றை அறிந்து கொண்டால் அதன் வழியாக என்ன கிடைக்கப் போகிறது? இதை எல்லாம் படித்து நேரத்தை ஏன் விரயம் செய்ய வேண்டும்? இப்படியான கேள்விகள் இன்னும் பெரும்பாலானோரிடம் எழுந்துகொண்டேதான் இருக்கிறது. இந்தக்கேள்விகளுக்கான விடையாக ஆதனின் பொம்மை இருக்கிறது.
கீழடியில் இருக்கும் தன் மாமா வீட்டுக்கு வருகிறான் பாலு. கீழடி அவனுக்குப் பிடிக்கவில்லை. தன்னுடைய நண்பர்கள் கிரிக்கெட் இவற்றை விடுத்து மாமாவின் வீட்டில் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
மாமாவின் மகள் மது. அவள் ஒருபுத்தகப் பிரியை. பாலு பாட புத்தகத்தைதாண்டி வேறு படிப்பதில்லை. ஒரு நாள் மாமாவோடு தோட்டம் செல்கிறான். அங்கே ஒரு வித்தியாசமான பொம்மையைக் கண்டெடுக்கிறான். அப்போது ஆதனைச் சந்திக்கிறான். ஆதனோடு சேர்ந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலத்திற்குள் பயணிக்கிறான்.
அப்போது இருந்த மக்களின் வாழ்க்கை முறை, கல்வி, தொழில்,பண்பாடு, நாகரீகம், ஆடை அணிகலன்கள் இவை அனைத்தையும் அறிந்து கொள்கிறான். அப்போது குலத்தொழில், ஆண் பெண் வேறுபாடு, சாதிச் சண்டைகள் இல்லை. காடுகளிலும் மேடுகளிலும் அலைந்து திரிந்து வாழ்கிறார்கள்.
அவரவருக்கு எந்தத் தொழில் விருப்பமோ அதைச் செய்யலாம். ஊர் கூடி விளையாடினார்கள்.
தாயம், செக்கட்டான், சதுரங்கம், கிட்டிப்புல், மண்ணா மரமா? பல்லாங் குழி, காயா பழமா என்ற விளையாட்டுகளையும் அறிந்து கொள்கிறான் பாலு.சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்கள் வைகை நதிக்கரைக்கு மாறுவதற்கான காரணம் என்ன? என்பதையும் மதுரைஎன்ற மகத்தான மாநகரம் உருவான தையும் கண் முன் காட்சியாக விரிகிறது.
அப்போது உயர்ந்தவர், தாழ்ந்தவர்என்று எந்த வேறுபாடும் இல்லாததையும் ஆண் பெண் பேதங்கள் இல்லாததையும் கல்வி சுகாதாரம் மருத்துவம் எல்லோருக்கும் பொதுவாக இருந்தது பற்றியும் அறிந்து கொள்கிறான். நாம் ஆதியில் எங்கிருந்து வந்தோம் கருப்பு சிவப்பு வெள்ளை என்று இந்த நிறங்களுக்குள் ஏன் இவ்வளவு சண்டை நம் அனைவரின் மூதாதையரும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்கள்தான் என்பதை வாசிக்கும் போது வியப்பு வராமல் இல்லை.
பாலுவுக்கும் அவன் மாமவுக்குமான உரையாடலில் சாதியை பற்றியஇன்றைய சூழலைக் கூறுவதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. சுவாரசியமான மேஜிக்கல் ரியலிச கதை. தேடலை உருவாக்கும். வாசிப்பவர்களுக்குத் தீனி.
கொண்டு சேர்ப்போம் வரலாற்றை... கதையாக
எழுத்தாளர், கதைசொல்லி, ஈரோடு